தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் 300ஆவது பீடச் சபைக் கூட்டம்: டிஜிட்டல் மாற்றத்திற்கான இரு புதிய திட்டங்கள் அங்குரார்ப்பணம்!



எம்.வை. அமீர்-

உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனுக்கும் பீடச் சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்; பீடத்தின் சாதனைகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கவனம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் 300ஆவது பீடச் சபைக் கூட்டத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வும், டிஜிட்டல் மாற்றத்திற்கான இரண்டு புதிய திட்டங்களின் அங்குரார்ப்பணமும் 2026 நவம்பர் 04ஆம் திகதி புதன்கிழமை பீட வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றன.

“A Legacy of Decisions. A Journey of Excellence. A Future of Possibilities” (தீர்மானங்களின் மரபு, சிறப்பை நோக்கிய பயணம், சாத்தியங்கள் நிறைந்த எதிர்காலம்) என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, பீடத்தின் நீண்டகால கல்விசார் மற்றும் நிர்வாகப் பயணத்தை நினைவுகூருவதுடன், எதிர்கால நவீனமயமாக்கல் முயற்சிகளையும் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பதிவாளர் எம்.ஐ. நௌபர், பீடச் சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பமாக, பீடத்தின் கல்விசாரா உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் பீட வளாகத்திலுள்ள திணைக்களங்கள், விரிவுரை மண்டபங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மைப்படுத்தும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதேவேளை, பீடாதிபதி, திணைக்களத் தலைவர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள் மற்றும் உதவிப் பதிவாளர் ஆகியோரின் பங்களிப்புடன் தத்தமது அலுவலகங்களிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் இடம்பெற்றன.

தொடர்ந்து, பல்கலைக்கழக உபவேந்தருடன் பீடச் சபை உறுப்பினர்கள் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கே.எல்.எப். நுப்லாவின் கவிதை நிகழ்வு சபையினரின் கவனத்தை ஈர்த்ததுடன், பேராசிரியர் எஸ். குணபாலனின் பாடலும் நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, பீடத்தின் வரலாற்றுப் பயணம், கல்விசார் முன்னேற்றம், நிர்வாக அடைவுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விரிவான விளக்கவுரையொன்றை நிகழ்த்தினார்.

பீடம் இதுவரை கடந்து வந்த வளர்ச்சிப் பாதை, அதன் கல்விசார் சமூகத்தின் அர்ப்பணிப்பு, அடைந்துள்ள சாதனைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய புதிய முயற்சிகள் தொடர்பில் அவர் இதன்போது எடுத்துரைத்தார். நவீன கல்விச் சூழலுக்கு ஏற்ப பீடத்தின் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக, முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய இரண்டு புதிய திட்டங்கள் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

அவற்றில்,

1. Digital Transformation System – டிஜிட்டல் மாற்றமைப்பு முறைமை.

2. Online Journal Access – இணையவழி ஆய்வுச் சஞ்சிகைகளை அணுகும் வசதி.

ஆகிய இரு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

பல்கலைக்கழகக் கல்வி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைப்பதற்கும், ஆய்வாளர்கள் மற்றும் கல்விசார் சமூகத்தினர் சர்வதேச ஆய்வுச் சஞ்சிகைகளை இணையவழியில் அணுகுவதற்கும் இத்திட்டங்கள் முக்கிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி, நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதன் மூலம் பீடத்தின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான முக்கியமான முன்னெடுப்பாகவும் இத்திட்டங்கள் அமைகின்றன.

புதிய டிஜிட்டல் திட்டங்களின் அங்குரார்ப்பணத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனுக்கும் முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் பீடச் சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான நட்புறவுச் சந்திப்பும் விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றன.

பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் பீடத்தின் கல்விசார் சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இச்சந்திப்பு, பீடத்தின் தற்போதைய நிலைமை, அடைவுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி எதிர்பார்ப்புகள் தொடர்பில் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.

இதன்போது, பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் பீடங்களின் பங்களிப்பு, கல்விசார் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கல்வி, ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்களின் முக்கியத்துவம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து இடம்பெற்ற கேக் வெட்டும் நிகழ்வு, முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் 300ஆவது பீடச் சபைக் கூட்டத்தை நினைவுகூரும் அடையாள நிகழ்வாக அமைந்தது.

இங்கு 300ஆவது கூட்டத்தை நினைவுபடுத்தும் விதத்தில் நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

விசேட நிகழ்வுகளைத் தொடர்ந்து, முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் 300ஆவது பீடச் சபைக் கூட்டம் நடைபெற்றது.

பீடத்தின் கல்வி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய முக்கிய விடயங்களை ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் பீடச் சபையின் 300ஆவது கூட்டத்தை எட்டியுள்ளமை, பீடத்தின் தொடர்ச்சியான நிறுவன வளர்ச்சியையும் நீண்டகால செயற்பாட்டு அனுபவத்தையும் எடுத்துக்காட்டும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

தீர்மானங்களின் மரபைப் பேணிக்கொண்டு, கல்விசார் சிறப்பு, நவீன தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி வாய்ப்புகளை நோக்கி முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடம் முன்னேறுவதற்கான உறுதிப்பாட்டை இந்நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.























































































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :