எம்.வை. அமீர்-
இலங்கையின் கடலோர மீன்பிடி உற்பத்தி கடந்த பல தசாப்தங்களாகக் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்து வருவதற்கு கரையோர நீர்நிலைகளில் அதிகரித்து வரும் மாசுபாடு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய கிழக்குப் பல்கலைக்கழக விவசாயப் பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் எம்.எஸ். முகம்மட் நபீஸ், சதுப்புநிலங்கள், கழிமுகங்கள் மற்றும் மாங்குரோவ் காடுகளைப் பாதுகாப்பதுடன், இயற்கையை அடிப்படையாகக் கொண்ட நடைமுறையியால் தீர்வுகளை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும் என வலியுறுத்தியுள்ளார்.
1960ஆம் ஆண்டுகளில் இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் சுமார் 96 சதவீதப் பங்களிப்பை வழங்கிய கடலோர மீன்பிடித் துறையின் பங்கு தற்போது சுமார் 50 சதவீதமாகக் குறைந்துள்ளமை, நாட்டின் நீர்வளச் சூழல் எதிர்கொண்டுள்ள பாதிப்புகளின் தீவிரத்தை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச உயிர்க்கோளக் காப்பகங்கள் தினத்தை முன்னிட்டு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீட உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பத் திணைக்களமும் இலங்கை தேசிய யுனெஸ்கோ ஆணைக்குழுவும் இணைந்து 2026 நவம்பர் 3ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கில் பிரதான உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
'Living Landscapes: Biosystems Solutions for Resilient Biosphere Reserves' (உயிரோட்டமுள்ள நிலப்பரப்புகள்: மீள்திறன் கொண்ட உயிர்க்கோளக் காப்பகங்களுக்கான உயிரியல் முறைமைகள் தீர்வுகள்) என்ற தொனிப்பொருளில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.
தனது உரையில் சதுப்புநிலங்கள், கழிமுகங்கள் மற்றும் மாங்குரோவ் காடுகளின் சூழலியல் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்த பேராசிரியர் முகம்மட் நபீஸ், இவை வெறுமனே நீர்நிலைகளாகவோ தாவரங்கள் நிறைந்த பகுதிகளாகவோ கருதப்படக்கூடாது என்றும், இயற்கையின் நீர் சுத்திகரிப்பு முறைமைகளாகச் செயற்படும் உயிருள்ள வடிகட்டிகள் என்றும் விளக்கினார்.
சதுப்புநிலங்கள் மற்றும் கழிமுகங்கள் ஊடாக நீர் மெதுவாகப் பாயும்போது அதன் வேகம் குறைவடைவதுடன், நீரில் கலந்திருக்கும் மாசுப்பொருட்கள் வண்டல் படிவுகளாகத் தேங்குகின்றன. இதன் மூலம் நீரின் தரத்தை இயற்கையாக மேம்படுத்துவதில் இச்சூழல் முறைமைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
எனவே, சதுப்புநிலங்களை அழிப்பதும், கழிமுகங்களை மாசுபடுத்துவதும் இயற்கையின் இந்தச் சுயசுத்திகரிப்பு ஆற்றலைச் சீர்குலைப்பதுடன், நீர்வாழ் உயிரினங்களின் இயற்கையான வாழ்விடங்களையும் அழித்து வருகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் கடலோர மீன்பிடித் துறையின் வீழ்ச்சி தொடர்பாகத் தரவுகளுடன் விளக்கமளித்த அவர், விவசாய நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், நகரமயமாக்கல், முறையற்ற கழிவு முகாமைத்துவம் மற்றும் கழிவுகளை நேரடியாக நீர்நிலைகளில் கொட்டுதல் போன்ற மனிதச் செயற்பாடுகள் நீரின் தரத்தைப் பெரிதும் பாதித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இத்தகைய மாசுபாடுகள் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களைச் சீர்குலைப்பதுடன், மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதன் நேரடி விளைவாக மீன்பிடி வளங்களும் உற்பத்தித் திறனும் பாதிக்கப்படுகின்றன.
இது வெறுமனே சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினை மாத்திரமல்ல. கடலோரப் பகுதிகளில் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூக நலன்களுடனும் நெருங்கிய தொடர்புடைய முக்கியமான பிரச்சினையாகும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
நீர்நிலைகளில் ஏற்பட்டுவரும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சூழல் முறைமைகளை மீளுருவாக்குவதற்கும் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட பொறியியல் தீர்வுகளைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பேராசிரியர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, செயற்கை மிதக்கும் சதுப்புநிலங்களை (Floating Treatment Wetlands) உருவாக்குதல், மாங்குரோவ் அல்லது கண்டல் தாவரங்களை மீள்நடுகை செய்தல், உயிரியல் வடிப்பான்களை (Biofilters) அமைத்தல் போன்ற நடைமுறைத் தீர்வுகள் மூலம் மாசடைந்த நீர்நிலைகளின் தரத்தை மேம்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய தீர்வுகள் இயற்கையின் சுயசுத்திகரிப்பு ஆற்றலைப் பயன்படுத்தி நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்ட சூழல் முறைமைகளை மீளமைப்பதற்கும் உதவக்கூடியவை.
சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடும்போது இயற்கையை மேலும் பாதிக்கும் அணுகுமுறைகளுக்குப் பதிலாக, இயற்கையுடன் இணைந்து செயற்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே அவரது உரையின் முக்கிய செய்தியாக அமைந்தது.
உயிரியல் பல்வகைமையைப் பாதுகாப்பது என்பது காடுகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாப்பதுடன் மாத்திரம் முடிவடைவதில்லை. அது மனிதர்களின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு, மீன்பிடித் துறையின் நிலைபேறான வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் சமூகங்களின் ஆற்றல் ஆகியவற்றுடனும் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது.
எனவே, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பொறுப்பாக மாத்திரம் கருதப்படாமல், அரச நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், உள்ளூர்ச் சமூகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய பொதுப்பொறுப்பாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் வரவேற்புரையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பத் திணைக்களத் தலைவருமான பேராசிரியர் ஏ.டி.என்.ரீ. குமார நிகழ்த்தினார்.
தனது உரையில் சர்வதேச உயிர்க்கோளக் காப்பகங்கள் தினத்தின் முக்கியத்துவம், உயிர்க்கோளக் காப்பகங்களின் நோக்கம் மற்றும் சமகால உலகம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3ஆம் திகதி சர்வதேச உயிர்க்கோளக் காப்பகங்கள் தினம் அனுஷ்டிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், 2021ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பொதுமாநாட்டில் இத்தினம் ஸ்தாபிக்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
உயிர்க்கோளக் காப்பகங்கள் என்பவை காடுகள், வனவிலங்குகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், உயிரியல் பல்வகைமைப் பாதுகாப்பு, நிலைபேறான அபிவிருத்தி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உள்ளூர்ச் சமூகங்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முக்கியமான சூழல் முறைமைகளாக அவை விளங்குகின்றன என்றார்.
இயற்கையைப் பாதுகாப்பதற்கும் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவதே உயிர்க்கோளக் காப்பகங்களின் அடிப்படை நோக்கமாகும் என்றும் விளக்கினார்.
காலநிலை மாற்றம், உயிரியல் பல்வகைமையின் வீழ்ச்சி, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நிலச் சீரழிவு போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களைப் பயன்படுத்தி நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்காலத்தின் அறிவுசார் வளங்களாக மாத்திரமன்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாட்டாளர்களாகவும் உருவாக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வெறும் பேச்சளவில் மாத்திரம் இருக்கக்கூடாது; அது செயலில் இறங்குவதாகும்” என்ற கருத்தை வலியுறுத்திய அவர், இயற்கையைப் பாதுகாப்பதற்கான அறிவியல் சிந்தனைகள் நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி ஆர்.கே. அஹமட் றிபாய் காரியப்பர் சார்பில் உரையாற்றிய தகவல் தொழில்நுட்பத் துறையின் துறைத்தலைவர் எம்.ஜெ. அகமட் சபானி, பொருளாதார வளர்ச்சி, நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றுடன் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் சம அளவிலான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
உலகம் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன; நகரங்கள் விரிவாக்கப்படுகின்றன; பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், இவ்வபிவிருத்திகளுக்கு மத்தியில் மனித வாழ்க்கையைத் தாங்கி நிற்கும் இயற்கைச் சூழல் முறைமைகள் முறையாகப் பாதுகாக்கப்படுகின்றனவா என்பது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது என்றார்.
சுத்தமான காற்று, தூய்மையான நீர், வளமான மண் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் ஆகியவை மனித வாழ்வின் அடிப்படை ஆதாரங்களாகும். வறட்சி ஏற்படும்போது நீரின் அவசியத்தையும், வெப்பநிலை அதிகரிக்கும்போது மரங்களின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்வதை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், இயற்கை வளங்களின் உண்மையான பெறுமதியை அவை பற்றாக்குறையாக மாறுவதற்கு முன்னரே உணர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கங்கள் அல்லது சுற்றுச்சூழல் அமைப்புகளின் பொறுப்பு மாத்திரமல்ல; ஒவ்வொரு தனிநபரும் நிறுவனமும் ஏற்க வேண்டிய பொறுப்பாகும் எனக் குறிப்பிட்ட அவர், அன்றாட வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய எளிய நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
அலுவலகங்கள் மற்றும் வகுப்பறைகளில் தேவையற்ற மின்சார உபகரணங்களை அணைத்தல், நீர் நுகர்வைக் குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சிறிய செயற்பாடுகள்கூட சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும் என்றார்.
எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேலதிகப் பொறுப்பாகக் கருதாமல், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் அன்றாடச் செயற்பாடுகளின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொழில்நுட்பத்தின் பயன்பாடு உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது. சுற்றுச்சூழல் நிலைபேற்றுத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்காகப் புவியியல் தகவல் முறைமைகள் (GIS) மூலம் காடுகள் மற்றும் கரையோரச் சூழல் முறைமைகளைக் கண்காணித்தல், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உயிரியல் பல்வகைமையின் நிலைமைகளைக் கண்காணித்தல், நவீன நீர்ப்பாசன முறைகள் ஊடாக நீர்வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் போன்ற தொழில்நுட்ப அணுகுமுறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் பயனுள்ள கருவிகளாக மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் கல்வித் தகைமைகளைப் பெற்றுக்கொள்வதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், சமூகத்தில் காணப்படும் உண்மையான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளை உருவாக்கும் புத்தாக்கவாதிகளாக உருவாக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வள முகாமைத்துவம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி போன்ற துறைகளில் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி புதிய தீர்வுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொழில்நுட்ப அறிவும் சமூகப் பொறுப்புணர்வும் ஒன்றிணையும்போதே மனித சமூகத்திற்கும் இயற்கைக்கும் நன்மை பயக்கும் நிலைபேறான அபிவிருத்தியை அடைய முடியும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
கருத்தரங்கைத் தொடர்ந்து உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பட்டதாரி மாணவர்களுக்காக 'மாங்குரோவ் காடுகள் மற்றும் புவியியல் தகவல் முறைமை (GIS) மூலம் கரையோரப் பாதுகாப்பை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் தொழில்நுட்பப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
அத்துடன், 'உயிர்க்கோளக் காப்பகங்கள்: உயிரியல் பல்வகைமைப் பாதுகாப்பு, நிலைபேறான வாழ்வாதாரங்கள் மற்றும் புத்தாக்கங்களை இணைத்தல்' என்ற கருப்பொருளில் சுவரொட்டிக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்களின் ஆய்வுகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான புத்தாக்கச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் தளமாக இக்கண்காட்சி அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, மல்வத்தையில் அமைந்துள்ள AgroTech Park இல் 'Green Earth, Thriving Bees: A Journey Towards Biosphere Restoration' என்ற தொனிப்பொருளில் கள அடிப்படையிலான செயற்பாடும் இடம்பெற்றது.
இதன்போது தேனீக்களின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் அவற்றின் பங்களிப்பு, உயிர்க்கோள மீளுருவாக்கம் மற்றும் பசுமையான சூழலைப் பாதுகாப்பதில் சமூகத்தின் பங்கு தொடர்பான நடைமுறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ்.எம். ஜுனைடீன் அவர்களின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், நூலகர் எம்.எம். றிபாவுத்தீன், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது எதிர்காலச் சந்ததியினருக்கான பொறுப்பு மட்டுமன்றி, இன்றைய சமூகத்தின் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்கான அடிப்படைத் தேவையாகும் என்பதை வலியுறுத்திய இந்நிகழ்வு, அறிவியல் அறிவையும் தொழில்நுட்பத்தையும் சமூக நலனுக்காகப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment