20 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! சாய்ந்தமருது வொலிவேரியனில் ரூ.30 மில்லியனில் உள்ளக வீதிகள் அபிவிருத்தி ஆரம்பம்!



750 மீட்டர் நீளமான வீதிகள் புனரமைப்பு; இவ்வருட இறுதிக்குள் அனைத்துப் பாதைகளையும் சீரமைக்க நடவடிக்கை – பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா உறுதி

எம்.வை. அமீர்-
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம மக்களின் சுமார் 20 ஆண்டுகால வீதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், 30 மில்லியன் ரூபாய் செலவில் 750 மீட்டர் நீளமான உள்ளக வீதிகளைப் புனரமைக்கும் அபிவிருத்திப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

நீண்டகாலமாகச் சீரற்ற வீதிகளால் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொண்டுவந்த மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வொலிவேரியன் கிராமத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, வொலிவேரியன் கிராமத்தின் வீதிப் பிரச்சினை ஒரே நாளில் உருவானதல்ல என்றும், சுமார் இரண்டு தசாப்தங்களாகத் தீர்வின்றித் தொடர்ந்துவந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்றும் சுட்டிக்காட்டினார்.

வீதிகள் முறையாக அமைக்கப்படாமலும், ஏற்கனவே காணப்பட்ட பாதைகள் சீரற்ற நிலையிலும் இருந்ததால், அப்பகுதி மக்கள் மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினரும் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, பாடசாலை மாணவர்கள் பயணிப்பதிலும், நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதிலும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்துவதிலும் இவ்வீதிகளின் மோசமான நிலை பெரும் தடையாக இருந்ததாகத் தெரிவித்தார்.

மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசென்று, மாவட்ட அபிவிருத்தி மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

வொலிவேரியன் கிராமத்தின் ஆறாம் குறுக்குத் தெருவைக் கொங்கிரீட் வீதியாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாம் குறுக்குத் தெருவின் மோசமான நிலையையும் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாக அவர் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, ஐந்தாம் குறுக்குத் தெருவை மாத்திரம் அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த நிதி ஒதுக்கீட்டை விரிவுபடுத்தி, கிராமத்தின் ஏனைய குறுக்கு வீதிகளையும் இணைத்து மொத்தம் 750 மீட்டர் நீளமான வீதிகளைப் புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வருட இறுதிக்குள் வொலிவேரியன் கிராமத்தில் காணப்படும் அனைத்து வீதிகளையும் புனரமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா உறுதியளித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இப்பகுதியில் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதியைச் சீரமைப்பதற்காக 4 மில்லியன் ரூபாயும், வொலிவேரியன் பிரதேச வீதி மேம்பாட்டுக்காக 30 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கல்யாண வீதி, அகமட் வீதி, ஒஸ்மன் வீதி, தண்டையல் வீதி மற்றும் சாஹிரா கல்லூரி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளைத் தரமான கார்பற் வீதிகளாக மாற்றியமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கல்முனை சாஹிரா கல்லூரிக்கு அருகிலுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், மூன்று பெரிய நீர்வடிகால் குழாய் வழிகள் அமைக்கப்பட்டு, நிலத்திற்குக் கீழான குழாய்கள் கடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மழைநீர் வெளியேற்றத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை பகுதியில் நிலவும் உயர் அழுத்த மின்சாரக் கோட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண 14 மில்லியன் ரூபாய் செலவில் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சாய்ந்தமருது கடற்கரைப் பிரதேசத்தைப் பொலிவுபடுத்துவதற்காக 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், சாய்ந்தமருது வைத்தியசாலை வீதிப் பாலத்தை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வுப் பணிகளில் 4.6 மில்லியன் ரூபாய் செலவில் போரோஹோல் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நேரடி நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொண்டு, வைத்தியசாலைக்கான கட்டடத்தை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்கு அப்பால், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 27 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில், பிரஜாசக்தி குழுக்களின் ஊடாக 17 குறிச்சிகளிலும் அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கு 32 தையல் இயந்திரங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், மீனவ வியாபாரிகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு குளிர்சாதன வசதிகளைக் கொண்ட சேமிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டில் 17 புதிய வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய திட்டங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதுடன், சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி குடும்பங்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கும் உதவும் என அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்துப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர், கல்முனை மற்றும் காரைதீவு பிரதேசங்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, மாநகர மற்றும் பிரதேச சபைகளின் ஒருங்கிணைப்புடன் விரிவான நகர அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் கௌரவமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவது அவசியமானது என்றும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதுடன் சமூக நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் தொடர்ந்து செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அபிவிருத்தி தொடர்பாக மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் சில அரசியல் தரப்பினர் போலியான பரப்புரைகளையும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் முன்வைப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், மக்கள் கடந்தகால அரசியல் அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, உண்மையான மக்கள் நலச் செயற்பாடுகளை மதிப்பீடு செய்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை பிராந்திய பொறியியலாளர் இசட்.ஏ.எம். அஷ்மிர், அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல்வேறு வீதிப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

வொலிவேரியன் கிராமத்தில் ஆரம்பத்தில் ஐந்தாம் குறுக்குத் தெருவை மாத்திரம் அபிவிருத்தி செய்வதற்கே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாகவும், பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் தலையீடு மற்றும் முயற்சியினால் ஏனைய குறுக்கு வீதிகளையும் இணைத்து 750 மீட்டர் நீளமான வீதிகளைப் புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

இப்பணிக்காக 30 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நிர்மாணப் பணிகளைத் தரமாகவும் விரைவாகவும் நிறைவு செய்வதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். பணிகளின்போது சில வீதிகள் தற்காலிகமாக மூடப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால், பொதுமக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பரஹான் உரையாற்றுகையில், வொலிவேரியன் கிராம மக்கள் சுமார் 20 ஆண்டுகளாகத் தங்களது அடிப்படை வீதித் தேவைக்காகக் காத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

கடந்தகாலங்களில் பல்வேறு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தபோதிலும், இப்பகுதி மக்களின் வீதிப் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் தொடர்ச்சியான முயற்சியினால் இப்போது இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இது சாதாரண அடிக்கல் நாட்டும் நிகழ்வாக மட்டும் பார்க்கப்படக்கூடாது என்றும், நீண்டகாலமாக அடிப்படை வசதியின்றித் தவித்த மக்களின் கோரிக்கைக்கு விடை கிடைக்கும் முக்கியமான நிகழ்வாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கு வீதி வசதி இன்றியமையாதது எனவும், கிராமிய மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் இத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை பிராந்திய பொறியியலாளர் இசட்.ஏ.எம். அஷ்மிர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பரஹான், பிரஜாசக்தி தவிசாளர்கள், உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சுமார் 30 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் இவ்வீதிப் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் பட்சத்தில், வொலிவேரியன் கிராம மக்களின் அன்றாடப் போக்குவரத்து இலகுவடைவதுடன், மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பான பயணத்துக்கும் உதவியாக அமையும். அதேவேளை, கிராமத்தின் பொருளாதாரச் செயற்பாடுகள், சமூகத் தொடர்புகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்வாதார மேம்பாட்டுக்கும் இத்திட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :