எம்.வை. அமீர் –
சாய்ந்தமருது மாளிகைக்காடு மொஹிதீன் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாகத்தை முறையாக முன்னெடுப்பதற்கும், எதிர்கால நம்பிக்கையாளர்கள் தெரிவை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதற்கும் புதிய 11 பேர் கொண்ட விசேட நம்பிக்கையாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் வக்பு சபையினால் வழங்கப்பட்ட WB/BP/47/2026 இலக்கமும், 2026.09.09 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் அடிப்படையிலும், குறித்த விசேட நம்பிக்கையாளர்கள் 2026.09.22 முதல் 2026.12.21 வரை செயற்படும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, புதிய விசேட நம்பிக்கையாளர்கள் கடந்த 2026.10.05 ஆம் திகதி அஸர் தொழுகையைத் தொடர்ந்து, முன்னாள் விசேட நம்பிக்கையாளர்களிடமிருந்து பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்புக்களை சாய்ந்தமருது பிரதேச கலாசார உத்தியோகத்தர் ரிஃபாஜி அவர்களின் முன்னிலையில் உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டனர்.
புதிய விசேட நம்பிக்கையாளர்களுக்கு வக்பு சபையினால் வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்புகளில், பள்ளிவாசலுக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்கள், வருமானங்கள், செலவுகள் மற்றும் ஏனைய நிர்வாக விடயங்களை உள்ளடக்கிய முறையான ஆவணத் தொகுப்பு மற்றும் பட்டியலைத் தயாரித்தல் முக்கியமானதாகும்.
அத்துடன், பள்ளிவாசலின் எதிர்கால நம்பிக்கையாளர் தெரிவு வெளிப்படைத்தன்மையுடனும் யாப்பு விதிகளுக்கு அமைவாகவும் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதும் புதிய குழுவின் பிரதான பொறுப்பாகும்.
இதற்கமைய, குடி மற்றும் மஹல்லா பள்ளிவாசல்களுடன் தொடர்புடைய மரைக்காயர் தெரிவு உள்ளிட்ட யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளின் அடிப்படையில் எதிர்கால நம்பிக்கையாளர் தெரிவு முன்னெடுக்கப்படவுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 15 குடிகளிலிருந்து 62 குடி மரைக்காயர்களும், மஹல்லா பள்ளிவாசல்களிலிருந்து தலா இருவர் வீதமும், ஜாமியத்துல் உலமா சபை மற்றும் துறைசார் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுமாக மொத்தம் 99 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களிலிருந்து 25 பேருக்கு மேற்படாத வகையில் நம்பிக்கையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களிலிருந்து பள்ளிவாசலுக்கான நிர்வாகம் அமைக்கப்படும்.
இந்த நடைமுறையைச் சீராக முன்னெடுக்கும் வகையில் புதிய விசேட நம்பிக்கையாளர்களினால் நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தலைவராக முன்னாள் அமைச்சின் மேலதிக செயலாளரும் ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரியுமான ஏ. எல். எம். சலீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதி தலைவராக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கரும், உப தலைவராக அம்பாறை மாவட்ட பொறியியலாளர் ஏ. சாஹிரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
செயலாளராக ஓய்வுபெற்ற ஆசிரியர் ஐ. எல். குத்தூஸும், உப செயலாளர்களாக சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதம முகாமையாளர் ஏ. சி. மொஹமதும், முன்னாள் தொழிற்பயிற்சி நிலைய விரிவுரையாளர் எம். எம். உதுமலெப்பேயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, பொருளாளராக முன்னாள் கிழக்கு மாகாண கணக்காய்வு அத்தியட்சகர் எச். எம். எம். ரஷீத்தும், உதவி பொருளாளராக பிரபல வர்த்தகர் எம். நிசாரும், கணக்காய்வாளராக முன்னாள் வங்கி முகாமையாளர் எம். பி. ஆதம்பாவாவும், சட்ட ஆலோசகராக எம். ஐ. எச். ஷாபியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, மொஹிதீன் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாகம் மற்றும் பரிபாலன நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கென தனியான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் செயலாளர் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளதுடன், முன்னாள் நீர்ப்பாசன பொறியியலாளர் அஜீஸ் உள்ளிட்டவர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
வக்பு சபையினால் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றும் நோக்கில், கால அட்டவணையுடன் கூடிய செயற்திட்ட அறிக்கை (Action Plan) ஒன்றும் தயாரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, பள்ளிவாசலின் சொத்துக்கள், வருமானம், செலவுகள், ஆவணங்கள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் எதிர்கால நம்பிக்கையாளர் தெரிவு உள்ளிட்ட விடயங்கள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், தேவையான விடயங்களை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடனான சந்திப்புக்கள் மற்றும் குறிப்பிட்ட நோக்கங்களுக்கான குழு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வக்பு சபையினால் பணிக்கப்பட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்து, யாப்பு மற்றும் உரிய நடைமுறைகளுக்கு அமைவாக தெரிவு செய்யப்படும் புதிய நம்பிக்கையாளர் சபையிடம் பள்ளிவாசலின் நிர்வாகப் பொறுப்புக்களை ஒப்படைப்பதே புதிய விசேட நம்பிக்கையாளர்களின் பிரதான நோக்கமாகும்.
இதற்காக சாய்ந்தமருது மாளிகைக்காடு மொஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுடன் தொடர்புடைய பொதுமக்கள், மஹல்லா பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து தரப்பினரினதும் முழுமையான ஒத்துழைப்பையும் புதிய விசேட நம்பிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் யாப்பு விதிகளுக்கு அமைவான நிர்வாகத்தை உறுதிப்படுத்தி, பள்ளிவாசலின் எதிர்கால நிர்வாகத்தை சீரான முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment