எம்.வை. அமீர் –
இலங்கை–மலேசிய உயர்கல்வி மற்றும் கல்விசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மலேசியாவின் Universiti Sultan Zainal Abidin (UniSZA) பல்கலைக்கழகத்தின் Faculty of Contemporary Islamic Studies (FKI) சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நூர் சகீனா பிந்தி அப் அசீஸ் நேற்று (07) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விஜயம், இரு உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையிலான கல்வி, ஆய்வு மற்றும் அறிவுப் பரிமாற்றத் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கான முக்கிய சந்தர்ப்பமாக அமைந்தது.
விஜயத்தின் போது, கலாநிதி நூர் சகீனா பிந்தி அப் அசீஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ்.எம். ஜுனைடீன் அவர்களை உபவேந்தர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பில் இஸ்லாமிய கற்கைகள், அரபுமொழிக் கல்வி, ஆய்வு, கல்வியாளர் மற்றும் மாணவர் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் இரு பல்கலைக்கழகங்களுக்கிடையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய கல்விசார் ஒத்துழைப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல், இஸ்லாமிய கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.எம்.எம். நபீஸ், அரபுமொழித் துறைத் தலைவர் கலாநிதி ஏ.எம். றாசிக், சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் கலாநிதி யூ.எல். செய்னுடீன், கலாநிதி எம்.சி.எஸ். சதீபா மற்றும் உதவிப் பதிவாளர் ஆர். பாத்திமா றஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீட கல்விசார் உத்தியோகத்தர்களுடன் Academic Interaction நிகழ்வு இடம்பெற்றது. இதில் இரு பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்படும் கல்வி மற்றும் ஆய்வுப் பணிகள், சமகால இஸ்லாமியக் கற்கைகளின் வளர்ச்சிப் போக்குகள் மற்றும் எதிர்கால இணைந்த செயற்பாடுகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
மேலும், பீட மாணவர்களுக்காக Guest Lecture / Interactive Session ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் மாணவர்கள் மலேசிய உயர்கல்விச் சூழல், சர்வதேச மட்டத்திலான இஸ்லாமியக் கல்வி மற்றும் சமகால ஆய்வுத் துறைகளில் உருவாகி வரும் வாய்ப்புகள் தொடர்பில் நேரடியாக அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தைப் பெற்றனர்.
இவ்விஜயம் எதிர்காலத்தில் Academic Collaboration, Research Networking, Knowledge Exchange, Guest Lectures மற்றும் மாணவர்–கல்வியாளர் பரிமாற்ற நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கல்வி என்பது அறிவைப் பகிர்வதுடன் மட்டுப்படாமல், நாடுகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் நீடித்த உறவுகளை உருவாக்கும் பாலமாக அமைய வேண்டும் என்ற நோக்கில், இத்தகைய சர்வதேச கல்விசார் பரிமாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இதனடிப்படையில், கலாநிதி நூர் சகீனா பிந்தி அப் அசீஸ் அவர்களின் தென்கிழக்குப் பல்கலைக்கழக விஜயம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் UniSZA ஆகியவற்றுக்கிடையிலான கல்வி, ஆய்வு மற்றும் அறிவுப் பரிமாற்ற உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான ஒரு படியாக அமைந்தது.

0 comments :
Post a Comment