அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் குடும்பப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது வாழ்வாதாரத்தையும் தொழில்சார் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் பல்கலைக்கழக ஊழியர்கள் மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகப் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று (25) அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் அலுவலகச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.எம். அகமட் முனாஸ் மற்றும் நிறைவேற்று தர உத்தியோகத்தர் சங்கத் தலைவர் ஏ.ஆர்.எம். சுல்பி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் தமது வழமையான பணிகளைப் புறக்கணித்து பங்கேற்றனர்.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வெட்டிக் குறைக்கப்பட்ட சலுகைகளை மீள வழங்குதல், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மாதச் சம்பளம் கிடைத்தாலும் மாத இறுதிவரை குடும்பத்தை நடத்த முடியாத நிலை, கடன் சுமைகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருளாதார நெருக்கடிகள் ஊழியர்களின் வாழ்க்கையைப் பாதித்து வருகின்றன.
இந்நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகளும் வெட்டிக் குறைக்கப்படுவது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாகத் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
“ஊழியர்கள் கேட்பது ஆடம்பர வாழ்க்கையல்ல; தமது குடும்பத்துடன் கண்ணியமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான நியாயமான உரிமைகளையே!” என்பதே அவர்களின் போராட்டத்தின் அடிப்படை உணர்வாக இருந்தது.
கடந்த நவம்பர் 22 ஆம் திகதி நடைபெற்ற பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் கூட்டத்தில், அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்குத் திருப்திகரமான பதிலை வழங்காத நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, டிசம்பர் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக, டிசம்பர் 01 ஆம் திகதி உயர்கல்வி அமைச்சின் செலவினத் தலைப்பு தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகத் தொழிற்சங்க உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்து மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதியிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தைக் கையளித்தல், பல்கலைக்கழகங்களுக்கு அருகிலுள்ள பிரதான நகரங்களில் எதிர்ப்புச் சுவரொட்டிகளைக் காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு பல்கலைக்கழகம் என்பது விரிவுரையாளர்களையும் மாணவர்களையும் மட்டுமே கொண்ட அமைப்பல்ல. நிர்வாகம், பரீட்சைகள், நூலகம், நிதி முகாமைத்துவம், தொழில்நுட்பம், ஆய்வகங்கள் மற்றும் மாணவர் சேவைகள் என அதன் ஒவ்வொரு செயற்பாட்டின் பின்னணியிலும் ஊழியர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும் உள்ளன.
அத்தகைய முக்கியமான பங்களிப்பை வழங்கும் ஊழியர்களின் நியாயமான தொழில்சார் கோரிக்கைகள் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருப்பது கல்விச் சமூகத்தினரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது அவர்களின் குடும்ப நலனுக்கு மட்டுமன்றி, நாட்டின் உயர்கல்விக் கட்டமைப்பின் சீரான இயக்கத்திற்கும் அவசியமானதாகும்.
இந்நிலையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, டிசம்பர் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நாடளாவிய வேலைநிறுத்தம் உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஊழியர்களின் குடும்பங்களில் நிம்மதி மலரவும், பல்கலைக்கழகங்களில் இயல்பு நிலை தொடரவும், வெட்டப்பட்ட சலுகைகளை மீள வழங்கி, நீண்டகால சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதுடன், தொழிற்சங்கங்களுடன் அரசாங்கம் உடனடிப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.
இது வெறுமனே சம்பளத்திற்கான போராட்டமல்ல; உழைப்புக்கான மதிப்பு, குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில்சார் உரிமைகளுக்கான போராட்டம் என்பதே பல்கலைக்கழக ஊழியர்களின் நிலைப்பாடாகும்.

0 comments :
Post a Comment