அறிஞர் சித்தி லெப்பை முஸ்லிம் தேசியத்தின் தந்தை எனப்படுவது சரியா?

முகம்மது காசிம் சித்திலெப்பை மரைக்காயர், ஜூன் 11, 1838 ல் கண்டியில் பிறந்து - பெப்ரவரி 5, 1898 ல் வபாத்தானார்கள். அவரது இயற்பெயர் முகம்மது காசிம்.
இலங்கையில் முஸ்லிம்களைக் குறிப்பாகக் கல்வித்துறையில் விழிப்புணர்ச்சியடையச் செய்ய அரும்பாடுபட்ட எழுத்தாளர்.

நவீன உரை நடை இலக்கியத்தில் முன்னோடிப் படைப்பாளிகளில் முக்கியமானவராவார். இவர் சட்ட வல்லுனரும், பத்திரிகையாளரும், கல்வியாளரும், சமூக சேவையாளரும் ஆவார்

இவர் 1885 இல் எழுதிய அசன்பே சரித்திரம் தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலுமாகும்.

முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி "முஸ்லிம் நேசன்" ஆங்கிலத்தில் " Muslim Friend " என்ற பெயரில் அரபு தமிழ் வார இதழ் ஒன்றினை ஆரம்பித்தார்.

1884 ஆம் ஆண்டில் கொழும்பு, புதிய சோனகத் தெருவிலே முதலாவது ஆங்கில முகமதிய பாடசாலையை அவர் தோற்றுவித்தார். ஏழு வருடங்களுக்கு பின்னர், அவருடைய அயரா உழைப்பின் பயனாக ”அல்-மதரசதுல் கைரியா” என்னும் பெயரில் புத்துயிர் பெற்று இதுவே பிற்பாடு கொழும்பு சாஹிரா கல்லூரியாக மலர்ந்தது. பல பாடசாலைகளை நிறுவியும், பாடநூல்களை எழுதியும் செயலாற்றினார்.

இதனால், இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சித் தந்தை என அழைக்கப்படுபவர்.

இலங்கை சட்ட நிர்ணய சபையில் (செனட் சபை) முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இருத்தல் அவசியமென்று இடையறாது வன்மையாகப் போராடினார்.

முஸ்லிம் விவாகப் பதிவுச் சட்டத்தை பழமை விரும்பிகள் எதிர்த்த போது சித்தி லெப்பை வரவேற்றார்.

அறிஞர் சித்தி லெப்பை ஆய்வுப் பேரவையினர் (SLRF) தமது முதலாவது தேசிய ஆய்வு மாநாட்டில் இலங்கை முஸ்லிம் தேசியத்தின் தந்தை அறிஞர் சித்தி லெப்பை என்ற ஆய்வரங்கை நடத்தியிருந்தனர்.

அறிஞர் சித்தி லெப்பை அவர்கள் வாழ்ந்த காலத்தில் (1838-1898) முஸ்லிம் தேசியம் பற்றிய உணர்வு உருவாக எந்த காரணிகளும் இருந்திருக்கவில்லை.

அவரது வாழ்விடம், கலாச்சாரம், மொழி, பொருளாதாரம் எதுவுமே தேசியத்திற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்வதாக இருந்திருக்கவில்லை.

1950 களின் பின்னர்தான் தமிழர்களே தாம் ஒரு தேசியம் என்பது பற்றி சிந்திக்கலாயினர். அப்படி இருக்கையில் 1898 ல் காலம் சென்ற அறிஞர் சித்தி லெப்பை முஸ்லிம் தேசியம் பற்றிய பிரக்ஞை அற்றவராக இருந்திருக்கவே வாய்ப்புக்கள் உள்ளது.

காரணம், அவரது காலத்தில் அதற்கான தேவை இருக்கவில்லை. 1915 ம் ஆண்டைய கண்டி கலவரத்துக்கு முன்னரேயே அவர் காலம் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கலவரத்தினால் உந்தப்பட்டு முஸ்லிம் தேசியம் பற்றி சிந்தித்தார் என்றும் கொள்ள முடியாதுள்ளது.

அவர் எங்கேயாவது எப்போதாவது முஸ்லிம் தேசியம் பற்றி பேசியோ அல்லது எழுதியோ இருக்கிறாரா என்றால் அது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

ஆனால் செனட் சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று அவர் வலியுறுத்திய ஒரு விடயத்தை வைத்துக் கொண்டு அதை தேசியத்துக்கான ஆரம்பப் புள்ளியாக கருதுவது தவறாகும்.

முஸ்லிம்களின் தேவைகளை இலகுபடுத்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி தாருங்கள் என்று கேட்டதை, முஸ்லிம்களுக்கு தனியான ஒரு பாராளுமன்றத்தையே தாருங்கள் என்று கேட்கக்கூடிய தேசியத்துடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது.

அறிஞர் சித்தி லெப்பை அவ்வாறு கோரியதுதான் பின்னாட்களில் முஸ்லிம் தேசியமாக வளர வழி செய்தது என்னும் வாதம் வாளான் தவளை வளர்ந்து முற்றி மீனானது என்பதைப் போல் உள்ளது.

1931 ல் பெண்களுக்கான வாக்களிப்பு உரிமை கொடுக்கப்பட்டிருக்காவிடில் இன்று வரை அது கிடைத்திருக்காது என்பதைப் போன்ற வாதம்தான் இவை. ஒரு கட்டத்தில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் நிச்சயமாக வழங்கப்பட்டே இருக்கும்.

1990 ஒக்டோபரில் வடமாகாண தமிழ் தேசியம் முஸ்லிம்கள் தமிழ் தேசியம் அல்ல மாறாக முஸ்லிம் தேசியம் என்று பச்சை குத்தியதுடன், முஸ்லிம்கள் தாம் ஒரு தனித்தேசியம் என்பது பற்றியும் தமது சுயநிர்ணய உரிமை பற்றியும் சிந்திக்கலாயினர்.

இது பற்றி முஸ்லிம் கட்சி என்ற பத்திரிகையில் 1992ல் எழுதப்பட்டதே முதன் முதலில் முஸ்லிம் தேசியம் பற்றிய எழுத்துருவில் அமைந்த சிந்தனை வெளிப்பாடாகும்.

சிங்கள பௌத்தர்கள் ஒரு தேசியமாக தம்மை நினைத்துக் கொண்டிருப்பதனால்தான் நமது நாட்டை ஆண்டு வந்தவை சிங்கள பௌத்த அரசுகளாக செயற்பட்டன.

இவ்விரு பெரும் தேசியங்களுக்கிடையில் சிறுபான்மையிலும் சிறுபான்மையான முஸ்லிம்களை ஒரு தேசியமாக உணர்ந்து ஏற்று ஒரு கௌரவமான சுயநிர்ணய அலகுக்கு உரித்துடையவர்கள் என்ற அங்கீகாரத்துக்கு இன்று வரை அயராது குரல் கொடுப்பது யாரென்பதை SLRF அறியாதிருக்காது.

அவர் முஸ்லிம் சுயநிர்ணயம் என்ற நூலை பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வெளியிட்டு தான் 1992 முதல் கூறிவரும் முஸ்லிம் தேசியம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளித்திருந்தார்.

இக்காரணங்களினால் 2016 ல் கிழக்கின் எழுச்சியின் ஸ்தாபகர் வபா பாரூக் அவர்கள் முஸ்லிம் தேசியத்தின் தந்தை என்று வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீனை பிரகடனித்தார்.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சியின் தந்தை என்பதுவே அறிஞர் சித்தி லெப்பைக்கு சாலப் பொருத்தமான சிறந்த பட்டமாகும்.

இல்லாத ஒன்றை செய்யாத ஒன்றை அவருக்கு பட்டமாக சூட்டுவது அறிஞர் சித்தி லெப்பையை அவமரியாதை செய்வதாக அமைந்துவிடும். மேலும் உண்மையிலேயே அந்தப் பட்டத்திற்குத் தகுதியானவர்களை வேண்டுமென்றே அவமதிப்பதாகவும் ஆகிவிடும்.

SLRF இந்த தவறுக்கு வருத்தம் தெரிவிப்பது, அவர்கள் இந்த தவறை உள்நோக்கத்தோடு செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்தும்.

அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்
செயலாளர்
கிழக்கின் எழுச்சி



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -