எம்.வை. அமீர் –
இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான உயர்கல்வி, ஆய்வு, அறிவுப் பரிமாற்றம் மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடமும், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் ஈரோடு, பெருந்துறையில் அமைந்துள்ள Kongu Business School மற்றும் Kongu Engineering College ஆகிய நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த Academic Exchange Programme – 2026, 2026.10.07 அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, இரு நாடுகளையும் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் கல்வி, ஆய்வு, தொழில்முறை மற்றும் கலாசாரத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முக்கிய தளமாக அமைந்தது.
இந்நிகழ்வில் முக்கிய உரையாற்றிய தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், இத்தகைய கல்விப் பரிமாற்ற நிகழ்ச்சிகள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கும், ஆய்வுக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், நட்புறவுகளை உருவாக்குவதற்கும் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன எனத் தெரிவித்தார்.
இந்தியாவும் இலங்கையும் புவியியல், வரலாறு மற்றும் கலாசார ரீதியாக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கல்விசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இத்தகைய பரிமாற்றங்கள் வலுவான அடித்தளமாக அமைய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழகங்கள் வெறுமனே கல்வியை வழங்கும் நிறுவனங்களாக மட்டும் இல்லாமல், சமூகங்களுக்கிடையில் உறவுப்பாலங்களை உருவாக்கி, இளைஞர்கள் தமது சமூகத்தையும் பரந்த உலகையும் புரிந்துகொள்ள உதவும் முக்கிய நிறுவனங்களாக விளங்குகின்றன எனக் குறிப்பிட்ட உபவேந்தர், Academic Exchange போன்ற நிகழ்ச்சிகள் இந்தப் பொறுப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன என்றார்.
முகாமைத்துவமும் பொறியியலும் இணைந்து செயற்படுவதன் மூலம் சமகால சமூகப் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க முடியும் என வலியுறுத்திய அவர், தொழில்நுட்ப அறிவும் சிறந்த முகாமைத்துவ அணுகுமுறையும் ஒன்றிணையும்போது பல்வேறு சமூகச் சவால்களுக்கு பயனுள்ள தீர்வுகளை உருவாக்க முடியும் எனத் தெரிவித்தார்.
மேலும், கற்பித்தல் முறைகள், மாணவர் ஆதரவு, கல்வி அறிவை நடைமுறையுடன் இணைக்கும் அணுகுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நிறுவனங்களும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். சிறிய அளவிலான கூட்டு கருத்தரங்குகள், பாடவாரியான கலந்துரையாடல்கள் மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகள் போன்றவற்றின் ஊடாக எதிர்கால ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்த முடியும் எனவும் அவர் முன்மொழிந்தார்.
மாணவர்களின் செயற்பாடுகளையும் ஊக்குவித்த உபவேந்தர், கல்வி என்பது முறையான விளக்கவுரைகளுக்கு அப்பாற்பட்டது என்றும், கேள்வி கேட்பதும் ஆர்வத்துடன் பங்கேற்பதும் கல்விசார் வளர்ச்சியின் முக்கிய அம்சங்கள் என்றும் வலியுறுத்தினார்.
“இன்றைய சந்திப்பின் வெற்றியை நாம் பெற்றுக்கொண்ட கற்றல், உருவாக்கிய உறவுகள் மற்றும் திறந்துவிட்ட புதிய வாய்ப்புகள் மூலம் அளவிட வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக, எமது பணிகள் நாம் சேவையாற்றும் சமூகங்களுக்கு பயனளிக்க வேண்டும்” என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.
நிகழ்வின் ஆரம்ப அமர்வில் வரவேற்புரையாற்றிய தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, இந்த நிகழ்ச்சி இரு கல்வி நிறுவனங்களுக்கிடையிலான சாதாரண சந்திப்பு அல்ல என்றும், கல்விசார் உறவுகளை உருவாக்குவதற்கும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கும் கிடைத்துள்ள முக்கிய வாய்ப்பு என்றும் தெரிவித்தார்.
இன்றைய உயர்கல்விச் சூழலில் மாணவர்கள் கல்வி அறிவைப் பெறுவதுடன், விமர்சன ரீதியாக சிந்தித்தல், குழுவாகச் செயற்படுதல், புத்தாக்க சிந்தனைகளை உருவாக்குதல் மற்றும் மாறிவரும் உலகின் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச கல்விப் பரிமாற்றங்கள் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு வெவ்வேறு கல்வி நடைமுறைகளை அறிந்துகொள்ளவும், தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கற்பித்தல், ஆய்வு மற்றும் மாணவர் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புகளை உருவாக்குவதற்கும் இத்தகைய தொடர்புகள் அடித்தளமாக அமையக்கூடும் என்றார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுவான வரலாற்று மற்றும் கலாசாரத் தொடர்புகள் காணப்படுவதால், கல்விப் பரிமாற்றங்கள் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ளவும், வேறுபட்ட கருத்துக்கள் மற்றும் அனுபவங்களுக்கு மதிப்பளிக்கவும் உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் மூலம் உருவாகும் உறவுகள் இந்தியப் பிரதிநிதிகள் தமது நாட்டிற்குத் திரும்பிய பின்னரும் தொடர வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்ட பேராசிரியர் முஸ்தபா, மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் நீடித்த கல்விசார் உறவுகளை கட்டியெழுப்புவதற்கு இந்த Academic Exchange Programme ஒரு தொடக்கமாக அமைய வேண்டும் என்றார்.
இந்தியாவின் Kongu Business School மற்றும் Kongu Engineering College நிறுவனங்களின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியருமான கலாநிதி கார்த்திகேயன் விசேட உரையாற்றினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் கல்வி மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை மேலும் விரிவுபடுத்துவதில் தமது நிறுவனங்கள் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்திய அவர், கடந்த 2026 ஜூன் மாதத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தைச் சேர்ந்த MBA மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்காக Kongu கல்வி நிறுவன வளாகத்தில் ஒரு வாரகால நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக சுமார் இரண்டு மாதங்களுக்குள் Kongu கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருப்பது, இரு நிறுவனங்களுக்கிடையிலான கல்வி, அறிவு, கலாசாரம் மற்றும் அனுபவப் பரிமாற்றத்திற்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Kongu Engineering College 1984 ஆம் ஆண்டு Kongu Vellalar Institute of Technology Trust மூலம் நிறுவப்பட்டதாகவும், Kongu Business School 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்த கலாநிதி கார்த்திகேயன், Kongu Engineering College தற்போது சுமார் 10,000 மாணவர்கள், 550 கல்வியாளர்கள் மற்றும் 250 ஆதரவுப் பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பொறியியல் துறையில் 14 இளங்கலைப் பிரிவுகளும், MBA மற்றும் MCA உள்ளிட்ட ஆறு முதுகலைப் பாடநெறிகளும் அங்கு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆய்வுத் துறைக்கு நிறுவனங்கள் வழங்கும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், கல்வியாளர்களினால் Scopus தரவுத்தளத்தில் சுமார் 1,000 ஆய்வுக் கட்டுரைகளும், Science Citation Index இல் 250 முதல் 270 வரையிலான ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொழில்துறை ஆலோசனை, பயிற்சி, பரிசோதனை மற்றும் Management Development Programmes உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் தொழில்துறையுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுவதாகத் தெரிவித்த அவர், Kongu வளாகத்தில் இந்திய அரசின் Department of Science and Technology ஆதரவுடன் Technology Business Incubator இயங்கி வருவதாகவும், 2025–26 ஆம் ஆண்டுக்கான Institution’s Innovation Council நடவடிக்கைகளுக்காக நான்கு நட்சத்திர அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இரு நிறுவனங்களுக்கிடையில் ஆய்வு ஒத்துழைப்பு மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க Kongu கல்வி நிறுவனங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்த கலாநிதி கார்த்திகேயன், எதிர்காலத்தில் இரு நிறுவனங்களிலும் தலா ஒரு வருடம் கல்வி கற்கும் வகையிலான Dual Degree Programme ஒன்றை உருவாக்குவதற்கும் ஆர்வம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், Kongu நிறுவனங்களின் சர்வதேச விவகாரங்களுக்கான குழு பல்வேறு சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடனும் விரைவில் இவ்வாறான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்காலத்தில் Kongu கல்வி நிறுவனங்களுக்கு வருகை தந்து கல்வி, ஆய்வு மற்றும் தொழில்துறை சார்ந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வரவேற்கப்படுவார்கள் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் விசேட நிபுணத்துவ அமர்வு இடம்பெற்றது. இதற்கான வளவாளராக பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலிம் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த அமர்வின் மூலம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும் பொறியியல் கல்வி, கல்விசார் செயற்பாடுகள் மற்றும் அறிவுசார் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியப் பிரதிநிதிகள் விரிவான புரிதலைப் பெற்றுக்கொண்டனர். இரு தரப்பினரும் தமது கல்விசார் அனுபவங்கள் மற்றும் நடைமுறைகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியப் பிரதிநிதிகளுக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தின் முக்கிய பகுதிகளைப் பார்வையிடும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அத்துடன், முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பணியாளர் ஓய்வறையில் ஏற்பாடு செய்யப்பட்ட Networking Lunch நிகழ்வில் இரு நிறுவனங்களையும் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதன்போது எதிர்கால கல்வி, ஆய்வு மற்றும் தொழில்முறை ஒத்துழைப்புகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
மேலும், முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் (Marketing Management) துறையின் தலைவர் பேராசிரியர் கே.எம். முபாறக் தலைமையில் விசேட நிபுணத்துவ அமர்வொன்றும் இடம்பெற்றது. முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளின் சமகாலப் போக்குகள், கல்விசார் அனுபவங்கள் மற்றும் நடைமுறை அறிவு தொடர்பில் இவ்வமர்வில் கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
Academic Exchange Programme – 2026 ஒரு நாள் நிகழ்வாக மட்டுப்படாமல், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையில் நீண்டகால கல்வி மற்றும் ஆய்வு ஒத்துழைப்புகளுக்கான அடித்தளத்தை உருவாக்கும் முயற்சியாக அமைந்தது.
கூட்டு ஆய்வுகள், கல்வியாளர் மற்றும் மாணவர் பரிமாற்றங்கள், நிபுணத்துவ அமர்வுகள், கூட்டு கருத்தரங்குகள், தொழில்முறை அறிவுப் பகிர்வு மற்றும் கலாசாரப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளை இந்நிகழ்ச்சி உருவாக்கியுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, Academic Exchange, Cultural Exchange மற்றும் Campus Exchange ஆகிய மூன்று முக்கிய பரிமாணங்களை ஒருங்கிணைத்ததன் மூலம், இலங்கை–இந்தியா உயர்கல்விசார் உறவுகளின் அடுத்த கட்டத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துவைத்துள்ளது.
இந்நிகழ்ச்சியின் நன்றியுரையை முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.ஆர்.எப். தபாணி நிகழ்த்தினார்.


0 comments :
Post a Comment