“கலைகளால் இணைவோம்” – நாடளாவிய கலை, இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைக்க புதிய அலை கலை வட்டம் நடவடிக்கை!



46 ஆண்டுகால கலை–இலக்கியப் பயணத்தின் தொடர்ச்சியாக அக்டோபர் முதல் புதிய செயற்திட்டம்

தலைநகரில் கடந்த 46 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இயங்கி வரும் புதிய அலை கலை வட்டம், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் மொழி மூலம் கலை, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வரும் அமைப்புகள், கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் “கலைகளால் இணைவோம்” என்ற புதிய செயற்திட்டத்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

புதிய அலை கலை வட்டம் தனது நீண்டகால செயற்பாடுகளின் ஊடாக கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாகப் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, நாடளாவிய ரீதியில் தமிழ் மொழி ஊடாக கலை–இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அடையாளம் கண்டு, அவர்களின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி, அவர்களை ஒரே தளத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் மூலம் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்டு வரும் கலை, இலக்கிய முயற்சிகள் குறித்த தகவல்களை ஒருங்கிணைப்பதுடன், அவற்றுக்கிடையே தொடர்புகளையும் பரஸ்பர ஒத்துழைப்பையும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது பிரதான நோக்கமாகும்.

குறிப்பாக, கலை–இலக்கியம் சார்ந்த அமைப்புகள், சினிமா மற்றும் குறும்படக் குழுக்கள், நாடக அமைப்புகள், இசைத்துறை சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கலைத்துறை சார்ந்த குழுக்களையும் இந்த செயற்திட்டத்துடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இயங்கிவரும் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் தமது ஆக்கப்பூர்வமான முயற்சிகளை தனித்தனியாக முன்னெடுத்து வருகின்ற நிலையில், அவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பையும் அனுபவப் பகிர்வையும் ஏற்படுத்துவது காலத்தின் தேவையாக இருப்பதாக புதிய அலை கலை வட்டம் தெரிவித்துள்ளது.

இந்த செயற்திட்டத்தின் ஆரம்பகட்டமாக, நாடளாவிய ரீதியில் இயங்கும் கலை–இலக்கிய அமைப்புகள், கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் தொடர்பான அடிப்படைத் தகவல்களைத் திரட்டி, அவர்களின் செயற்பாடுகளை அறிந்து கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்காலத்தில் இணைந்த கலை–இலக்கிய நிகழ்வுகள், கருத்துப் பரிமாற்றங்கள், படைப்பாற்றல் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் ஏனைய ஆக்கப்பூர்வமான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளையும் இந்த ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வேலைத்திட்டம் தொடர்பில் கலை–இலக்கியவாதிகளின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் இணைந்த செயற்பாடுகளை புதிய அலை கலை வட்டம் எதிர்பார்ப்பதாக அதன் நிறுவனர் ராதா மேத்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடு முழுவதும் கலை–இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் அமைப்புகள், சினிமா மற்றும் குறும்படக் குழுக்கள், நாடகக் குழுக்கள், இசைத்துறை சார்ந்த அமைப்புகள், கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவரும் இந்தப் பணியில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த முயற்சியில் இணைந்து கொள்ள விரும்புவோர் 075 4880172 என்ற WhatsApp இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது விபரங்களைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

“கலைகளால் இணைவோம்” என்ற கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இந்த முயற்சி, இலங்கையின் தமிழ் கலை–இலக்கியத் துறையில் இயங்கிவரும் பல்வேறு தரப்பினரையும் ஒரே தளத்தில் இணைத்து, எதிர்காலத்தில் கூட்டு முயற்சிகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :