வவுனியா நகரில் இலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் வகையில், புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் வவுனியா மாவட்ட அமைப்பினரால் “இலக்கியச் சந்திப்பு–2” நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு எதிர்வரும் 26.09.2026 சனிக்கிழமை, புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தாவின் ஆசியுடன், அமைப்பின் தலைவி சிவகெளரி (சுடரி) தலைமையில் வவுனியா, குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நடைபெறவுள்ளது.
“இலக்கியங்கள் பேசும் வாழ்வியல் அம்சங்கள்” எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறும் இச்சந்திப்பில், இலக்கியப் படைப்புகளினூடாக வெளிப்படுத்தப்படும் சமூக, வாழ்வியல் மற்றும் மனிதநேயக் கூறுகள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறவுள்ளன.
இதன்போது, ஈழத்து இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான செங்கை ஆழியான் எழுதிய “காட்டாறு” நாவல் தொடர்பில் திருமதி சி. யமுனாராணி (ஓய்வுநிலை அதிபர்) கருத்துரை வழங்கவுள்ளார்.
அத்துடன், எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்களின் “மழைக்கால இரவுகள்” நூல் தொடர்பில் திருமதி ஜெ. பத்மாவதி (விரிவுரையாளர், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா) கருத்துரை வழங்கவுள்ளார்.
இலக்கியப் படைப்புகளை வாசிப்பதையும், அவற்றினூடாக வெளிப்படும் சமூக மற்றும் வாழ்வியல் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வதையும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, வவுனியா மாவட்டத்தின் இலக்கியச் செயற்பாடுகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலக்கியம், கலை மற்றும் சமூகச் சிந்தனைகளில் ஆர்வமுள்ள அனைவரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பிக்குமாறு வவுனியா மாவட்ட இணைப்பாளர் கலையரசி அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இடம்: குடியிருப்பு சிறுவர் பூங்கா, வவுனியா
திகதி: 26.09.2026 – சனிக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை
தொனிப்பொருள்: “இலக்கியங்கள் பேசும் வாழ்வியல் அம்சங்கள்”

0 comments :
Post a Comment