கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் கல்முனையில் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்



நூருல் ஹுதா உமர்-
ல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள், அதனுடன் தொடர்புடைய விடயங்கள் மற்றும் இதனால் ஏற்பட்டுள்ள நல்லிணக்கப் பிளவுகள் தொடர்பில் ஆராயும் வகையில், கல்முனையில் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் அஷ்-ஷெய்க் ஏ.எல். முஹம்மட் முர்ஷித் (முப்தி) தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, நிர்வாக செயற்பாடுகள், ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இவ்விவகாரம் காரணமாக தேசிய ரீதியில் ஏற்பட்டுள்ள நல்லிணக்கப் பிளவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

வைத்தியசாலை விவகாரத்தை சமூகங்களுக்கிடையிலான முரண்பாடாக மாற்றாமல், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே உயர்மட்டக் கலந்துரையாடல்களை முன்னெடுத்து சுமுகமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

வைத்தியசாலை அனைத்து மக்களுக்கும் சேவையாற்றும் அரச நிறுவனமாக இருப்பதால், அங்கு கடமையாற்றும் அனைத்து ஊழியர்களினதும் உரிமைகள், அரச சுற்றறிக்கைகள் மற்றும் நடைமுறைகள் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் பாதிக்கும் வகையில் இவ்விவகாரம் பயன்படுத்தப்படாமல், பொறுப்புடனும் நிதானத்துடனும் அணுகப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

கல்முனை ஆதார வைத்தியசாலை பிரதேச மக்களின் முக்கியமான சுகாதார நிறுவனமாக உள்ள நிலையில், அதன் சேவைகள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துவதுடன், தற்போதைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதும் நியாயமானதுமான தீர்வை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பல்வேறு கிளைகளின் தலைமை நிர்வாகிகள், கல்முனை பிராந்திய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபையினர், அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், கல்விமான்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், துறைசார் புத்திஜீவிகள், சமூக அமைப்புக்களின் பிரதானிகள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வழிநடத்துவதற்காக புத்திஜீவிகள் மற்றும் துறைசார் வல்லுநர்களை உள்ளடக்கிய குழுவொன்றும் இதன்போது அமைக்கப்பட்டது.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :