சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாகவும், பாகுபாடின்றியும் அமுல்படுத்துமாறு கோரி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்கள் இன்று (17) திங்கட்கிழமை காலை அரைமணி நேர ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது, சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான சுற்றுநிருபம் சாதி, இன, மத பேதமின்றி அனைவருக்கும் பொதுவாகவும் முறையாகவும் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
அவ்வாறு சுற்றுநிருபத்தை அனைவருக்கும் சமமாக அமுல்படுத்த முடியாத பட்சத்தில், பணியாளர்கள் தத்தமது கலாசாரத்திற்கு ஏற்ற உடைகளை அணிந்து கடமையாற்றுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
“சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்துங்கள்” உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சுகாதார உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, சுகாதார நிரந்தரத் தொழிலாளர்களின் கூட்டு தொழிற்சங்கமும் இதே விடயம் தொடர்பில் மிக விரைவில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 15 நாட்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் விபத்து மற்றும் சுகவீனம் காரணமாக கடமைக்கு சமூகமளிக்காத நிலையில், வைத்தியசாலை வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment