நீர்கொழும்பில் இளைஞர்களுடன் சாணக்கியன் உள்ளிட்ட ஏழு எம்.பிக்கள் நேரடி கலந்துரையாடல்



“Voice to Policy Dialogue” என்ற தலைப்பில் நீர்கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், கம்பஹா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 65-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடியுள்ளனர்.

திறந்த பாராளுமன்ற முன்முயற்சிக்கான பாராளுமன்றக் குழு மற்றும் Coalition for Inclusive Impact (CII) ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், கல்வி, வேலைவாய்ப்பு, நல்லாட்சி, தொழில்முனைவு, தொழில்நுட்பம் மற்றும் அரசியல் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இளைஞர்கள் தங்களது பிரச்சினைகளை நேரடியாக முன்வைப்பதற்கும், அவற்றுக்கான தீர்வுகளை அடையாளம் காண்பதற்கும், கொள்கை ரீதியான பரிந்துரைகளை உருவாக்குவதற்கும் இந்த நிகழ்வு முக்கிய தளமாக அமைந்தது.

நிகழ்வில், திறந்த பாராளுமன்ற முன்முயற்சிக்கான பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவர்களான கௌரவ (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோருடன், கௌரவ சமிந்திராணி கிரியெல்ல, கௌரவ எஸ். எம். மரிக்கார், கௌரவ பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி. டி. சூரியபண்டார மற்றும் கௌரவ சம்பிக ஹெட்டியாரச்சி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, இளைஞர்கள் முன்வைத்த பரிந்துரைகளை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதுடன், சம்பந்தப்பட்ட பாராளுமன்றக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், கலந்துரையாடலின் போது இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முறையாக ஆவணப்படுத்தி, அவற்றை மேலதிக பரிசீலனைக்காக உரிய தரப்புகளிடம் சமர்ப்பிக்கும் வகையில் Youth Rapporteur ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த முயற்சி ஒரு தடவை இடம்பெறும் கலந்துரையாடலாக மட்டுப்படுத்தப்படாமல், கொள்கை உருவாக்கத்தில் இளைஞர்களின் தொடர்ச்சியான பங்கேற்பை உறுதி செய்யும் பரந்த செயற்பாட்டின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் குரல் கொள்கை உருவாக்கத்தில் தொடர்ச்சியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதுடன், பாராளுமன்றத்தை மேலும் திறந்தநிலையுடனும் மக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இவ்வாறான “Voice to Policy Dialogue” கலந்துரையாடல்களை தனது முயற்சியின் ஊடாக நாடு முழுவதும் தொடர்ந்து நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :