ஸம் ஸம் பவுண்டேஷனின் Entrepreneurs Development Program (EDP) திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண இளம் தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு செயலமர்வு 2026 ஜூலை 5 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
ஸம் ஸம் பவுண்டேஷன் ஏற்பாட்டில், Almas Holdings, MyBiz மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 இளம் தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
இளம் தொழில் முனைவோர்களை ஒரே தளத்தில் இணைத்து, தொழில்சார் வலையமைப்பை விரிவுபடுத்துதல், புதிய வணிக வாய்ப்புகளை அடையாளம் காணுதல், அனுபவங்களைப் பகிர்ந்து தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் எதிர்கால தொழில் முயற்சிகளுக்கான நடைமுறை வழிகாட்டல்களை வழங்குதல் ஆகியவை செயலமர்வின் முக்கிய நோக்கங்களாக அமைந்திருந்தன.
நிகழ்வின் ஆரம்ப அமர்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். எம். ஜுனைதீன் அங்குரார்ப்பண உரையாற்றினார். தொடர்ந்து, ஸம் ஸம் பவுண்டேஷன் தலைவர் முப்தி யூசுப் ஹனிபா மற்றும் மூலோபாய ஆலோசகர் நவாஸ் மொஹமட் ஆகியோர் இணைந்து "தற்போதைய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட தொழில் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புக் கலந்துரையாடலை நடத்தினர்.
கிழக்கு மாகாண தொழில் முனைவோருக்கான எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் தொடர்பான குழுக் கலந்துரையாடல், வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் ஏ. எம். எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. இதில் ஸம் ஸம் பவுண்டேஷனின் தொழில்முனைவு மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் ஸுஹைர் ஜே. காரியப்பர் நெறிப்படுத்த, பேராசிரியர்கள் எம். ஐ. எம். ஹிலால், ஏ. ரஸ்மி மற்றும் எம். ஏ. சி. சல்பியா உம்மா ஆகியோர் கலந்துகொண்டு தொழில்முனைவு வளர்ச்சிக்கான வாய்ப்புகள், சவால்கள் மற்றும் எதிர்கால திசைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்தனர்.
மேலும், Almas Holdings நிறுவனத்தின் பணிப்பாளர் இம்தியாஸ் புஹார்தீன் மற்றும் அஷ்ஷெய்க் ஹாரிஸ் ரஷாதி ஆகியோர் பங்குச் சந்தை முதலீட்டின் முக்கியத்துவம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.
செயலமர்வில் தொழில் தொடங்குதல் மற்றும் வளர்ச்சி, சந்தைப்படுத்தல் உத்திகள், நிதி முகாமைத்துவம், முதலீட்டு வாய்ப்புகள், பங்குச் சந்தை, சுற்றுலாத்துறையில் உருவாகி வரும் வணிகச் சந்தர்ப்பங்கள், டிஜிட்டல் தொழில்முனைவு மற்றும் நிலையான வணிக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் நடைமுறை ஆலோசனைகளை வழங்கினர்.
அத்துடன், பங்கேற்ற இளம் தொழில் முனைவோருக்கான அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான செயற்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இச்செயலமர்வு, கிழக்கு மாகாண இளம் தொழில் முனைவோரின் அறிவு, திறன் மற்றும் தொழில்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, கிழக்கு மாகாணத்தில் தொழில்முனைவு சூழலை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்தது.

0 comments :
Post a Comment