உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் கலாநிதி எஸ். எம். ரஷ்மி ரூமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலைக்கூடத்தின் துணைச் செயலாளர் மீரான் ஜி மற்றும் உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் இலங்கைக்கான பிரதம ஆலோசகர் சபைத் தலைவரும் புரவலருமான ஹாஷிம் உமர் ஆகியோர் இணைந்து இலங்கையின் புதிய பிரதிநிதிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வு, உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கு புதிய உற்சாகத்தையும், கலை மற்றும் பண்பாட்டு சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் முக்கியமான தொடக்கமாகவும் அமைந்தது.
நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், பாரத் ரத்னா விருது பெற்ற மறைந்த டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வழங்கப்படும் சிறப்பு விருது, உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சார்பில் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. கலை, கல்வி, சமூக சேவை மற்றும் மனிதநேயப் பணிகளுக்காக அவர் ஆற்றிவரும் அளப்பரிய பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த கௌரவம் வழங்கப்பட்டதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் இலங்கைக்கான செயற்பாடுகளை வலுப்படுத்துவதில் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் வழிகாட்டுதலும், தாராளமான ஆதரவும் தொடர்ந்தும் கிடைத்து வருவதாக சர்வதேச தலைவர் கலாநிதி எஸ். எம். ரஷ்மி ரூமி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கவிஞரும் எழுத்தாளருமான ராதா மேத்தா, சிரேஷ்ட அரசியல்வாதியும் இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான முபாரக் அப்துல் மஜீத், தமிழன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஜௌபர், ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் பணிப்பாளர் திருமதி மரியம் ஹாஷிம் உள்ளிட்ட கலை, இலக்கிய, ஊடக மற்றும் சமூகத் துறைகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து அதிதிகளுக்கும் புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் பொன்னாடை போர்த்தி, சந்தன மாலை அணிவித்து அன்புடன் கௌரவித்தார். அவரது எளிமையான வரவேற்பும், விருந்தோம்பல் பண்பும் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
கலை, இலக்கியம், கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய துறைகளில் தன்னலமற்ற ஆதரவை வழங்கி வரும் புரவலர் ஹாஷிம் உமர் போன்ற மனிதநேயச் சிந்தனையாளர்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய செல்வமாக திகழ்கின்றனர். திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதிலும், தமிழ் மொழி, கலை மற்றும் பண்பாட்டை உலக அரங்கில் உயர்த்துவதிலும் அவர் தொடர்ந்து ஆற்றிவரும் சேவை பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
இந்நிகழ்வு, ஒரு சாதாரண நியமன விழாவாக மட்டுமல்லாது, கலை மற்றும் இலக்கிய வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயற்படும் மனிதநேய உள்ளங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய அர்த்தமுள்ள நிகழ்வாகவும் அமைந்தது.



0 comments :
Post a Comment