சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை, தனது மனிதாபிமான சேவைகளின் தொடர்ச்சியாக, கல்முனையில் உயிரிழந்த 16 வயதுடைய சிறுவனின் ஜனாஸாவை சட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர் அவரது சொந்த ஊரான மூதூர் பாலத்தோப்பூருக்கு எடுத்துச் சென்று, இறுதி நல்லடக்கம் வரை அனைத்து உதவிகளையும் வழங்கி பாராட்டுக்குரிய சமூகப் பணியை முன்னெடுத்துள்ளது.
கடந்த 2026 ஜூலை 1 ஆம் திகதி (புதன்கிழமை) காலை, கல்முனை இஸ்லாமாபாத் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில், மூதூர் பாலத்தோப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பதிவாகியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கல்முனை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி யு.கே. முஸ்தபா அவர்கள், குறித்த ஜனாஸாவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கான அவசர உதவியை சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையிடம் கோரியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, பேரவையின் ஜனாஸா வாகனமும் களப்பணியாளர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, ஜனாஸாவை ஏற்றி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
வைத்தியசாலையில் இடம்பெற்ற அனைத்து சட்ட மற்றும் மருத்துவ நடவடிக்கைகளும் நிறைவடைந்த பின்னர், உயிரிழந்த சிறுவனின் தாயார், குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி யு.கே. முஸ்தபா, மற்றும் கல்முனை சிறுவர் நன்னடத்தை பிரிவு பொறுப்பதிகாரி மதியழகன் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில், அச்சிறுவனின் குடும்பத்தின் பொருளாதார மற்றும் சமூகச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஜனாஸாவை சொந்த ஊரான மூதூர் பாலத்தோப்பூருக்கு எடுத்துச் செல்வதற்கான முழுப் பொறுப்பையும் பேரவை ஏற்றுக்கொண்டது.
அமைப்பின் மஜ்லிஷ் ஷூரா தலைவரின் அனுமதியுடன், ஜனாஸா வாகனத்தில் உயிரிழந்த சிறுவனின் ஜனாஸாவும், அவரது உறவினர்களும் அழைத்துச் செல்லப்பட்டதுடன், பேரவையின் களப்பணியாளர்கள் மற்றுமொரு வாகனத்தில் இணைந்து பயணித்து, ஜனாஸாவை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
அத்துடன், ஜனாஸாவை குளிப்பாட்டுதல், கபனிடுதல், தொழுகைக்கான ஏற்பாடுகள் மற்றும் நல்லடக்கம் உள்ளிட்ட இறுதிச் சடங்குகளிலும் பேரவையின் உறுப்பினர்கள் நேரடியாக பங்கேற்று, தம்மால் இயன்ற அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்கினர்.
சமூகத்தின் துயர தருணங்களில் இன, மத, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து அவசர நேரங்களில் மனிதாபிமான சேவைகளை வழங்கி வரும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் இந்த அர்ப்பணிப்புமிக்க சேவை, பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
ஊடகப்பிரிவு
ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை
சாய்ந்தமருது.

0 comments :
Post a Comment