மக்களின் அத்தியாவசிய தேவைகளை இனங்கண்டு, எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது தொடர்ச்சியாக மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்து வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன், தனது மற்றுமொரு சமூகநலத் திட்டமாக மாளிகைக்காடு பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகளை அமைத்து வழங்கியுள்ளது.
சமீப காலமாக அதிகரித்து வரும் நீர்க்கட்டணங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களின் நீண்டநாள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
YWMA பேரவையின் அனுசரணையில், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட குழாய்க்கிணறுகள், பயனாளிகளின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
"மனிதர்களுக்கான சிறந்த சேவை, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே" என்ற உயரிய மனிதநேயக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வரும் ரஹ்மத் மன்சூர் அவர்களின் இச்செயற்பாடு, குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், சமூகப் பொறுப்புணர்வுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இத்தகைய மனிதாபிமானப் பணிகளுக்காக ரஹ்மத் மன்சூர் அவர்களுக்கும் ரஹ்மத் பவுண்டேசனுக்கும் அப்பகுதி மக்கள் தமது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை முன்னாள் பிரதி தவிசாளர் எம். இஸ்மாயீல், ரஹ்மத் பவுண்டேசனின் முக்கிய உறுப்பினர்கள், பயனாளிகள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மனிதாபிமானம், சமூகப் பொறுப்பு மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ரஹ்மத் பவுண்டேசனின் சேவைகள், சமூக மாற்றத்திற்கும் நிலையான மக்கள் நல அபிவிருத்திக்கும் முன்னுதாரணமாகத் திகழ்வதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment