1995 ஆம் ஆண்டு சமூக சேவையை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு நட்புறவு ஒன்றியம், கடந்த மூன்று தசாப்தங்களாக இப்பிராந்தியத்தில் கல்வி, சமூக, கலாசார மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் துறைகளில் பல்வேறு சேவைகளை முன்னெடுத்து வருவதுடன், முன்னணி கல்விமான்கள், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், அரச சேவையாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட சமூகப் பொறுப்புமிக்க ஆளுமைகளின் பங்களிப்புடன் இயங்கி வருகிறது.
நிகழ்வில் உரையாற்றிய ஒன்றியத்தின் தவிசாளரும் பொறியியலாளருமான எம்.எம். நஸீர், இந்நாள் EFO-வின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட வேண்டிய முக்கிய நாளாகும் எனக் குறிப்பிட்டார். நீண்டகாலமாகக் கனவாக இருந்து வந்த சொந்த செயலகக் கட்டடத் திட்டம் இன்று நனவாகும் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய கட்டிடம் வெறும் நிர்வாகக் கட்டடமாக மட்டுமன்றி, சமூக, கலாசார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் மையமாக எதிர்காலத்தில் விளங்கும் என்றும் அவர் கூறினார். நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் இக்கட்டடத்தை இரண்டு வருட காலப்பகுதிக்குள் நிர்மாணித்து நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
“ஒற்றுமையின் சின்னமாக அமையவுள்ள இந்தக் கட்டிடம், எமது அமைப்பின் நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் இலட்சியத்தின் வெளிப்பாடாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எந்த இலக்கையும் அடைய முடியும் என்பதை இது நிரூபிக்கும்” என தவிசாளர் எம்.எம். நஸீர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் மாநாட்டில் அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான கல்வி உதவிகள், வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள், சமூக நலப் பணிகள் மற்றும் இளைஞர் மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் உரையாற்றுகையில், சமூக ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் அடிப்படையாகக் கொண்டு EFO மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டத்தக்கவை எனக் குறிப்பிட்டார். சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து சேவையாற்றும் அமைப்பாக EFO தொடர்ந்து வளர்ச்சி பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் அதிபருமான ஐ.கே. ஹசனலி உரையாற்றுகையில், இளைஞர் தலைமுறையினரை சமூகப் பணிகளில் ஈடுபடுத்துவதன் அவசியத்தையும், கல்வி மற்றும் ஒழுக்க விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதில் EFO-வின் பங்கு முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
அமைப்பின் ஊடகப் பணிப்பாளர் யூ. கே. காலித்தீனின் ஊடக ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இன் நிகழ்வில் ஒன்றிய உறுப்பினர்கள், சமூகப் பிரமுகர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

0 comments :
Post a Comment