இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ்.எம். ஜுனைடீன் (Prof.(Dr). S.M. Junaideen) அவர்கள், சுயாதீன ஊழியர் சங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்து வந்த செயற்பாடுகளைப் பாராட்டியதுடன், பணியாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஆரோக்கியமான உறவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் உருவாக்குவதில் சங்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
“Independent Staff Union” என்ற பெயருக்கு ஏற்ப, சங்கம் சுயாதீனமாகவும் பொறுப்புடனும் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கூறப்படுகின்ற கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் நடைமுறையில் செயல்படுத்தும் பண்பே இச்சங்கத்தின் தனித்துவமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
பணியாளர்களின் தேவைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் நிர்வாகம் எப்போதும் திறந்த மனதுடன் அணுகி வருவதாகத் தெரிவித்த உபவேந்தர், பணியாளர்கள் முன்வைக்கும் ஆக்கபூர்வமான விமர்சனங்களும் ஆலோசனைகளும் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்கு வலுசேர்ப்பவையாக இருப்பதாகக் குறிப்பிட்டார். சாதகமானதோ அல்லது பாதகமானதோ என்ற வேறுபாடின்றி, நிறுவன நலனை முன்னிறுத்தும் அனைத்து கருத்துக்களும் வரவேற்கப்பட வேண்டியவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், எவரிடமும் பாகுபாடு காட்டாது செயற்படுவது ஒரு ஆரோக்கியமான நிர்வாகத்தின் அடிப்படை அம்சமாகும் எனத் தெரிவித்த அவர், தேவையான சந்தர்ப்பங்களில் தேவையான விடயங்களைப் பொறுப்புடன் எடுத்துரைப்பது அமைப்பின் வளர்ச்சிக்குத் தேவையான ஜனநாயகப் பண்பாடாகும் என்றார்.
பணியாளர்கள் தங்களது கருத்துக்களை அச்சமின்றி சுதந்திரமாக வெளிப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவது மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்ட அவர், ஒருவரின் பின்னணி அல்லது அறிமுகத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுகின்ற சூழலே உண்மையான ஜனநாயகப் பண்பாட்டின் அடையாளம் எனத் தெரிவித்தார்.
நிர்வாகமும் பணியாளர்களும் ஒரே நோக்கத்துடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட உபவேந்தர், பணியாளர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், சில விடயங்களில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சில விடயங்களில் அனைத்து தரப்பினருக்கும் நியாயமான தீர்வு கிடைப்பதை உறுதிப்படுத்திய பின்னரே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் விளக்கமளித்தார்.
“அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் சில நேரங்களில் பிறருக்கு அநீதியை ஏற்படுத்தக்கூடும். எனவே, விரைவான செயற்பாட்டுக்கும் நியாயமான தீர்மானத்திற்கும் இடையில் சமநிலையைப் பேணுவதே எமது நிர்வாகத்தின் அணுகுமுறையாகும்” என அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு, பொறுப்புணர்வு மற்றும் கணக்குப்படுத்தல் கலாசாரம் நிலைநிறுத்தப்பட்டு வருவதாகவும், பணியாளர்களோ நிர்வாகமோ என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரே விதமான நடைமுறைகளும் ஒழுங்குவிதிகளும் பொருந்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இது சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த பணிச்சூழலை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உரையின் இறுதிப்பகுதியில் சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய உபவேந்தர், “தான் சார்ந்த சமூகத்தை நேசிப்பது இனவாதம் அல்ல; பிற சமூகங்களை வெறுப்பதே இனவாதம்” என்ற கருத்தை மேற்கோள் காட்டி, பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
சங்கத்தின் செயலாளர் எம்.ஏ.சி.எம். சிராஜ் மற்றும் பொருளாளர் எம்.ஐ. ஜாபீர் ஆகியோரது நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின் நிர்வாக சபை, ஆலோசகர் குழு உறுப்பினர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வின் போது சங்கத்தின் வருடாந்த அறிக்கையும் நிதி அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகள், தொழில்முறை மேம்பாடு மற்றும் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
நிகழ்வின்போது நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. இதில் தலைவராக எஸ்.எல்.ஏ. அஹட் செயலாளராக ஏ.ஆர்.ஏ. ஷிஹான் மற்றும் பொருளாளராக எம்.ஜி. ரொஷான் உள்ளிட்ட புதிய நிர்வாகமும் தெரிவானது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கிடையிலான ஒத்துழைப்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தும் முக்கிய தளமாக இவ்வருடாந்த பொதுக் கூட்டம் அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :
Post a Comment