அரசியல் போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் நபர்கள் சாதாரண குற்றவாளிகளாகக் கருதப்படாமல், அரசியல் கைதிகளாக நடத்தப்பட வேண்டும் என்பது பல நாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையாகும்.
ஐரோப்பிய கவுன்சில் (Council of Europe) உள்ளிட்ட சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளின்படி, ஒரு நபரின் தடுப்புக் காவல் என்பது முதன்மையாக அவரது அரசியல் நம்பிக்கைகள், செயல்பாடுகள் அல்லது அடையாளங்களிலிருந்து எழும் சந்தர்ப்பங்களிலும்; குறிப்பாக அத்தகைய தடுப்புக் காவல் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலோ அல்லது விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட தண்டனை, அநீதியான அல்லது அரசியல் செல்வாக்கிற்கு உட்பட்ட சட்ட நடைமுறைகளின் விளைவாகவோ அமையும் பட்சத்தில், அவர் ஓர் அரசியல் கைதியாக புரிந்து கொள்ளப்படலாம்.
இலங்கையே இதற்கு ஒரு தெளிவான முன்னுதாரணத்தை வழங்குகிறது. கடந்த கால கிளர்ச்சிகளைத் தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணி (JVP) தொடர்புடைய நபர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டதோடு ஜனநாயக அரசியல் வாழ்க்கையிலும் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அவர்களில் பலர் இன்று பொதுப் பதவிகளை வகித்து வருகின்றனர். அரசியல் மோதல்கள் என்பன நீண்டகால தண்டனைக்குரிய தடுப்புக் காவலுக்குப் பதிலாக அரசியல் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலமே கடந்த காலங்களில் தீர்க்கப்பட்டுள்ளன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
இருப்பினும், தமிழ் அரசியல் போராட்டங்களுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் வைக்கப்படுவதிலும், அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடைமுறைகளிலும் வெளிப்படையான முரண்பாடுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக, இவர்களில் பலர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் நீண்டகாலமாக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாமலும், வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது சட்டத்தின் முன் சமத்துவம், நியாயத்தன்மை மற்றும் விகிதாசாரம் ஆகிய அடிப்படை ஜனநாயகக் கொள்கைகள் தொடர்பாக கடுமையான கேள்விகளை எழுப்புகின்றது.
தேசிய மக்கள் சக்தி (NPP) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்திருந்த நிலையிலும், இதுவரை அதற்கான கணிசமான முன்னேற்றங்கள் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை.
எனவே, பின்வரும் வினாக்களை நான் நீதி அமைச்சரிடம் எழுப்புகின்றேன்: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் உட்பட, நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலையும், ஒவ்வொரு வழக்கினதும் தற்போதைய சட்ட நிலைமைகளையும் நீதி அமைச்சு வழங்குமா?
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்வதையும், வழக்குத் தொடரல்களையும் விரைவுபடுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?
இவ்வாறான வழக்குகளில் நீதிமன்ற அமைப்பிற்குள் ஏற்படும் தாமதங்களை குறைப்பதற்காக என்ன விசேட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன?
நியாயத்தன்மை, விகிதாசாரம் மற்றும் பாகுபாடின்மை ஆகிய கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, நீண்டகால தடுப்புக் காவல் வழக்குகளை மறுஆய்வு செய்ய ஏதேனும் சுயாதீன வழிமுறைகள் அல்லது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனவா?
நீண்டகால அல்லது ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகள் அல்லது நடவடிக்கைகளில் நீதி அமைச்சு என்ன பங்கை வகித்துள்ளது?
அரசியல் கைதிகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக இதுவரை எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? போன்ற கேள்விகளாகும்..!

0 comments :
Post a Comment