நூருல் ஹுதா உமர்-
இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ரமழான் விசேட போட்டிகளின் பரிசளிப்பு விழா – 2026 நிகழ்வு நேற்று (13) புதன்கிழமை இறக்காமம் கலாசார மண்டபத்தில் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
மாணவர்களிடையே சமய, ஒழுக்க மற்றும் கல்வி விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு, ரமழான் மாதத்தின் ஆன்மீகப் பண்புகள் தொடர்பான புரிதல்களை வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் குர்ஆனை முறையாக ஓதல், குர்ஆன் மனனம், ஹதீஸ் மனனம், இஸ்லாமிய பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு சமய மற்றும் திறன் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும், பிரதேச செயலக கணக்காளர் ஐ.எல்.எம். றிபாஸ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல்.எம். றஸாக், நிருவாக கிராம உத்தியோகத்தர் நிலுபுல் குமார உள்ளிட்ட அதிகாரிகளும், இறக்காமம் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர். அதேவேளை, இறக்காமம் ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச். வஹாப் (இஸ்லாஹி), செயலாளர் அஷ்ஷெய்க் எம்.கே. றுவைஸ் (ஸலபி), ஜும்மா பள்ளிவாசல் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் திருக்குர்ஆன் பாராயணம் இடம்பெற்றதுடன், தொடர்ந்து வரவேற்புரை, சிறப்புரைகள், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வெற்றியாளர்களுக்கான கௌரவிப்புகளும் நடைபெற்றன. ரமழான் மாதம் மனிதர்களிடையே ஒழுக்கம், பொறுமை மற்றும் பகிர்வுத் தன்மையை வளர்க்கும் புனிதமான காலமாகும் என்றும், இவ்வாறான போட்டிகள் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் சமய அறிவு மேம்பாட்டிற்கும் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் நிகழ்வில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இளம் தலைமுறையினரை நல்லொழுக்கம், ஒற்றுமை மற்றும் சமயப்பற்றுடன் வளர்ப்பதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதையும் நிகழ்வு வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment