இருளில் மூழ்கும் சாய்ந்தமருது சிறுவர் பூங்கா



பராமரிப்பின்றி பாழடைந்து வரும் மக்கள் ஓய்வு மையம் – உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் வேண்டுகோள்

கல்முனை மாநகர சபையின் ஆளுகைக்குள் தற்போது இயங்கி வரும் சாய்ந்தமருது சிறுவர் பூங்கா, பராமரிப்பின்றியும் பாதுகாப்பற்ற நிலையிலும் காணப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

சாய்ந்தமருது பிரதேச சிறுவர்களின் நீண்டகால தேவைக்காக உருவாக்கப்பட்ட இச் சிறுவர் பூங்கா, ஆரம்பகாலங்களில் குழந்தைகள் விளையாடவும் குடும்பங்கள் ஓய்வு எடுக்கவும் இளைஞர்கள் உடற்பயிற்சி மற்றும் சமூகச் சந்திப்புகளுக்காகவும் பயன்படுத்தப்பட்ட முக்கியமான பொது இடமாக விளங்கியது. கடற்கரைப் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, சாய்ந்தமருதின் சமூக வாழ்வியலுடன் ஒன்றிணைந்த பொது சொத்தாகக் கருதப்பட்டது.

எனினும் அண்மைக் காலங்களில் பூங்கா முறையான பராமரிப்பின்றி காணப்படுவதால் அதன் இயல்பான அழகும் பயன்பாடும் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பூங்காவுக்குள் அமைக்கப்பட்ட மின் விளக்குகள் எரியாத நிலை ஏற்பட்டுள்ளதால் முழுப் பகுதியும் இருளில் மூழ்கி காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட கழிவறைகள் நீண்டகாலமாக மூடப்பட்டிருப்பதும் குடும்பங்களுக்கும் சிறுவர்களுக்கும் மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பூங்காவுக்கு வருகை தரும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களில் போதிய வெளிச்ச வசதிகள் இல்லாத காரணத்தால் தேவையற்ற மற்றும் சமூக விரோத செயல்கள் இடம்பெறுவதற்கான அபாயமும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பிலும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவரான அல் ஹாஜ் எம்.எஸ். முபாறக் ஆகியோர் உடனடியாக இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவரும் பைதுஸ்ஸகாத் அமைப்பின் தலைவரும் வர்த்தக சங்கத்தின் தலைவருமான அல் ஹாஜ் எம்.எஸ். முபாறக் அவர்களின் சமீபத்திய சமூகப் பணிகள் மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளன. குறிப்பாக சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியின் ஒரு பகுதியை சுத்தப்படுத்தி, அங்கு மின் விளக்குகள் பொருத்தி, மரக்கன்றுகள் நட்டு, தொடர்ச்சியாக அவற்றை பராமரித்து வருவதன் மூலம் அந்தப் பகுதி தற்போது குடும்பங்கள் பொழுதைக் கழிக்கும் அழகிய சூழலாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தினந்தோறும் பலரும் அந்தப் பகுதிகளுக்கு மக்கள் வருகை தருவதுடன், சமூக நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் முபாறக் அவர்களுக்கு பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதே சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா இருளிலும் அலட்சியத்திலும் மூழ்கிக் கிடப்பது மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களின் மனநலன், உடல்நலம் மற்றும் சமூக ஒற்றுமைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொது இடத்தை மீண்டும் உயிர்ப்பிக்க சம்பந்தப்பட்ட தரப்புகள் விரைந்து செயற்பட வேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த கோரிக்கையாகும்.








 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :