தகுதியுள்ள பல ஏழைக் குடும்பங்கள் இன்று அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.!




டற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், சட்டவிரோத கடற்தொழில்
நடவடிக்கைகளுக்காகக் கப்பம் பெறுகின்றமை தொடர்பில் அரசாங்கம் அவதானம்
செலுத்த வேண்டும்.

நேற்றையதினம் 10.04.2026 பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுக்கான 27/2
நிலையியல் கட்டளையின் கீழ் உரையாற்றுகையில் என்னால் முன்வைக்கப்பட்ட
கோரிக்கை மற்றும் கேள்விகள்.

இன்று எமது நாட்டிலே 'அஸ்வெசும' நலன்புரித் திட்டமானது 24 மில்லியன்
குடும்பங்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாகக்
கருதப்படுகின்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தத் திட்டத்திற்கான
தகுதிகளைத் தீர்மானிக்க அரசாங்கம் இன்னும் 2019 ஆம் ஆண்டு
மேற்கொள்ளப்பட்ட தரவுகளையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. 2019 ஆம்
ஆண்டிற்குப் பிறகு இந்த நாடு கோவிட் பெருந்தொற்றையும், வரலாற்றில்
எப்போதுமில்லாத மோசமான பொருளாதார நெருக்கடியையும் சந்தித்திருக்கின்றது.

உலக வங்கியின் தரவுகளின்படி, இலங்கையின் வறுமை விகிதமானது 11
சதவீதத்திலிருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நிலைமை
இவ்வளவு மோசமாக இருக்கும்போது, காலாவதியான தரவுகளை வைத்துக்கொண்டு
மக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் நிவாரணங்களை வழங்க முடியும்?
இதனால்தான் தகுதியுள்ள பல ஏழைக் குடும்பங்கள் இன்று அஸ்வெசும திட்டத்தில்
உள்வாங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக எனது மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், அங்கு 40
சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள்.
குறைந்தது இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு இந்த உதவி தேவைப்படுகின்றது.
ஆனால் வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும வழங்கப்படுகின்றது.
ஏனையோரின் நிலை என்ன? அவர்கள் முன்வைத்த மேன்முறையீடுகளுக்கு என்ன
நடந்தது?

அரசாங்கம் இன்று நூறு பில்லியன் ரூபாய்களை அஸ்வெசும திட்டத்திற்காக
ஒதுக்கியுள்ளதாகக் கூறுகின்றது. இந்த நிதி எங்கிருந்து வருகின்றது? வரவு
செலவுத் திட்டத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து இது
கழிக்கப்படுகின்றதா? அல்லது புதிய நிதி ஆதாரங்கள் தேடப்பட்டுள்ளதா?
என்பதை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். அதேபோன்று, அஸ்வெசும கிடைக்காத,
ஆனால் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் வைத்துள்ள
மாற்றுத் திட்டம் என்ன?

அஸ்வெசும நலன்தொகை திட்டம் சுமார் 2.4 மில்லியன் பயனாளி குடும்பங்களின்
தகுதியை 22 சமூக-பொருளாதாரக் குறியீடுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கிறது.
வறுமையை அளவிடுவதற்கான அரசின் அதிகாரப்பூர்வ அடிப்படையான Department of
Census and Statistics மேற்கொண்ட கடைசி முழுமையான குடும்ப வருமான மற்றும்
செலவினக் கணக்கெடுப்பு (HIES) 2019ஆம் ஆண்டுக்குரியது. 2022ஆம்
ஆண்டுக்கான HIES நடத்தப்படவில்லை; 2025ஆம் ஆண்டுக்கான HIES தற்போது
நடைபெற்று கொண்டிருக்கின்றது, இதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த இடைப்பட்ட காலத்தில், இலங்கை COVID-19 தொற்று, சுதந்திரத்திற்குப்
பிந்தைய மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் டிட்வா பேரழிவு
ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளது. இந்தச் சூழ்நிலைகள் வறுமை அளவை சுமார் 11%
இலிருந்து 25% மேல் உயர்த்தியுள்ளதாக World Bank மதிப்பிடுகிறது. மேலும்,
மேற்காசியப் போரின் தாக்கத்தால் விலைவாசி உயர்ந்து, பாதிக்கப்படக்கூடிய
குடும்பங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போதைய
தேசிய வறுமை மதிப்பீடு இல்லாமல் நலத்திட்ட முடிவுகள் எடுக்கப்படுவது
குறித்து நான் அமைச்சரிடம் விளக்கம் கோருகிறேன். அதன்படி, நான் கேட்க
விரும்புவது: 2019க்குப் பிந்தைய தேசிய வறுமை விகிதத்திற்கான
புதுப்பிக்கப்பட்ட மதிப்பீடு அரசிடம் உள்ளதா? அது வெளியிடப்பட்டுள்ளதா?
2025ஆம் ஆண்டுக்கான HIES முடிவுகள் எப்போது நிறைவுபெற்று பொதுமக்களுக்கு
வெளியிடப்படும் என்று அரசு எதிர்பார்க்கிறதா? 2025 HIES முடிவுகள்
வெளியிடப்பட்ட பின், அஸ்வெசும திட்டத்தின் அடுத்த கட்டம் ஆரம்பிக்கும்
முன் தகுதி அளவுகோல்களை மறுசீரமைப்பதற்கு அரசு உறுதி அளிக்கிறதா?
அப்படியானால், அதன் காலக்கட்டம் என்ன? சமீபத்திய கட்டண சுற்றின் படி,
மாவட்ட வாரியாக மிகவும் ஏழைகள், ஏழைகள், பாதிக்கப்படக்கூடியவர்கள்,
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் ஆகிய
பிரிவுகளில் செயலில் உள்ள மொத்த பயனாளிகள் எண்ணிக்கை என்ன?

அஸ்வெசும தகுதி தீர்மானங்களுக்கு எதிராக இதுவரை எத்தனை மேல்முறையீடுகள்
தாக்கல் செய்யப்பட்டுள்ளன? அவற்றில் எத்தனை தீர்க்கப்பட்டுள்ளன?
மேல்முறையீட்டாளரின் பக்கம் தீர்மானிக்கப்பட்ட சதவீதம் என்ன? (மாவட்ட
வாரியாகவும், பிரிவு வாரியாகவும்)

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை சலுகைகளுக்கு அப்பால்,
மேற்காசியப் போரின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவின்
உயர்விலிருந்து பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை பாதுகாக்க அரசு என்ன
கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளது? மேலும், அஸ்வெசும
திட்டத்தின் நிர்வாகத்தில் காணப்படும் தாமதங்கள், பிழைகள் மற்றும்
செயல்திறன் குறைபாடுகளை கருத்தில் கொண்டு, இந்தப் பாதுகாப்பு எந்த
முறையின் மூலம் வழங்கப்படும்?

இறுதியாக ஒரு விடயத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எமது மீனவ
சமூகத்தின் நலன்கள் குறித்துப் பேசும்போது, வடக்கு மாகாணத்தில்
இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட
அமைச்சர் துணை போவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அவர் கப்பம் பெறுவதாகவும்
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. நேர்மையாகச் செயற்படும்
அமைச்சர்கள் இருக்கும் இந்தச் சபையில், இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க
முடியாது. மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் அதிக
அக்கறை காட்ட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், சட்டவிரோத கடற்றொழில்
நடவடிக்கைகளுக்காகக் கப்பம் பெறுகின்றமை தொடர்பில் அரசாங்கம் அவதானம்
செலுத்த வேண்டும்.

வட மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கப்பம் பெறுகின்றார். அமைச்சர்
தொடர்பில் அவதானமாகச் செயற்படுங்கள். அடுத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை
இந்த அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்படலாம்.

இந்த நிலையில் சபையில் குறுக்கிட்ட அமைச்சர் சந்திரசேகர், "வட மாகாணத்தை
எடுத்துக்கொண்டால் தற்போது சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர்
தொடர்பில் நாடாளுமன்றத்தில் அதிகமாக நானே கருத்துக்களை முன்வைக்கின்றேன்.
அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க
வேண்டாம். அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுமாயின் நாடாளுமன்றத்திற்கு
அவற்றை முன்வையுங்கள்; இல்லையென்றால் சி.ஐ.டி-யில் (CID)
முறைப்பாடளியுங்கள்.அதன்பின்னர் நான் கப்பம் பெற்றுள்ளேனா இல்லையா என்பது
தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். சாணக்கியனாகிய உங்களுக்கு
எதிராக நான் மாத்திரமே குரல் எழுப்புகின்றேன். அதனை அடிப்படையாகக் கொண்டு
போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம். தயவுசெய்து அதனை
மீளப்பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.

இருப்பினும், தொடர்ச்சியாக உரையாற்ற நேரம் தருமாறு கோரிக்கை
விடுத்தமையால், குறுக்கிட்ட சபாநாயகர், "நீங்கள் சபை நடவடிக்கைகளுக்குப்
பாதிப்பை ஏற்படுத்துவீர்கள் என்றால் உங்களைச் சபையிலிருந்து வெளியேற்ற
நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.

இதற்குப் பதிலளித்த நான், "நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நான்
அமர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்குமாயின் நான் அமருகின்றேன்"
எனக் கூறித் தொடர்ந்தும் உரையாற்ற கோரிக்கை விடுத்தேன்.

"நீங்கள் அமரவில்லை என்றால் இந்தச் சபையிலிருந்து உங்களை வெளியேற்றுவேன்"
எனச் சபாநாயகர் மீண்டும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் செய்கின்ற மோசடி
மற்றும் ஊழல் தொடர்பில் விரைவில் நாடாளுமன்றத்திற்கு நம்பிக்கையில்லாப்
பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் என உறுதியாகத் தெரிவித்தேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :