அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் புதன்கிழமை (18) இடம்பெற்றது. ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கிடப்பதாக, அங்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட சடலம் சுமார் 5 அடி 6 அங்குல உயரமுடையதாகவும், 45 முதல் 50 வயதுக்குள் மதிக்கத்தக்க நபருடையதாகவும் ஆரம்பத்தில் கணிக்கப்பட்டது. சடலம் சிதைந்த நிலையில் இருந்ததாகவும் தெரியவந்தது. இது முதலை தாக்குதலா, தற்கொலையா அல்லது கொலை செய்து வீசப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அதே நேரத்தில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் காணாமல் போன நபர்கள் தொடர்பான முறைப்பாடுகள் ஏதும் பதிவு செய்யப்படாததால், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்தியின் மூலம் தகவல் அறிந்த உறவினர்கள், சம்பவ இடத்திற்கும் பின்னர் வைத்தியசாலைக்கும் சென்று சடலத்தை அடையாளம் கண்டனர். உயிரிழந்தவர் அக்கரைப்பற்று பகுதியில் பிறந்து, கோளாவில் 2 பகுதியில் வசித்து வந்த 51 வயதுடைய சாமித்தம்பி திவ்வியராஜ் என உறுதி செய்யப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன், அம்பாறை தடயவியல் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர், அதே நாளில் (18) சடலம் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டது.
மேலும், உயிரிழந்தவரின் மனைவி சுமார் ஒரு மாதத்திற்கு முன் மரணமடைந்திருந்ததாகவும், அதன்பின் அவர் உறவினர்களின் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment