1.5 கிலோமீட்டர் நீளமுடைய இந்த வீதி 36.7 மில்லியன் ரூபாய் அரச நிதி செலவில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது. இந்த திட்டம் பிரதேச மக்களின் நீண்டகால போக்குவரத்து சிரமங்களுக்கு தீர்வு வழங்கும் முக்கியமான அபிவிருத்தித் திட்டமாகக் கருதப்படுகிறது.
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதி அபிவிருத்திப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எஸ். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, சாய்ந்தமருது வரலாற்று சிறப்புமிக்க மண்ணாக இருந்தாலும் பல அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக பல அபிவிருத்திகளில் பிந்தங்கியிருந்ததாக குறிப்பிட்டார். இந்த மண்ணின் அபிவிருத்தி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது தமது பொறுப்பாகக் கருதி தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், சாய்ந்தமருதில் மூன்று முக்கிய பிரதான வீதிகள் உள்ளதாகவும், அவற்றில் ஒன்றாக விளங்கும் கல்யாண வீதி பிரதேச மக்களின் நாளாந்த வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார். இந்த வீதி ஊடாகவே பல மாணவர்கள் தங்களின் கல்வி நிறுவனங்களுக்கு பயணம் செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக கல்முனை ஸாஹிரா கல்லூரி மற்றும் மஹ்மூத் மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்கள் பெருமளவில் இந்த வீதியைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த வீதியை சீரமைக்குமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்ததாகவும், அதற்கான தீர்வாக தற்போது அரசாங்கம் நிதி ஒதுக்கி இந்த வீதியை காபட் வீதியாக மாற்றும் பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, வீதியில் காணப்படும் வடிகால் அமைப்புகள் காரணமாக வீதியின் அகலம் குறைவதாக மக்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், வடிகால்களை சீரமைத்து வீதியை மேலும் வசதியான முறையில் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதி, ஒஸ்மான் வீதி, அல் ஹிலால் வீதி உள்ளிட்ட பல வீதிகள் தற்போது காபட் வீதிகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் சாய்ந்தமருதில் மட்டுமன்றி அம்பாறை மாவட்டத்தில் தமது மேற்பார்வைக்குட்பட்ட 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கிராம அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனுடன், சாய்ந்தமருது மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் எதிர்காலத்தில் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக கரைவாகு திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களை மேம்படுத்துதல், நீர்ப்பாசன வசதிகளை உருவாக்குதல் மற்றும் பிரதேச விவசாயிகளுக்கு ஆதரவளித்தல் போன்ற திட்டங்கள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வீதிகள், பாலங்கள், வடிகால் அமைப்புகள், குடியிருப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம். சலீம் (ஷர்கி), சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், அக்கரைப்பற்று பிராந்திய பிரதம பொறியியலாளர் ஏ.எம். உவைஸ், கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் இசட்.ஏ.எம். அஸ்மீர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் யூ.எல். ஜௌபர், எம்.எல். நௌஷாத், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப், கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபீர், பிரஜாசக்தி தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கல்யாண வீதி அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த பின்னர் சாய்ந்தமருது மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, கல்வி, சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பெரும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :
Post a Comment