மாகாண சபை முறைமையானது சுதந்திர நாட்டின் பொதுப்பணத்தை வீண்விரயம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகவே நான் பார்க்கிறேன் என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார் .
மாகாண சபைத் தேர்தல் நாட்டுக்கு அவசியமற்றது என்று தலைப்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை யிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், மாகாண சபைத் தேர்தலை நடத்தி, மக்கள் பிரதிநிதிகளின் ஆடம்பரங்களுக்காக நிதியைச் செலவிடுவது தேவையற்ற ஒன்றாகும்.
மாகாண சபை பதவிகள் வெறும் அரசியல் திருப்திக்காக வழங்கப்படும் சலுகைகளாகவே நான் கருதுகிறேன் .
பொருளாதார ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்து, முறையற்ற நிர்வாகத்தினால் வங்குரோத்திருந்த இந்நாடு, தற்போதுதான் மெல்ல மெல்ல ஒரு சீரான நிலையை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கிறது.
இச்சூழ்நிலையில், மீண்டும் மாகாண சபைகளைச் செயற்படுத்தி, அதிகாரங்களை வழங்கினால் நாடு மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும்.
ஆகையினால், ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் யாதெனில்:
நாட்டின் அரசியலமைப்பில் உள்ள மாகாண சபை முறைமையை முழுமையாக நீக்க வேண்டும்.
அதற்குப் பதிலாக, அடிமட்ட மக்கள் சேவையை உறுதிப்படுத்தும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை மேலும் பலப்படுத்த வேண்டும்.
நாட்டின் எதிர்கால நலன் கருதி, வீண் செலவுகளைத் தவிர்த்து ஆக்கபூர்வமான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment