நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் மக்கள் பயன்பாட்டிற்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வந்த சம்மாந்துறை கல்லரிச்சல் மற்றும் மதீனா உம்மா வீதிகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மீண்டும் புனரமைக்கப்பட உள்ளன.
சம்மாந்துறை பிரதேச சபை தற்போதைய தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் மாகாண சபை உறுப்பினராகப் பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மேலான முன்மொழிவின் அடிப்படையில், i-Road திட்டத்தின் கீழ் இவ்வீதிகள் உள்வாங்கப்பட்டிருந்தன. எனினும், தொழில்நுட்ப காரணங்களால் இத்திட்டம் நீண்ட காலமாகத் தாமதமடைந்து நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில், பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் விசேட தலையீடு மற்றும் உரிய அனுமதிகளின் பேரில், வீதி புனரமைப்பிற்கான தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, குறித்த வீதிகளின் தற்போதைய நிலைமைகளை ஆய்வு செய்து தேவையான பரிந்துரைகளை வழங்கும் கள விஜயம் ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
அந்த விஜயத்தின் போது, பிரதேச சபை உறுப்பினர்களான நயீம் ஆசிரியர், பஹ்மி சுலைமாலெப்பை உள்ளிட்டோர், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது பிரதேச மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளும் கேட்டறியப்பட்டன.
அனைத்து ஆரம்பக்கட்ட ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் சில வாரங்களுக்குள் கல்லரிச்சல் சலாம் பள்ளி முன் வீதி மற்றும் மதீனா உம்மா வீதிகளின் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முக்கிய அபிவிருத்தித் திட்டம், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதுடன், வர்த்தகம் மற்றும் நாளாந்த வாழ்க்கையிலும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

0 comments :
Post a Comment