மனித வாழ்வா? தோட்ட பொருளாதாரமா? அரசாங்கம் சிந்தித்து செயலாற்ற வேண்டும் – முபாறக் முப்தி



பாறுக் ஷிஹான்-
லையக மக்களின் வாழ்வாதாரம் முக்கியமானதா அல்லது தேயிலை தோட்டங்களின் பாதுகாப்பே முக்கியமா என்பதை அரசாங்கம் தீவிரமாக சிந்தித்து, மனிதநேய அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர் முபாறக் முப்தி வலியுறுத்தினார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் பாமர மக்களின் உண்மையான பிரச்சினைகளை புரிந்து கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க செயற்படுவதாக சுட்டிக்காட்டினார். அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களை தொடர்ந்து அரசியல் களத்தில் சிலரால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் ‘பூனைக்கும் எலிக்கும் திருமணம்’ போன்றதாக காணப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

முஸ்லீம் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்த முபாறக் முப்தி, அந்த ஒற்றுமை சமூகத்தை ஏமாற்றுவதற்காக அல்ல, சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளை அரசியல் ரீதியில் முன்வைத்து தீர்வு காணும் நோக்கத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். வெறும் நிகழ்வுகளுக்காகவும், ஊடகங்களில் படம் காட்டுவதற்காகவும் உருவாகும் ஒற்றுமையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதாவுல்லாஹ் ரவூப் ஹக்கீமை எதிர்த்த அரசியலே முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இதன் காரணமாக கல்முனை – சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை – அக்கரைப்பற்று போன்ற ஊர்கள் பிரிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன என்றார். இந்நிலையில் தற்போது வெளிப்படும் அதாவுல்லாஹ் – ரவூப் ஹக்கீம் இணைவு சமூக நலனை அடிப்படையாக கொண்டது அல்ல என்பதே ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எனத் தெளிவுபடுத்தினார்.

மேலும் அனர்த்த காலங்களில் ஒற்றுமை என்ற பெயரில் ரவூப் ஹக்கீம், அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டோர் ஊடகங்களில் ஒன்றாக தோன்றி படக் காட்சிகளில் ஈடுபடுவதை நாம் காண்கிறோம். ஆனால் இத்தகைய அரசியல் பதவிகள் மற்றும் கூட்டணிகள் மூலம் எமது சமூகத்திற்கு இதுவரை எந்தவிதமான நிலையான நன்மைகளும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது முஸ்லீம் அரசியல் கட்சிகள் வாக்கு வங்கிகளை இழந்து, வங்குரோத்து நிலையை நோக்கி நகர்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர், இதற்கு தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியும் ஜனாதிபதி அனுரவின் செயற்பாடுகளும் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன என்றார். இதற்கு உதாரணமாக கல்முனை தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, ஜனாதிபதி அனுரவின் கட்சி வெற்றி பெற்றதை குறிப்பிடலாம் என்றும் அவர் கூறினார். இது அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது இம்மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோதும், அக்காலத்தில் ரவூப் ஹக்கீம் எந்தவிதமான கணிசமான உதவிகளையும் வழங்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் மலையக மக்களை வடகிழக்கு பகுதிகளில் குடியேற்ற வேண்டும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாததாகும் எனத் தெரிவித்தார். தேவையானால், சுமந்திரன் மற்றும் மனோ கணேசன் கூறுவது போன்று வட மாகாணத்தில் மட்டும் இவ்விடயம் பரிசீலிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேயிலை தோட்டங்களில் தொழில் செய்வதற்காகவே இந்தியாவிலிருந்து மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் என்பதை நினைவூட்டிய முபாறக் முப்தி, இன்றைய சூழலில் மலையக மக்களின் மனித வாழ்வாதாரம் முக்கியமா அல்லது தேயிலை தோட்டங்களின் தொடர்ச்சியே முக்கியமா என்பதை அரசாங்கம் தெளிவாக சிந்தித்து, அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

இந்த விசேட செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முஸ்னத் முபாறக், செயலாளர் எம்.எம். இர்பான், உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :