கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது மக்களின் சொத்து, அந்த சொத்தை நிர்வகிப்பதற்குரிய பொறுப்பை என்னிடம் கையளிப்பதற்கு கண்டி மாவட்ட மக்கள் தீர்மானித்துவிட்டனர்." - என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
ஒரு அரசியல்வாதியின் வகிபாகமும் பொறுப்புக்கூறக்கூடிய குடிமகனும் என்ற தொனிப்பொருளில் கண்டி மாவட்டத்தின் சுதந்திரமான அரசியல் மன்றத்தின் ஏற்பாட்டில் கண்டி ஓக் – ரே விருந்தகத்தில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துக் கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த செயலமர்வில் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ரவூப் ஹக்கீம், அப்துல் ஹலீம், சன்ன கலப்பத்திகே, சமிந்திரானி கிரியெல்ல, பாரத் அருள்சாமி உள்ளிட்ட விரிவுரையாளர்கள், கல்விமான்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்துக் கொண்டனர்.
பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்ததாவது,
' கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது தமது தனிப்பட்ட சொத்து என சிலர் நினைத்துக்கொண்டுள்ளனர். இது தவறு. பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது மக்களின் சொத்து. அதனை நிர்வகிப்பதற்கே தற்காலிக பொறுப்பாளராக தமது பிரதிநிதிகளை மக்கள் நியமிக்கின்றனர். அந்த பிரதிநிதி சிறப்பாக செயற்பட்டால் மீள ஒப்படைப்பார்கள். இல்லையேல் வெளியேற்றுவார்கள். கடந்தமுறை பிரதிநிதி சரியாக செயற்படவில்லை, நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதால்தான் மக்கள் அந்த வாய்ப்பை எனக்கு வழங்க உள்ளனர்.
2010 இல் எமது தலைவர் மனோ கணேசன் கண்டி மாவட்டத்துக்குவந்து தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை மீட்க போராடினார். சூழ்ச்சிகள், வன்முறை அரசியல்மூலம் அவரால் இலக்கை அடைய முடியவில்லை. அன்று அவர் விதைத்த விதைமூலம்தான் 2015 இல் அறுவடை கிடைத்தது என்பதை மறக்ககூடாது.
மலையக மக்கள் முழுமையாக தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அதற்குரிய முயற்சிகளையே முன்னெடுத்து வருகின்றேன். எமது மக்கள் எல்லா விடயங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை அனுமதிக்க முடியாது. விடிவை நோக்கி செல்வதற்குரிய ஏற்பாடாக காணி உரிமை வழங்கப்பட வேண்டும். காணி உரிமையை வழங்குவதற்குரிய வேலைத்திட்டத்தை 2020 இல் நான் ஆரம்பித்தேன். முதற்கட்டமாக ஆயிரம் வீடுகளுக்கு உரித்து வழங்கப்பட்டது. எனவே, இலக்கை நோக்கி பயணிக்ககூடிய வேலைத்திட்டம் எனக்கு உள்ளது.
குறிப்பாக கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்குரிய காணி உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்." - என்றார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment