உள்ளூராட்சிமன்ற தேர்தல் சம்மந்தமான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றில் பதியப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான சட்டத்தரணி அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா கட்சி காரியாலயத்தில் இன்று (22) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு போதாமை உள்ளிட்ட பல காரணங்களை காட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னால் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று முழு மனதுடன் செயற்பட்டமை பல்வேறுதரப்பட்ட பேசு பொருளாக அந்த காலத்தில் பேசப்பட்டது.
ஆகவே இதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உட்பட மூன்று அமைப்புக்களும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவினை சமர்ப்பித்தது குறிப்பாக அடிப்படை உரிமை மீறல் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது .
இன்று அதற்கான தீர்ப்புவெளிவந்தது இதன் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க உட்பட தேர்தல் ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த அதிகாரிகள் உட்பட பலர் தமது கடமைகளை செய்ய தவறியிருக்கிறார்கள் என்ற தீர்ப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.
இலங்கை அரசியலமைப்பின் 33ஆவது சரத்தின் ( D )அம்சத்தின் பிரகாரம் ஜனாதிபதி என்னும் நபர் இலங்கையில் நீதியான தேர்தலை நடாத்த அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்கள் நிதியமைச்சராக கடமை புரிந்த காலத்தில் ஒரு நிதியமைச்சர் என்ற அடிப்படைமில் அவர் தேர்தல் காலப்பகுதியில் சரியான நிதியினை ஒதுக்கீடு செய்யாமல் அவர் இவ்வாறு தமது கடமையில் இருந்து விலகியிருப்பதனை உச்ச நீதிமன்றம் ஒரு குற்றமாக கருதியிருக்கின்றது.
இதன் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரனை ஒன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது. இலங்கையின் அரசியல் அமைப்பை மீறிய ஒரு ஜனாதிபதியாக இந்த ஜனாதிபதி வரலாற்றில் இடம் பெறுகின்றார்.
பாரிய அரசியல் நெருக்கடி தற்போது ஏற்பட்டு கட்சித் தாவல்களும் இடம் பெற்றுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளதுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வரிதாக்கிய ஹரீன் பெர்ணாண்டோ மற்றும் மனூச நாணயக்கார போன்றவர்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டு எரி பொருள் , வாகனம் என பல வரப்பிரசாதங்களை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் அதிகார வெறி நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வதற்கு வழி வகுத்துள்ளது .இன்றைய தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உயர் நீதிமன்ற தீர்பாக மாறியுள்ளது.எதிர் கட்சி தலைவர் கூட ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் குற்றப் பிரேரனை கொண்டு வரலாம். அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தேசிய மக்கள் சக்தியுடன் கைகோருங்கள் என்றார்
0 comments :
Post a Comment