நாட்டில் கடந்த ஈராண்டு காலப்பகுதிக்குள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் மலையக மக்கள் தொடர்பான அவரின் அக்கறை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இன்று (18.07.2024) கொட்டகலையில் தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
அவர்கள் கூறியவை வருமாறு,
ஜீவன் தொண்டமான்
நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து ஜனாதிபதி மீட்டுள்ளார். கடந்த இரு வருடங்களில் பல வேலைத்திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பள பிரச்சினை தொடர்பிலும் அதிக அக்கறையுடன் செயற்பட்டார். தேசிய சபையில் எடுக்கப்பட்ட முடிவு ஜனாதிபதிக்கு தொலைபேசி வாயிலாக அறிவிக்கப்பட்டது. மலையக மக்கள் தனது பக்கம் நிற்பது பலம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
செந்தில் தொண்டமான்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனநாயக முறைப்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் முடிவை பெரும்பாலான உறுப்பினர்கள் தெரியப்படுத்தினர். கட்சி தலைமை என்ற அடிப்படையில் அதனை நாம் ஏற்றுள்ளோம். தேசிய சபைக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இவை சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்.
ராமேஷ்வரன்
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு முடிவெடுத்தோம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். அவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். ஜனாதிபதியின் ஆட்சியின்கீழ் அடுத்த ஐந்தாண்டுகளில் மலையகத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
0 comments :
Post a Comment