அமெரிக்க-இலங்கை மக்களுக்கிடையிலான உறவுகளை அடிக்கோடிட்டுக்காட்டிய கலாநிதி அலன் லைட்மன்கொழும்பு அமெரிக்க மத்தியநிலையத்தில் இடம்பெற்ற கலாநிதி அலன் லைட்மனின் ஊக்கமளிக்கும் விரிவுரை

புகழ்பெற்ற அமெரிக்க பௌதீகவியலாளரும் அதிகளவில் விற்பனையான நூல்களின் எழுத்தாளருமான, எம்ஐடி கலாநிதி அலன் லைட்மனின் இலங்கை வருகைக்கு உதவி செய்வதில் அமெரிக்கத் தூதரகம் பெருமையடைகிறது. மே 31 ஆம் தேதி அமெரிக்க மத்திய நிலையத்தில் கலாநிதி லைட்மன் ஒரு ஊக்கமளிக்கும் சொற்பொழிவை ஆற்றினார். இலங்கையின் கல்வி, கலை மற்றும் விஞ்ஞான சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதியின பாரியார் பேராசிரியை மைத்ரீ விக்கிரமசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். கலாநிதி லைட்மனின் விரிவுரையானது, பிரபஞ்சத்தில் எமது முக்கியத்துவமின்மையையும் அதேபோல், இந்த பிரபஞ்சத்தில் உள்ளவர்கள் மற்றும் அதன் கண்காணிப்பாளர்கள் என்ற வகையில் எமது தனித்துவமான நிலையின் மகத்தான முக்கியத்துவத்தையும் பிரதிபலித்து ஆன்மீக பொருள்முதல்வாதம், இயற்கை மற்றும் ஏனைய மக்களுடனான தொடர்பின் எமது உணர்வுகள் மீது அவனதானம் செலுத்துவதாக அமைந்திருந்தது. அமெரிக்க மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வானது ஒரு துடிப்பான கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவித்ததுடன் இரு நாடுகளுக்குமிடையே நீடித்து வரும் கலாச்சார உறவுகளை எடுத்துக் காட்டியது.
கலாநிதி லைட்மன் தனது இலங்கை விஜயத்தின் போது, ஜயந்த பிரேமச்சந்திர மன்றம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை ஆரம்பித்து வைத்து மறைந்த தனது நண்பரான இலங்கைக் கலைஞர் ஜெயந்த பிரேமச்சந்திரவுக்கு அஞ்சலி செலுத்தினார். பிரேமச்சந்திர தான் இறப்பதற்கு முன்பு பொஸ்டன் நகரில் காட்சிப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருந்த புத்தாக்க மரபை இக்கண்காட்சி கொண்டாடுகிறது. மக்களிடையே தொடர்புகளை உருவாக்குவதில் கலைக்கு இருக்கும் ஆற்றலை கலாநிதி லைட்மனின் வருகை குறிப்பதுடன் இலங்கை மக்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் இடையிலான பரஸ்பர புரிதலை ஆழப்படுத்துவதில் அமெரிக்கா கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கலாநிதி லைட்மனை இலங்கைக்கு வரவேற்ற, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் “ஒரு புகழ்பெற்ற கோட்பாட்டு பௌதீகவியலாளராகவும் மற்றும் ஒரு நாவலாசிரியராகவும், கலை, மானுடவியல் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றிற்கிடையேயான இடைவெளியை கலாநிதி அலன் லைட்மன் குறைக்கிறார். படைப்பு மற்றும் விஞ்ஞான செயன்முறைகள், உள்ளுணர்வு மற்றும் கற்பனையின் பங்கு, ஐன்ஸ்டீனின் பணி, விஞ்ஞானத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையிலான சந்திப்பு, மற்றும் மனித இயல்பின் அதிசயம் மற்றும் பலவீனம், உயிருடன் இருப்பதென்றால் என்ன – என்பன போன்ற விடயங்களில் அவரது விரிவுரைகள் எம் அனைவருக்குள்ளேயும் இருக்கின்ற சிந்தனைகளுடன் ஆழமாக எதிரொலிக்கின்றன. கலாநிதி லைட்மன் போன்ற தொலைநோக்கு பார்வையுடைய அமெரிக்கர்களை பார்வையாளர்களுடன் ஈடுபடுத்துவதற்கும், எமது நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்குமான இந்நிகழ்வினை எமது அமெரிக்க மையத்தில் நடத்துவதில் நாம் பெருமையடைகிறோம்.” எனத் தெரிவித்தார்.

அமெரிக்க தூதரகத்தின் அமெரிக்க மத்தியநிலையங்களின் வலையமைப்பு பற்றி: இலங்கையில் மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் மாத்தறை நகரங்களில் அமைந்துள்ள எமது அமெரிக்க மத்திய நிலையங்களின் வலையமைப்பின் ஊடாக கலாநிதி லைட்மேனின் சொற்பொழிவு போன்ற ஊடாட்டங்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. கல்வி வளர்ச்சி, கலாச்சார பரிமாற்றம் மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவற்றை சுறுசுறுப்பான இந்நிலையங்கள் ஊக்குவிக்கின்றன. புத்தகங்கள், டிஜிட்டல் வளங்கள், மல்டிமீடியா உள்ளடக்கங்கள் மற்றும் நிகழ்நிலை தரவுத்தளங்கள் உட்பட பரந்தளவிலான வளங்களுக்கான இலவச அணுகலை வழங்கி, புலமைசார் ஈடுபாட்டின் மையங்களாக எமது அமெரிக்க மத்தியநிலையங்களின் வலையமைப்பு செயற்படுகிறது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும், கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்யும் செயற்திட்டங்களில் ஒத்துழைப்பதற்கும் தேவையான வாய்ப்புகளை இந்நிலையங்கள் வழங்குகின்றன. ஆங்கில மொழி கற்றல், தொழில்முனைவு, STEM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) மற்றும் அமெரிக்க இலக்கியம் மற்றும் வரலாறு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு இலவச பாடநெறிகள், செயலமர்வுகள் மற்றும் நிகழ்வுகளை அமெரிக்க மத்தியநிலையங்கள் நடத்துகின்றன. இந்தச் செயல்பாடுகள் பங்கேற்பாளர்களின் திறன்களை மேம்படுத்துவது மட்டுமன்றி, பல்வகைப்பட்ட சிந்தனைகள் மற்றும் யோசனைகளுக்கான ஒரு ஆழ்ந்த அங்கீகாரத்தினையும் பேணி வளர்க்கின்றன.

கலாநிதி அலன் லைட்மன் பற்றி: ஒரு தொலைநோக்கு அமெரிக்க பௌதீவியலாளரும் சர்வதேசரீதியில் அதிகம் விற்பனையாகும் நூல்களின் எழுத்தாளருமான கலாநிதி அலன் லைட்மன், அறிவியலுக்கும் கலைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறார். அவர் விஞ்ஞானம், ஆன்மீகம் மற்றும் தத்துவம் என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபடும் பரப்புகளை ஆராய்கிறார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா தொழிநுட்பவியல் நிறுவனம் ஆகியவற்றில் பட்டம் பெற்ற கலாநிதி லைட்மன், கோர்னெல், ஹாவர்ட் மற்றும் எம்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மதிப்புமிக்க பதவிகளை வகித்துள்ளார். ஐன்ஸ்டீனின் கனவுகள் எனும் அவரது நாவல் சர்வதேசரீயில் அதிகளவில் விற்பனையானதுடன் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஒரு பௌதீகவியலாளராகவும் மற்றும் சிறந்த ஒரு நாவலாசிரியராகவும் விளங்கும் லைட்மன் MIT பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் மற்றும் மானுடவியல் எனும் இரு துறைகளுக்காகவும் ஒரு இணைந்த நியமனத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது பேராசிரியராவார். கல்வித் துறைக்கு அப்பால், கம்போடியாவிலும் அதற்கு அப்பாலும் கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சி ஆகியவற்றின் ஊடாக பெண் தலைவர்களை வலுவூட்டும் ஹார்ப்ஸ்வெல் மன்றத்தினை அவர் நிறுவியுள்ளார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :