இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும்.- டாக்டர் கியாஸ் சம்சுடீன்



தொடர் 19

இலங்கை மருத்துவக் கல்லூரியின் ஆரம்ப கால கற்கை நெறிகள்

மருத்துவத் துறை மற்றும் மருந்தகங்கள் துறை என இரு துறைகளை கொண்டிருந்த இலங்கை மருத்துவ கல்லூரியின் மருத்துவத் துறை LMS கற்கை நெறி மற்றும் அப்போதிகரி வைத்தியர்களை உருவாக்கும் இன்னுமொரு பாடநெறியையும் கொண்டிருந்தது .

b) ஜூனியர் மருத்துவத்துறை.

1869 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் , மேற்கத்தேய மருத்துவத்தை இந்த நாட்டின் மக்களுக்கு அறிமுகப்படுத்திய போது தொற்று நோய் வைத்தியசாலை களையும் ஒரு சில பொது வைத்தியசாலைகளையும் நாட்டின் முக்கிய நகரங்களில் நிர்மானித்தனர்.

பின்னர் டிஸ்பன்ஸரி முறை மூலம் கிராமப்புறங்களுக்கு ஆங்கில வைத்திய சேவையை கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தினர்.

நிபுணத்துவ மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்கு ஏற்படும் செலவு, காலவிரயம், உடனடி தேவை போன்றவற்றை கருத்தில் கொண்டு ஜூனியர் மருத்துவ சேவை என்று அழைக்கப்படும் மருத்துவ சேவைக்கு அப்போதிகரி வைத்தியர்களை உருவாக்கும் திட்டம் டாக்டர் கின்சியின் எண்ணக்கருவிலிருந்து வடிவமைக்கப்பட்டது.

கொழும்பில் முதல் மருத்துவப் பள்ளி 1870 இல் நிறுவப்பட்டு மூன்று ஆண்டுகள்(LMS) டிப்ளோமா அறிமுகம் செய்யப்பட்ட சமகாலத்தில் இரண்டு வருட அப்போதிகரி பயிற்சி ஆரம்பிக்க பட்டது.

இந்தத் துறையானது, அரச அபோதிகரி பதவிக்கு மாணவர்களைத் தகுதிபெற இரண்டு வருட பாடத்திட்டத்தை வழங்கியது . கல்விக் கட்டணங்கள் எதுவும் இல்லாமல் , பாடநெறியின் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையில் அரச ஓய்வூதியம் பெறும் பதவிக்கு நியமிக்கப்பட்டனர்.

​​16- 25 வயதுக்கு உட்பட் நல்ல குணநலன் உள்ள கணிதம், ஆங்கிலம், தாய் மொழி அல்லது லத்தீன்,அடங்கிய பாடங்களுடன் பொதுத் தேர்வில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை ஜூலையில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கு 100 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

முதல் தேர்வில் தேர்ச்சியின் பின் இந்தக் கட்டணம் மீளளிக்கப்படும். இது தவிர வேறு எந்த கட்டணமும் இந்த பாடநெறிக்கு இருக்கவில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும் .
மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகள் துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
மூன்று பருவகாலங்களில் (terms ) தொடக்க வேதியியல், உடற்கூறியல், உடலியல். மருந்தியல் , மருந்து விநியோகித்தல் விரிவுரைகள் பூர்த்தி செய்த மாணவர்கள் முதல் தேர்வு பரீட்சைக்கு அனுமதிக்கப் பட்டனர்.

ஆண்டுக்கு இரண்டு முறை மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் இரண்டாம் அபோத்கரிஸ் தேர்விற்கு முதல் அபோதிகரிஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற,19 வயதை எட்டிய மூன்று பருவ காலங்கள் கொண்ட மெட்டீரியா மெடிகா,மருந்தகநடைமுறை பாடநெறி, கிளினிகல் மருத்துவம் மற்றும் சுகாதாரம், கிளினிகல் அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேற்றியல் பாட நெறிகளில், பரீட்சைக்கு தோற்றி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, காலியிடங்கள் இருந்தால், அரசு மருந்தகங்களில் நியமனம் பெற்றனர். மீள் பரீட்சைக்கு ரூ 15 மட்டும் செலுத்தப்படவேண்டும்.

LMS டிப்ளோமா வைத்தியர்கள்


சேவையில் சேர்ந்த உடன் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யும் நடைமுறை
போலல்லாது இவர்கள் 20 வருட சேவையின் பின்னரே பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த இருவகை வைத்தியர்களும் 1927ம் வருட 26ம் மருத்துவ கட்டளைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த இவர்களுடைய பெயர்ப்பட்டியல் 1935 ம் வருட 8110ம் இலக்க இலங்கை அரச வர்த்தமானியில்
பிரசுரிக்கப்பட்டிருந்தது.

LMS டிப்ளோமாவை போல் அப்போதிகரி பயிற்சி நெறியின் பயிற்சி கால அளவை படிப்படியாக அதிகரிக்க நிதி நிலைமை மற்றும் ஆளணி தேவையை கருத்தில் கொண்டு பிரித்தானியர்கள் விரும்பவில்லை.

1960 ஆம் ஆண்டுக்கான சுகாதார சேவைகள் இயக்குநரின் நிர்வாக அறிக்கையின் படி ஐந்தாண்டுகள் திருப்திகரமான சேவையை முடித்த அப்போதிகரி மருத்துவர்களை மூன்று ஆண்டு சேவைக்கால பயிற்சியின் பின் உடன் பதிவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது வழமையான தொழிற்சங்க எதிர்ப்பின் காரணமாக சாத்தியமாகவில்லை.

உதவி மற்றும் பதிவு வைத்தியர்களுக்கான பயிற்சி நெறி இருப்பினும் சுதந்திரத்திற்கு பின் 1964 இல் அப்போதிகரி பயிற்சி நெறி கைவிடப்பட்டு இலங்கை பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் குழாமினால் வடிவமைக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் கொண்ட உதவி வைத்தியர்களுக்கான பாடநெறி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பயிற்சி நெறியை கற்பவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கிளினிக்கல் மருத்துவ சேவையை மட்டும் கருத்திலேடுத்து தடையவியல் தவிர்ந்த அனைத்து மருத்துவ பாடங்களும் உள்ளடக்கப்பட்டு பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. வழமையான பல்கலைக்கழக விடுமுறை இடைவேளையின்றி குறித்த 3 வருட கால எல்லைக்குள்

மேம்படுத்தப்பட்ட துரித பயிற்சி நெறி அளிக்கப்பட்டதன் விளைவாகவும் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யும் காலம் 8அல்லது 4 வருடங்களாக குறைந்தது. மேலும் 1980 இற்கு பின் அனுமதிக்கான கல்வித்தகைமை க பொ த உயர்தர உயிரியல் விஞ்ஞான பிரிவில் 4 பாடங்கள் சித்தி என கட்டாயமாக்கப்பட்டு, போட்டி பரீட்சைக்குபின் மாணவர்கள் தேரிவு செய்யப்பட்டதனால் பதிவுசெய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ அலுவலர்கள் சுகாதார அமைச்சில் மருத்துவப் பணியாளர்களாக 25.04.1980 இல் வகைப்படுத்தப்பட்டனர்.
அரசின் தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட சிறந்த பெறுபெறு பெற்ற மாணவர்களே இந்த பயிற்சிநெறிக்கு 80 களின் பின் உள்வாங்கப்பட்டனர்.

உதவி வைத்தியர்களுக்கான பயிற்சி நெறி 1995 வரை கொழும்பு மருத்துவ பீடத்திற்கு மேலதிகமாக பேராதனை மற்றும் யாழ்ப்பாண மருத்துவபீடத்திலும் நடைபெற்றது. அதில் சித்தி அடைந்தவர்கள் உதவி வைத்திய அதிகாரிகளாக(AMO )சுகாதார தினைக்களத்தில் எல்லா தரத்திலான வைத்தியசாலைகளுக்கும் நியமனம் பெற்றனர்.

1995 இற்கு பின் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்விகற்ற பட்டதாரி மருத்துவ மாணவர்கள் அதிகளவில் காணப்பட்டதனால் பயிற்சிநெறி தொடர்ந்து நடைபெறவில்லை.

எமது பிராந்தியத்தின் முதல் அப்போதிகரி வைத்தியராக 01.01.1896 இல் சித்தியடைந்த Dr. அஹமது லெவ்வை முஹம்மது இப்ராஹிம் காரியப்பர் காணப்படுகிறார். இவர் M.S காரியப்பரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து இவருடைய மகன் Dr. முஹம்மது இப்ராஹிம் சாலிம் காரியப்பரும் ( அக்கரைப்பற்று Dr. நிஹால் காரியப்பரின் தந்தையின் தந்தை ) தந்தையின் வழியை பின்பற்றி எமது பிராந்திய மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்கள் .

அறிவியல் மாணவர்களின் அனுமதி .

மருத்துவ துறையின் LMS மற்றும் அப்போதிகரி கல்விக்கு மேலதிகமாக அறிவியல் மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தி எந்தவொரு பாலினத்தவரும் LMS முன் அனுமதி பரீட்சைக்கு அல்லது அப்போதுகரிஸ் வகுப்பில் இலகுவாக கற்பதற்கு தங்களை தயார் படுத்த கொழும்பு மருத்துவ கல்லூரியில்

உடலியல்,வேதியல், இயற்பியல்,மற்றும் உயிரியல் கற்பதற்காக அறிவியல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

II. மருந்தகங்கள் துறை.

மருத்துவ துறைக்கு மேலதிகமாக மருந்தகங்கள் துறை என்று ஒன்றும் இருந்தது. இதில் துணை மருத்துவ சேவை உத்தியோகத்தினரான மருந்தாளர்கள் மற்றும் மருந்து விநியோகிப்போரும் பயிற்றுவிக்கப்பட்டனர்.

மருந்தாளர்கள்களுக்கான பயிற்சி நெறி ஓராண்டு அடிப்படை கோட்பாடு (Theory) மற்றும் ஓராண்டு நடைமுறை(Practical) பயிற்சி என இரு வருடங்களை கொண்டிருந்தது. பயிற்சியின் முடிவில் 26ம் கட்டளை சட்டத்தின் படி மருத்துவ கவுன்சிலில் வேறு ஒரு பிரிவில் பதிவு செய்யப்பட்டு அரச வைத்தியாசாலைகளில் மருந்தாளர்களாக நியமிக்கப்பட்டனர். மருத்துவர்களாக பதிவு செய்ய குறித்த கால எல்லையை நிறைவு செய்யாத அப்போதிகரி வைத்தியர்களும் இந்த பிரிவின் கீழ் பதிவு செய்ய அனுமதிக்கப் பட்டிருந்தனர். பின்னர் இந்த பயிற்சி நெறி களுத்துறை NIHS சுகாதார கற்கை நிலையத்திற்கு மாற்றப்பட்டது.


(Photo courtesy of Dr.Shams Nihal Kariyappar)

Reference.
Blue book 1892
Ceylon Government Gazette 1932,1935.

தொடரும்......

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :