இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும்.- கியாஸ் சம்சுடீன்தொடர் 06

பிரிட்டிஷ் இலங்கையில் மேற்கத்திய வைத்திய முறை அறிமுகமும் சுதேச வைத்திய துறையின் வீழ்ச்சியும்
க்களின் நல்வாழ்வுக்காக சுகாதார சேவையை வழங்குவதற்கு அரச கருவூலத்திலிருந்து நிதி ஆதாரங்களை ஒதுக்குவது தங்கள் பொறுப்பு என்று பண்டைய சிங்கள மன்னர்கள் கருதி சுகாதார சேவை மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கியும் வந்தனர் .

தொடர்ச்சியான வெளிநாட்டுப் படையெடுப்புகள் முதலில் பகுதியாகவும் பின்னர் முழுமையாகவும் முடியாட்சியின் வலிமையைக் குறைத்ததோடு , அரச ஆதரவை அனுபவித்து வந்த ஆயுர்வேதம் அடங்கலாக பண்டைய கலைகள் மற்றும் கைவினைகள் பொதுவான ஒரு அழிவுக்குள்ளானது. இது சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கும் (1505-1948) மேலாக தொடர்ந்தது.

ஆயுர்வேதத்தின் மறுமலர்ச்சியானது நிதிப் பற்றாக்குறையால் ஊனமுற்ற சமூகத்தின் உயர் முன்னுரிமையாக மாறியது. காலனித்துவ அரசாங்கத்தின் அனுசரணை இல்லாத நிலையில், அதன் நோக்கங்களை மேம்படுத்த தனியார் பங்களிப்புகளைச் சார்ந்திருக்க வேண்டியும் இருந்தது.

இதன் தொடர்ச்சியாக கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் ஆயுர்வேதம் உட்பட உள்ளுர் கலைகள் புத்துயிர் பெறும் நோக்கத்துடன் இலங்கை சமூக சீர்திருத்த சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

பண்டைய சிங்கள மன்னர்களின் கீழ் அரச ஆதரவை பெற்றிருந்த
பாரம்பரிய மருத்துவம், இலங்கையை கைப்பற்றி ஆட்சி செய்த மூன்று ஐரோப்பிய காலனித்துவ சக்திகளால் , குறிப்பிடத்தக்க பின்னடைவை சந்தித்து அதன் மகிமையை இழந்திருந்த போதிலும் மேற்கத்திய வைத்திய முறையை இந்நாட்டுக்கு அறிமுகம் செய்த பெருமை காலனித்துவ ஆட்சியாளர்களையே சாரும். அதிலும் விசேடமாக பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின் போதே இலங்கை மக்களுக்கு மேற்கத்திய வைத்திய சேவையை பெறும் வாய்ப்பு கிட்டியது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஆங்கிலேயர்கள் பாரம்பரிய மருத்துவத்தின் மகிமையை அவ்வளவாக உணர்ந்ததாக தெரியவில்லை பல ஆய்வறிக்கைகள் படி அவர்களின் ஆட்சியின் கீழ் பாரம்பரிய மருத்துவ நிபுணர்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவர்களை அவர்கள் கருத்திலெடுக்கவில்லை என்பதுடன்,

குறிப்பிடப்பட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு பாரம்பரிய மருத்துவத்தை வளர்ப்பதில் அற்ப ஆர்வம் இருந்தது என்பதையும் இந்த அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய மருத்துவத்தின் முன்னேற்றங்கள் மீதான நம்பிக்கை, பிரித்தானிய அதிகாரிகளை இலங்கையில் தங்களுக்கு பரீட்சையாமில்லாத சுதேச வைத்தியத்தில் குறைந்த ஆர்வத்தையே காட்டத் தூண்டியது.

பெருந்தொகையான பிரித்தானிய இராணுவத்தினர் மற்றும் நிர்வாகிகளுக்கும் அவர்களின் குடும்ப அங்கத்துவத்தினருக்கும் தேவையான மருத்துவ தேவைகளை கவனிக்க முதலில் ராணுவ வைத்தியர்களையே பயன்படுத்தினர்.

பெருந்தோட்டங்களில் பணிபுரியும் மக்களை மேலாண்மை செய்யவும் அதிக எண்ணிக்கையிலான ஐரோப்பியரை நாட்டிற்கு வரவழைத்ததன் மூலம் புதியவகை தொற்று நோய்களான யோவ்ஸ்(பறங்கிக் காச்சல் ), பெரியம்மை மற்றும் பால்வினை நோய்கள் போன்ற புதிய நோய்கள் ஐரோப்பா மற்றும் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட காரணமாயிருந்தது .

இந்த சூழ்நிலையில், புதிதாக தோன்றிய இந்த நோய்களை இனம் காணவும் குணப்படுத்தவும் பாரம்பரிய மருத்துவர்கள் தவறியதும் பாரம்பரிய மருத்துவத்திற்கு ஏற்பட்ட மற்றுமொரு சவாலாகும். மேலும்

பாரம்பரிய மருத்துவர்கள் காலியில் பிளேக் நோயைக் கண்டறிவதில் தோல்வியடைந்ததும் பொது மக்களிடத்திலும் , மேற்கத்திய மருத்துவர்களை விடவும் ஒப்பீட்டளவில் குறைவான நம்பகத்தன்மையைக் கொண்டிருக்க காரணமாயிற்று .

மேற்கத்திய பயிற்சி பெற்ற மருத்துவ வல்லுநர்களான இலங்கை மற்றும் ஐரோப்பியர்கள், பாரம்பரிய வைத்தியர்களுக்கு அளிக்கப்பட்ட அரசாங்க அங்கீகாரம் மற்றும் நிதியுதவி சலுகைகளை தங்கள் நலன்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதினர்.

இதனால் , பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்த பணத்தை முதலீடு செய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை, மாறாக அவர்கள் மேற்கத்திய மருத்துவத்தை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருந்தனர். இது தவிரவும் மேற்கத்திய மருத்துவர்கள் பாரம்பரிய மருத்துவர்களை விடவும் அரசினால் உயர்ந்த முறையில் நடத்தப்பட்டனர். மேலும் பாரம்பரிய வைத்தியர்கள் தங்கள் சிகிச்சையில் ஓபியத்தைப் பயன்படுத்துவதை பிரித்தானியர் தடை செய்தனர் . இவையனைத்தும் பாரம்பரிய மருத்துவத்தின் வீழ்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை செய்தன.

இதற்கிடையில், அபின் மீதான தடையால் அதிருப்தி அடைந்த சுதேச வைத்தியர்கள் விதியை மாற்றக்கோரி கிளர்ந்தெழுந்து,1905 இல் உருவாக்கிய சிங்கள மருத்துவ சங்கத்தின் ஆதரவுடன் இலங்கை சட்ட சபையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததுடன் லண்டனில் உள்ள காலனிகளின் செயலாளராக இருந்த லார்ட் எல்ஜின் அவர்களுக்கும் தெரிவித்தனர்.

1909 ஆம் ஆண்டு அரசாங்கம் ஒரு புதிய கட்டளைச் சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரை சிங்கள மருத்துவ சங்கமும் பொதுமக்களும் அபின் மீதான அரசாங்கத் தடைக்கு எதிராக தமது பிரச்சாரத்தைத் தொடர்ந்தனர். ​​தடையை நீக்குவதற்கான கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த ஆளுநர், அலோபதி மருத்துவம் போன்று இலங்கையில் சுதேச வைத்திய நடைமுறையானது அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில் இல்லை என்றும் மேலும் தடையை நீக்குவது திறமையற்ற மருத்துவர்களை தவறாக ஒபியத்தை பயன்படுத்த ஊக்குவிக்கும் என்றும் வாதிட்டார்.

காலனித்துவ அலுவலகம் ஆளுநரின் கருத்தை நிராகரித்ததுடன், இலங்கை மருத்துவக் கல்லூரியின் அப்போதைய பதிவாளர் டாக்டர். ஏ.ஜே. சால்மர்ஸிடம் ஆலோசனை கேட்டது.
பாரம்பரிய சிகிச்சையில் ஓபியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த சால்மர்ஸ், தடை நியாயமற்றது என்று கருத்துத் தெரிவித்ததோடு, விரைவில் அதை அகற்ற பரிந்துரைத்தார். தடை நீக்கம் உண்மையான வைத்தியர்களுக்கு உதவும் என்று அவர் நம்பினார்.

ஆளுநரால் டாக்டர். சார்மர்ஸ் அடங்கலாக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணையின் முடிவில், கவர்னர், அபின் மீதான தடையை மாற்றியமைக்க முடிவு செய்தார்.

பாரம்பரிய மருத்துவ ஆர்வலர்களின் பலத்த முயற்சிகளுக்குப் பிறகு, அரசு தயக்கத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டை அனுமதித்தது .

மேற்கத்திய வைத்தியதுறைகளின் முன்னேற்றங்கள் தடுப்பூசி, மருந்தியல் மற்றும் சுகாதார வசதிகள் மூலம் நிரூபிக்கப்பட்டது,

மாறாக, பாரம்பரிய மருத்துவத்தை மூடநம்பிக்கையுடன் தொடர்புபடுத்தியும், அதனை பயிற்சிசெய்பவர்கள் போலி வைத்தியர்களாகவும் கருதியதனால் , பாரம்பரிய மருத்துவத்தை முழுவதுமாக ஆய்வுக்கு தகுதியற்றது என்று பிரிட்டிஷ் அறிஞர்கள் கருதினர்.

மேலும் அவர்களுக்கு சிங்களம்,பாலி, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் பற்றிய அறிவு இல்லாமல் இருந்ததுவும் சுதேச மருத்துவத்தின் ஏடுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு தடையாக இருந்தது .

தொடரும்......
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :