இன்று முத்தமிழ் வித்தகரின் 132 ஆவது ஜனனதின விழாஇறைவன் விரும்பும் இன்மலர் எது?
விடையளிக்கிறது விபுலானந்த அடிகளாரின் கவிதை


முத்தமிழ் வித்தகரின் 132 ஆவது ஜனனதின விழா.
( 27.03.2024) புதன்கிழமை. அதனையொட்டி இக்கட்டுரை வெளியாகிறது.


இறைவன் விரும்பும் இன்மலர் எது? இவ் வினாவுக்கு விடையளிக்கிறது விபுலானந்த அடிகளார் எழுதிய "ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று" என்ற கவிதை.
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 132 ஆவது ஜனனதினம் இன்று

சுவாமி விபுலானந்தர் கிழக்கில் காரைதீவில் மார்ச் 27, 1892 இல் அவதரித்தார். இப் பூவுலகில் 55 ஆண்டுகள் வாழ்ந்து ஜுலை 19, 1947இல் மறைந்தார்.

அவர் இசைத்தமிழறிஞர், பேராசிரியர், துறவி. இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை என பல துறைகளில் இயங்கியவர்.

இசைத்தமிழ் ஆய்வு, இலக்கிய ஆய்வு, நாடகத்தமிழ் ஆய்வு, மொழியியல் என ஆய்வுப்பணிகளை விரித்துக் கொண்டவர். யாழ் நூல் என்ற இசைவரலாற்று நூலும், மதங்க சூளாமணி என்ற நாடக ஆய்வு நூலும் இவருடைய முக்கியமான படைப்புகள்.
முதன்மையாக தமிழிசை வரலாற்றில் மூலநூல்களில் ஒன்று என கருதப்படும் யாழ்நூல் இயற்றியவர் என அறியப்படுகிறார்.

ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று எது ?
இதோ கவிதையும் விளக்கமும்.

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

விளக்கம்.
வள்ளலாம் இறைவன் திருவடிக்கு ஏற்ற மலரெது? வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய மலரா?
உத்தமனாம் இறைவன் திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம் தாமரையே அவன் வேண்டுவது.
காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.

விளக்கம்.
மலர்ந்த தாமரையா? கழுநீர்ப்பூ மாலையா? பெரியவனாம் இறைவனுக்கு ஏற்ற மலரெது?
மலர்ந்த மலருமில்லை. கழுநீர்ப்பூ மாலையும் இல்லை. அன்பினால் வணங்கும் கூப்பிய கைகளாம் காந்தள் மலரே அரசனாம் இறைவன் வேண்டுவது.

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.

விளக்கம்.
பாடிக் கொண்டு வரும் வண்டுகள் விரும்பும் பொன்னிறக் கொன்றை மலரா? உலகத்தில் இல்லாமல் தேவர் உலகில் இருக்கும் கற்பக மலரா? வேண்டுதல் வேண்டாமை இல்லாததால் எந்த வித வருத்தமும் இல்லாத இறைவனுக்கு ஏற்ற மலரெது?
பாடும் வண்டுகள் விரும்பும் கொன்றையில்லை. பாரில் இல்லாத பூவுமில்லை. அவன் அருளை எண்ணிக் கண்ணீர் விடும் விழியெனும் நெய்தல் பூ தான் தலைவனாம் இறைவன் வேண்டுவது.

சிந்தித்து இம்மகான்கள் ஆற்றிய மனிதநேயத்துடன்கூடிய சமய சமூக பணிகளுக்கு ஒரு யுகம் போதாது.

வாழ்க விபுலானந்தன் புகழ்.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா,
ஆலோசகர் , முன்னாள் தலைவர். சுவாமி விபுலானந்த பணி ஞாபகார்த்த மன்றம்,
காரைதீவு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :