கொடவாயா கப்பல் சிதைவு காணப்படும் தளத்தை நோக்கி சுழியோடிச் செல்லும் அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்அலைகளுக்கு அடியிலுள்ள கடல்சார் வரலாற்றைக் கண்டறிதல்: பண்டைய கொடவாய கப்பல் சிதைவினைப் பார்வையிடுவதற்காக சுழியோடிச்சென்ற அமெரிக்கத் தூதரகமும் இலங்கையின் கடல்சார் தொல்பொருள் பிரிவும்

கொடவாயா கப்பல் சிதைவு காணப்படும் பகுதியில் அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அண்மையில் மேற்கொண்ட சுழியோடலானது, கடல்சார் வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது.


கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், மத்திய கலாச்சார நிதியத்தின் கடல்சார் தொல்பொருள் பிரிவுடன் இணைந்து, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் பழமையான கப்பல் சிதைவான கொடவாய கப்பல் சிதைவினை பாதுகாத்தல் மற்றும் ஆவணப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் இலங்கையின் வளமான கடல் வரலாற்றைப் பாதுகாப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கலாசாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியத்தினால் நிதியளிக்கப்பட்ட இம்முன்முயற்சியானது, கலாசாரப் பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீடித்த பங்காண்மையினை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரங்களுக்கான ஆலோசகர் ஹைய்டி ஹட்டன்பக் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் கடல்சார் தொல்லியல் பிரிவின் சிரேஷ்ட தொல்பொருள் அலுவலர் ரசிக முத்துக்குமாரனா ஆகியோர் இணைந்து ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் காணப்படும் பண்டைய கொடவாய கப்பல்சிதைவினை மேற்பார்வை செய்வதற்கான ஒரு சுழியோடலில் ஈடுபட்டனர். இந்த முயற்சியானது கலாச்சார பாதுகாப்பிற்கான அமெரிக்க தூதுவர்கள் நிதியத்தினால் உதவி செய்யப்படும் ஒரு விரிவான முயற்சியின் ஒரு பகுதியாகும். இது கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூழ்கிய கலாச்சாரப் பொக்கிஷங்களை ஆய்வு செய்வதற்கும் பாதுகாப்பதற்குமான இச்செயற்திட்டத்திற்கு 2022 ஆம் ஆண்டில் நிதியளிக்கத் தொடங்கியது.

தனது பிரமிப்பையும் இப்பணியின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்திய தூதுவர் சங், “கடலின் மேற்பரப்பில் இருந்து 33 மீட்டர் ஆழத்தில் கொடவாய கப்பல் சிதைவினை நேரடியாகப் பார்வையிட்டது ஒரு வியக்கத்தக்க அனுபவமாக இருந்தது. இது ஒரு முக்கிய கடல்சார் மையமாக விளங்கிய இலங்கையின் குறிப்பிடத்தக்க வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உலகளாவிய கடல் வர்த்தகத்தில் இலங்கையின் வரலாற்றுப் பாத்திரத்தைப் புரிந்துகொள்வதை மேம்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்காக அதன் வளமான கலாச்சார மரபுகளைப் பாதுகாப்பதை உறுதிசெய்யும் இம்முயற்சிக்கு உதவிசெய்வதில் அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது.” எனத் தெரிவித்தார்.
தூதுவர் வௌியிட்ட கருத்துக்களைத் தொடர்ந்து கருத்து வௌியிட்ட, பொது விவகாரங்களுக்கான ஆலோசகர் ஹைய்டி ஹட்டன்பக், இச்செயற்திட்டத்தின் தனித்துவமான மதிப்பை எடுத்துரைத்தார். “இந்த முக்கியமான தளத்தினை ஆய்வுசெய்வதிலும் பாதுகாப்பதிலும் கடல்சார் தொல்பொருள் பிரிவுடன் பங்காளராக இணைந்திருப்பதையிட்டு நாங்கள் பெருமைப்படுத்துகிறோம். இப்பங்காண்மையானது திறமையான இலங்கை சுழியோடிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இலங்கையின் கடல்சார் வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியில் ஆழமாக மூழ்கி ஆய்வு செய்வதற்கு உதவி செய்துள்ளது. எதிர்வரும் மாதங்களில், அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த முயற்சிகள் இலங்கையின் நீருக்கடியில் காணப்படும் கலாச்சார பாரம்பரியத்தைப் புரிந்துகொள்வதையும் அவற்றை அணுகுவதையும் மேலும் அதிகப்படுத்தும். இது எதிர்கால தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழி வகுக்கும்.” என அவர் குறிப்பிட்டார்.

இச்செயற்திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் திட்டத்தின் ஆழம் குறித்து கருத்து தெரிவித்த சிரேஷ்ட தொல்பொருள் அலுவலர் ரசிக முத்துகுமாரன, “இந்த கொடவாய கப்பல் சிதைவு தொடர்பான அகழ்வாராய்ச்சி செயற்திட்டத்தில் அமெரிக்க தூதரகத்துடன் இணைந்து பணியாற்றுவது ஒரு கௌரவமாகும். எமது ஆய்வுகளின் ஆழம் தனித்துவமான சவால்களைக் கொண்டுள்ள அதே வேளை, உண்மைகளை வெளிக்கொணர்வதற்கும் மற்றும் பண்டைய கடல் பாதைகள் மற்றும் வர்த்தக நடைமுறைகளின் வரலாற்றைப் பாதுகாப்பதற்குமான பகிரப்பட்ட அர்ப்பணிப்பானது எமது குழுக்களிடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்குகிறது. எதிர்கால கலாச்சாரப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு இப்பங்காண்மையானது ஒரு முன்மாதிரியாகும்.” எனத்தெரிவித்தார்.

காலியில் அமைந்துள்ள கடல்சார் தொல்லியல் பிரிவானது (MAU) நீருக்கடியில் காணப்படும் இலங்கையின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் ஆய்வு செய்தல், விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. கொடவாய கப்பல் சிதைவானது, இந்துசமுத்திரம் மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அறியப்பட்ட மிகப் பழமையான கப்பல் சிதைவாகும். இது MAU இன் மிகவும் குறிப்பிடத்தக்க தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் செயற்திட்டங்களில் ஒன்றாகும். ஆரம்ப ஆராய்ச்சி முயற்சிகள் தகவல்களின் ஒரு பொக்கிஷத்தினை வெளிப்படுத்தின. கப்பலில் இரும்பு மற்றும் கண்ணாடியின் சாத்தியமான பாளங்கள், நிறைவுசெய்யப்பட்ட கல்லினாலான திரிகைகள் மற்றும் பீங்கான் கிண்ணங்கள் உட்பட பலவிதமான சரக்குகள் இருந்ததை ஆரம்ப ஆராய்ச்சி முயற்சிகள் வெளிப்படுத்தின. கலாசாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியத்தின் நிதியுதவியுடன், களிமண் மட்பாண்டங்கள் முதல் உலோகப் பொருட்கள் மற்றும் சிக்கலான கார்னிலியன் மணிகள் வரை சிதைவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கிட்டத்தட்ட 200 கலைப்பொருட்களை MAU இனால் பாதுகாக்க முடிந்தது. தலத்தினைத் தயார் செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கும், விரிவான தள ஆய்வுகளுக்காக 3D மாதிரி நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் அமெரிக்கா வழங்கிய நிதியுதவி முக்கிய காரணியாக இருந்தது. இச்செயற்திட்டம் முன்னோக்கிச் செல்கையில், கப்பல் சிதைவு காணப்படும் முழு தளத்தின் முழுமையான 3D மாதிரியை உருவாக்கும் முயற்சியினை MAU மேற்கொள்கிறது. இலங்கையின் கடல்சார் தொல்பொருள் மற்றும் கலாச்சார பாதுகாப்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு மைல்கல்லாக இது அமையும். கப்பல்சிதைவிலிருந்து மீட்கப்பட்ட கலைப்பொருட்கள் ஆண்டின் இறுதியில் கொழும்பில் காட்சிக்கு வைக்கப்படும், பின்னர் காலியில் உள்ள கடல்சார் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் நிரந்தரக் கண்காட்சிக்காக வைக்கப்படும். இலங்கையர்களும் சுற்றுலாப் பயணிகளும் நாட்டின் வளமான வரலாற்றினை பார்வையிடுவதற்கும் கற்றுக்கொள்வதற்குமான வாய்ப்பினை இது வழங்கும். சுழியோடும் தளத்திற்கு அருகிலுள்ள பாடசாலைகளும் மாணவர்களும் கொடவாய செயற்திட்டத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு கல்வி நிகழ்ச்சித் திட்டத்திற்கும் AFCP நிதியளிக்கும்.

கலாச்சார பாதுகாப்பிற்கான தூதர்கள் நிதி (AFCP) பற்றி: சிவில் சமூகத்தை வலுப்படுத்தும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு மரியாதை அளிக்கும் நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் தங்கள் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கு AFCP மானிய நிகழ்ச்சித் திட்டம் உதவிசெய்துள்ளது. தொல்பொருள் தளங்கள், வரலாற்று கட்டிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியக சேகரிப்புகள் மற்றும் பழங்குடி மொழிகள் மற்றும் இசை மற்றும் கைவினைப்பொருட்கள் போன்ற பாரம்பரிய கலாச்சார வெளிப்பாட்டின் வடிவங்களை பாதுகாப்பதற்கு AFCP மானியங்கள் உதவிசெய்கின்றன. 2001 ஆம் ஆண்டு முதல், கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியம் இலங்கையில் 15 செயற்திட்டங்களுக்கு நிதியளித்துள்ளது. அவ்வுதவிகளின் மொத்தப் பெறுமதி 1,387,294 டொலர்களாகும். அநுராதபுரத்தின் உலக மரபுரிமைத் தளமான மேற்கத்திய மடாலயங்களை ஆவணப்படுத்தல், ரஜகல பௌத்த வன மடாலயத்தினை பாதுகாத்தல், அனுராதபுரம் தொல்பொருள் நூதனசாலையில் உள்ள பௌத்த, இந்து மற்றும் ஏனைய சேகரிப்புகளைப் பாதுகாத்தல், மட்டக்களப்பு டச்சு கோட்டையினை மறுசீரமைத்தல், ஆதிவாசி, தமிழ் மற்றும் பௌத்த சமூகங்களின் சடங்கு இசை மற்றும் நடன வடிவங்களைப் பாதுகாத்தல் மற்றும் கண்டியிலுள்ள 17 ஆம் நூற்றாண்டிற்குரிய கண்டி அரசர்களின் அரண்மனையினைப் பாதுகாத்தல் என்பன இதில் அடங்கும். இலங்கையில் கலாச்சாரப் பாதுகாப்பு தொடர்பான அமெரிக்காவின் பணிகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு https://lk.usembassy.gov/ எனும் இணையத்தளத்தினைப் பார்வையிடுவதுடன் சமூக ஊடகங்களில் @USEmbassySL இனைப் பின்தொடரவும்.

கடல்சார் தொல்லியல் பிரிவு (MAU) பற்றி: 2001ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு மத்திய கலாச்சார நிதியத்தால் நிர்வகிக்கப்படும் காலியில் அமைந்துள்ள MAU ஆனது, கடுமையான ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் மூலம் நீருக்கடியில் காணப்படும் இலங்கையின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :