அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகமானது, காரைதீவு முன்னாள்
தவிசாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு சமூக சேவைக்கான மதிப்புறு முனைவர்( Honorary Doctorate) கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
சர்வதேச பட்டமளிப்பு விழா ( International Graduation ceremony) நேற்று முன்தினம் (10) சனிக்கிழமை இரவு கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றபோது மேற்படி விருது வழங்கப்பட்டது.
உலகத் தமிழ் பல்கலைக்கழகம்( World Tamil university - America) உள்ளிட்ட 11 அமைப்புக்கள் இணைந்து வருடாந்தம் சமுதாயத்தில் அரசியல் கல்வி கலை வாழ்வியல் வியாபாரம் மற்றும் சமூக சேவைகள் செய்த பிரமுகர்களுக்கு இவ்வாறான மதிப்புறு முனைவர் கலாநிதி பட்டத்தை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இவ் ஆண்டுகான சர்வதேச பட்டமளிப்பு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்ற போது 25 பிரமுகர்களுக்கு இப் பட்டம் வழங்கி வைக்கப்பட்டன. பல்கலைக்கழக வேந்தர் மற்றும் உபவேந்தர் ஒப்பமிட்ட சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வைத்தனர்.
காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான கலாநிதி கி.ஜெயசிறில் கிழக்கில் மிகவும் நன்குஅறியப்பட்ட சமூக சேவையாளராவார். இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவராவார்.
அனர்த்த காலங்களில் கிழக்கு மலையகம் என நேரடியாக சென்று மக்களுக்கு உதவி வருபவர்.
துணிச்சலும் சிறந்த ஆளுமையும் மிக்க பரோபகாரியான இவர் கலாநிதி பட்டத்தை தனது அயராத தொடர் சமூகப் பணிக்காக இள வயதில் (40) பெற்றுள்ளார்.
இவருக்கு கலாநிதி பட்டம் கிடைத்ததையிட்டு இந்திய தமிழகத்தின் சீமான் பழநெடுமாறன் இலங்கையில் இரா.சம்பந்தன் மனோகணேசன் சி.சிறிதரன் மாலை சேனாதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
இவரது சமூகப்பணி மேலும் தொடர வேண்டுமென பல்வேறு அமைப்புகள் பல்வேறு பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
0 comments :
Post a Comment