தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் ? இதில் முஸ்லிம்களின் படிப்பினைகளும், மொழிப்புலமையும்.எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் 1949 இல் உருவாக்கப்பட்டதுதான் இலங்கை தமிழரசு கட்சியாகும். இலங்கை அரசியலில் இந்த கட்சிக்கு நீண்ட வரலாறுகள் உள்ளது. ஆயுதப் போராட்டத்திற்கு முன்பும், அது முடிவுற்றதன் பின்பும் தமிழரசு கட்சியின் தலைவரே தமிழர்களின் தலைவராக பார்க்கப்படுகின்றார்.

தமிழரசு கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் ஆரோக்கியமாக இருக்கின்ற நிலையில், தாமாகவே முன்வந்து அடுத்த தலைமுறையினர்களுக்கு விட்டுக்கொடுக்கும் நோக்கிலேயே எதிர்வருகின்ற 21.01.2024 இல் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒன்றினை கட்சி மட்டத்தில் நடாத்த உள்ளனர்.

இது ஓர் உள்ளக ஜனநாயக வழிமுறை மட்டுமல்லாது தேர்தல் மூலம் தலைவரை தெரிவுசெய்கின்ற அளவுக்கு அந்த கட்சியில் தலைவர் பதவிக்கு தகுதியான ஏராளமானோர் உள்ளனர்.

ஆனால் முஸ்லிம் கட்சிகளில் அடுத்தகட்ட தலைவர்கள் வளர்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு எவராவது வளர்ந்துவிட்டால் சந்தர்ப்பம் பார்த்து எப்படியாவது அவர் அரசியலிலிருந்து ஓரம்கட்டப்பட்டுவிடுவார்.

அத்துடன் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் தலைவரின் குசினிக்குள் சென்று தேங்காய் திருவுகின்ற ஒருவரால் மாத்திரமே அரசியலில் முன்னிலைவகிக்க முடியும் என்பது முஸ்லிம் அரசியலில் எழுதப்படாத விதியாகும். இவ்வாறான பரிதாபகரமான சூழ்நிலை தமிழர்களின் அரசியலில் இல்லை.

வடகிழக்கை முன்னிலைப்படுத்திய முஸ்லிம்களின் உரிமை அரசியலானது மண்ணுக்குள் போட்டு புதைக்கப்பட்டு பல தசாப்தங்கள் கடந்துவிட்டது. ஆனாலும் அதன் எச்சங்கள் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான பிரச்சாரத்திற்காக மாத்திரம் பாவிக்கப்படுகின்றது. அரசியல்மயப்படுத்தப்படாத முஸ்லிம் சமூகத்தினால் இதனை புரிந்துகொள்கின்ற ஆற்றல்கள் இல்லை. அபிவிருத்தி என்னும் மாயையில் அற்பமான சலுகை அரசியலில் மூழ்கிக்கிடக்கின்றனர். ஆனால் அவர்களது நிலங்கள் சூரையாடப்பட்டு, இருக்கின்ற சிறியளவிலான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதனை அவர்களினால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

தமிழர்களின் அரசியல் அவ்வாறல்ல. தமிழர்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள். தூரநோக்குள்ள அவர்கள் எப்போதும் அற்பமான சலுகை அரசியலுக்கு துணைபோனதில்லை. அத்தனையையும் இழந்திருந்தும் என்றோ ஒருநாள் வடகிழக்கை அடிப்படையாக்கொண்டு தங்களுக்கான அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வோம் என்ற திடமான நம்பிக்கையில் அவர்கள் உள்ளார்கள்.

ஓர் இலட்சியத்தை நோக்கிய அரசியல் பயணத்தில் உள்ள தமிழர்களின் தமிழரசு கட்சித் தலைவர் பதவிக்கான இந்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சுமந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வடகிழக்கை மையமாகக்கொண்ட தமிழர்களின் தீர்வுத்திட்டத்தினை நோக்கிய அரசியலுக்கு இந்த இருவரில் பொருத்தமானவர் யார் என்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

கொழும்பை வசிப்பிடமாகக்கொண்ட சுமந்திரன் அவர்கள் சிறந்த சட்டத்தரணி என்பதற்காக இரா சம்பந்தனினால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர். அத்துடன் சிங்கள மேட்டுக்குடி வர்க்கத்தினருடன் நெருக்கமான உறவினைக்கொண்டுள்ள இவர் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் சுமந்திரனுக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. பின்பு இவர் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் செய்கிறார் என்று உணரப்பட்டதனால் மக்களின் செல்வாக்கு சரியத்தொடங்கியது. கடந்த பொது தேர்தலில் தோல்வியடைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரீதரனின் தயவினால் கிளிநொச்சியில் சுமார் நான்காயிரம் வாக்குகள் பெற்றதன் காரணமாக வெற்றியடைந்தார்.

கிளிநொச்சியில் வசித்துவருகின்ற ஸ்ரீதரன் அவர்கள் சுமந்திரனுக்கு முற்றிலும் மாற்றமானவர். அதாவது இனப்பிரச்சினையின் முழு தாக்கத்தினையும், வலிகளையும் சுமந்த உணர்வுள்ள ஒருவர். ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமையில்லாத இவர், பிறந்ததிலிருந்து தாயகப்பிரதேசத்தில் வசிப்பதுடன் சிங்கள மேட்டுக்குடிகளுடன் எந்தவித உறவுமில்லாததனால் டீல் அரசியலுக்காக அவர்களினால் இவரை வழிநடாத்த முடியாது.

ரவிராஜின் படுகொலைக்கு பின்பு பாராளுமன்றத்தில் மிகவும் துணிச்சலுடன் தமிழர்களின் பிரச்சனைகளை துல்லியமாக பேசுகின்ற ஒருவராக ஸ்ரீதரன் பார்கப்படுகின்றார். அத்துடன் களப்போராட்டத்திலும் இவரது பங்களிப்பு பிரதானமானது.

இந்த நிலையில் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிப்புலமை உள்ளவர் என்ற காரணத்திற்காக சுமத்திரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டால் அது இன்றைய முஸ்லிம்களின் அரசியலை போன்று தமிழர்களின் உணர்வுகள் எதிர்காலத்தில் மழுங்கடிக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.

சிங்கள மேட்டுக்குடிகளுடன் நெருக்கமான உறவுகள் உள்ளதன் காரணமாக அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அரசியலை முன்னெடுக்கவேண்டிய நிலை ஏற்படலாம். இதுதான் இன்று முஸ்லிம்களின் அரசியலில் காணப்படுகின்றது.

முஸ்லிம்கள் தலைவர்களின் மொழிப் புலமையில் மயங்கியுள்ளதனால், இதனை தலைவர்கள் நன்றாக பயன்படுத்தி தங்களை மாத்திரம் வளர்த்துக்கொண்டுள்ளனர். இந்த மொழிப்புலமையினால் மக்களுக்கு எந்தவித பிரயோசனமும் இல்லையென்பதனை புரியாதவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர்.

எனவேதான் ஓர் இலட்சியத்தை நோக்கி பயணிக்கின்ற வடக்கு கிழக்கு தமிழர்களின் உரிமை அரசியலுக்கு உணர்வுள்ள ஸ்ரீதரன் அவர்களே பொருத்தமானவர் என்பது எனது அபிப்பிராயமாக இருந்தாலும், தமிழர்களின் உணர்வுகளும் அவ்வாறுதுதான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வாக்களிக்கின்ற கட்சி மட்டத்தில் உள்ளவர்களும் இதனை உணரவேண்டும்.முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :