இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 10 போதைப்பொருள் சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
சீருடை மற்றும் சிவில் உடையில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் குழு திங்கள்(18) முதல் புதன்கிழமை(20) வரையான 3 நாட்களில் 10 சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.
இப்பொலிஸ் குழுவில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ரவூப் தலைமையில் ஹாரீஸ்(43537) முபாறக் (88489) அக்பர் (76442) ஆகியோர் பங்கேற்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு குறித்த பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வசம் இருந்து நாட்டு கஞ்சா ஹெரோயின் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இக்கைது நடவடிக்கையின் போது இன்று (20) புதன்கிழமை ஐஸ் போதைப்பொருள் நுகர்ந்த இரு பாடசாலை மாணவர்களை இப்பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.தரம் 9 மற்றும் தரம் 11 ஆண்டில் கல்வி கற்கும் இம்மாணவர்கள் மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள 14 மற்றும் 16 வயதுடைய பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் ஆவர்.
மேலும் சாய்ந்தமருது பகுதியில் பல்வேறு குற்றச்செயலுடன் தொடர்பு பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்த 5 சந்தேக நபர்களும் இத்தேடுதல் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக் குழுவின் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டல்களை வழங்கவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment