நாம் எந்த வேளையிலும் எமது இறுதி இலக்காகிய சமஸ்டி கோரிக்கைக்கு குறைவாக இறங்கிப் போகவில்லை. அதற்கு குறைவான தீர்வை ஒருபோதும் ஏற்கப் போவதுமில்லை .
இவ்வாறு காரைதீவில் இடம்பெற்ற ஊராட்சி மன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ .சுமந்திரன் தெரிவித்தார் .
அவர் மேலும் கூறுகையில்..
முத்தமிழுக்கு பெயர் பெற்றது காரைதீவுமண். இங்கு தொடர்ச்சியாக தொடர்ச்சியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகம் அமைத்து வந்திருக்கின்றது. இம்முறையும் அது ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
இன்று மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. சந்தேகங்கள் உள்ளன. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி நாம் திட்டவட்டமாக அன்றிலிருந்து கூறி வருகின்றோம்.
1956ல் இருந்து நமக்கான தீர்வு சமஸ்டி ஆட்சி என்பதை கூறி வந்திருக்கின்றோம். அதிலிருந்து நாம் எள்ளளவும் ஒரு போதும் இறங்கவில்லை .
தமிழரசுக் கட்சியின் 75 வருடகால வரலாறு அனைவருக்கும் தெரியும்.
தமிழர் விடுதலை கூட்டணியாகட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகட்டும்
அதில் பிரதானமான கட்சி தமிழரசுகட்சி என்பது உலகறியும்.
இறுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் பிரதான தமிழரசுக் கட்சியோடு இரண்டு கட்சிகள் அல்ல இயக்கங்கள் பயணித்தன.
ஒற்றுமையின் காரணமாக அவர்களை நாங்கள் அரவணைத்து வந்திருந்தோம். இன்று அவர்கள் பிரிந்து போய் இருக்கின்றார்கள்.
ஆனால் நாம் தமிழரசுக் கட்சி பிரிந்துபோய் விட்டதாக பொய்யான விம்பம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.
நாம் அவர்களுடன் இணக்கப்பாட்டிக்கு சென்றோம் .அவர்கள் எமது நிலைப்பாட்டினை ஏற்கவில்லை. பின்னர் அவர்கள் விதித்த நிலைப்பாட்டினை நாம் இணங்கவில்லை.
எனினும் எந்த ஒரு கட்டத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை இருசாராரும் பயன்படுத்துவதில்லை என்று இணங்கினோம். ஆனால் அவர்கள் அதை மீறி இருக்கின்றார்கள். அவர்கள் தனித்து கேட்பது அவர்களது ஜனநாயக உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை பாவிப்பது தவறு.
நாங்கள் அன்றும் இன்றும் ஒரே சின்னத்திலே அதாவது வீட்டுச் சின்னத்தில் தான் வருகின்றோம். எனவே மக்கள் எந்த விதமான குழப்பங்களுக்கும் ஆளாக தேவையில்லை.
ஒரே ஒரு ஜனநாயக கட்சியான எமது தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்து எமது பலத்தை உலகத்துக்கு காட்ட வேண்டும் .
வடக்கு கிழக்கு தேர்தலில் எமது ஏகோபித்த வெற்றியைக் காட்டுகின்ற பொழுது தெற்கிற்கு அது ஒரு பாடமாக இருக்கும் .
தேர்தலின் பின்னர் தெற்கில் பாரிய அரசியல் குழப்பம் ஏற்படபோகின்றது. மக்கள் ஆணையை இழந்த அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி என்ற விடயம் அம்பலமாக போகிறது.
எமது அரசியல் விடுதலை போராட்டத்தில் எமது மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
அரசியலில் தெற்கில் குழப்பம் ஏற்பட்டாலும் வடக்கு கிழக்கில் குழப்பம் ஏற்படாது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை தமிழரசுக்கட்சி வெற்றி பறைசாற்றும். அதனை இம்முறையும் வழமைபோல வட கிழக்கு மக்கள் உலகத்திற்கு காண்பிப்பார்கள். என்றார்.
0 comments :
Post a Comment