கங்குவேலி அகத்தியர் ஆலயத்தில் பெரும் யாகம்! அன்னதானம்! சித்தமருத்துவமுகாம்!
2000 ஆண்டுகளுக்கு முன்பு "அகத்தியம்" என்ற முதல் தமிழ் இலக்கண நூலை எழுதியவரும், சப்தரிசிகளில் ஒருவரும், சித்தர்களுக்கு எல்லாம் சித்தராக விளங்கிய அகத்திய மாமுனிவரின் குருபூஜை தினம் இன்று (9) திங்கட்கிழமை ஆகும். அதுமட்டுமின்றி இன்று ஆறாவது உலக சித்தர் தினமுமாகும்.
அதனை முன்னிட்டு இலங்கையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அகத்தியர் வாழ்ந்த திருகோணமலை கங்குவேலி பிரதேசத்தில் உள்ள அகத்தியர் ஸ்தாபனத்தில்( ஆலயத்தில்) பெரும் யாகமும், அன்னதானமும், இலவச சித்த மருத்துவ முகாமும் இடம் பெறவுள்ளது.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜியின் ஏற்பாட்டில் இன்று (9) திங்கட்கிழமை "அகத்தியர் பெருமானின் ஆயிலிய நட்சத்திர குருபூஜை ஜெயந்தி விழா" கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜி , நமசிவாய சுவாமி மகேஸ்வரன் , சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், உப தலைவர் மனோகரன், தியாகராஜா சுவாமி உள்ளிட்ட பல உறுப்பினர்கள் இன்றைய பெரும் யாகத்தில் ஈடுபடவுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் , பிரபல தவில் சக்கரவர்த்தி செந்தில் பங்கு பற்றலில் இசைக் கச்சேரி இடம் பெறவுள்ளது.
அகஸ்தியர் பிறந்த மார்கழி மாத ஆயிலிய நட்சத்திரம் வருகின்ற இன்று(9) திங்கட்கிழமை ஆறாவது உலக சித்தர் தினம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது
அவர் சித்த மருத்துவத்தின் தந்தையாகவும் தமிழுக்கும் மருத்துவத்திற்கும் பாரிய பல நூல்களை எழுதி இருக்கிறார். அவர் செய்த அந்த மகத்தான பணியை உலகளாவிய மக்கள் ஞாபகப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்றைய தினம் அகத்தியர் ஆலயத்தில் இலவசமாக சித்த மருத்துவ முகாமும் நடாத்தப்படவிருப்பதும் சிறப்பம்சமாகும்.
பார்க்கும் இடமெல்லாம் சிவலிங்கங்கள் நிறைந்த சிவபூமியான திருகோணமலையில் கங்குவேலி மண்ணில் அகத்தியர் பெருமான் வந்து தவமியற்றி பல வேள்விகளை செய்து, மாபெரும் சித்த மருந்துவ பல்கலைக்கழகம் உருவாக்கி, பல சீடர்களை உருவாக்கி சங்க தமிழ் வளர்ந்த புண்ணிய பூமி "அகத்தியர்-ஸ்தாபனம்" என்ற இந்த மண்.
*இன்றும் அகத்தியர் இந்த பூமிக்கு எத்தனையோ தன்னுடைய அடையாளங்களை விட்டு சென்றுள்ளார்...*
எப்பேற்பட்ட ஒரு உயர்ந்த கலாச்சாரம் இலங்கையின் இருந்துள்ளது என்பதை இங்கே சென்று பார்த்தால் உணர முடியும்..
வரலாறு
திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி பிரதேசத்திலுள்ள கங்குவேலி எனும் குக்கிராமத்தில் அகத்தியர் ஸ்தாபனம் என்ற அமைப்பு உள்ளது. அவ் அமைப்பு அகத்தியர் ஆலயத்தை அமைத்து, அருகில் அகத்தியர் வழிபட்ட ஆதிசிவனுக்கு ஆலயத்தை பல சவால்களுக்கு மத்தியில் அமைத்து வழிபட்டு வருகின்றார்கள்.
தாபனத்தின் தலைவர் ஓய்வுநிலைஅதிபர் வேலுப்பிள்ளை தவராசா , அங்கு இருக்கின்ற அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் கல்வெட்டுக்கள் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் தடயங்கள் அனைத்தையும் பழைமை குன்றாத வகையில் பேணி வருகின்றார்.
தொடர்ந்து அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் சென்றால் காட்டுக்குள்ளே அகத்தியர் ஆடி அமாவாசை தீர்த்தமாடிய மகாவலி கங்கை நதி தீரம் உள்ளது..
அங்கு சிவன் ஆலய பீடம் ஒன்று இருக்கிறது .
இங்கு ஆடி அமாவாசை காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி விரதம் அனுஷ்டித்து தீர்த்தம் ஆடுவது வழமையாகும்.
அகத்தியர்
அகத்தியர் என்பவர் "தமிழி" என்ற தமிழ் சித்தர்களில் முதன்மையானவராகவும், சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்குப் பயணப்பட்டு அதைச் சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினைத் தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழைச் சிவபெருமானிடமிருந்து கற்று உணர்ந்து மற்றவருக்கும் போதித்த ஆசானும் ஆவார்.
இவரே "அகத்தியம்" எனும் தமிழ் மொழிக்கான முதல் இலக்கண நூலை இயம்பியவராவார்.
இவரின் நூல்களை பல்வேறு தமிழ் ஆர்வலர்களும் காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
*நீங்கள் செய்த பாவங்களால் வரும் பலனை குறைக்க இறைவனுக்கு உரிமையுண்டு.*
ஆனால் நீங்கள் செய்த புண்ணியங்களின் பலனை குறைக்க இறைவனால் கூட முடியாது..என்கிறார் அகத்தியர்.
குறுமுனி அகத்திய மாமுனிவரின் குருபூஜை சிறக்க இறைவனை இறைஞ்சுகின்றோம்.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு குறூப் நிருபர்
0 comments :
Post a Comment