நூதன போராட்ட சமிஞ்சையை முதலில் மின்சார சபை தொழிற்சங்கம் வெளிப்படுத்தியுள்ளது. மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், மக்கள் மின் கட்டணத்தை செலுத்த தேவையில்லை எனவும், தாங்கள் மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் எனவும் மின்சார சபை தொழிற்சங்கம் கூறியுள்ளது. இவர்களின் இந்த அறிவிப்பை சாதாரணமாக அரசு கடந்து செல்ல முடியாது. அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரால் மின் கட்டனத்தை அதிகரிக்க மாத்திரமே நடவடிக்கை எடுக்க முடியும். அதனை நடைமுறை படுத்த வேண்டியது தொழிலாளர்களே. அவர்கள் மறுத்தால் அரசாங்கத்தால் எதனையும் செய்ய இயலாது போய்விடும்.
மின்சார சபை தொழிற்சங்கத்திற்கும் மின் சக்தி அமைச்சருக்கும் இடையில் அவ்வளவு பெரிய சீரிய உறவு இருப்பதாக தெரியவில்லை. இதுவே இந் நாட்டின் சாபமும் எனலாம். இக் குறித்த கட்டண அதிகரிப்பு விடயத்தில் மாத்திரமல்ல, நிலக்கரி விடயத்திலும் இரு அணியினரும் மோதிக்கொள்வதை அவதானிக்க முடிகிறது. இதன் உண்மை தன்மையும், ஆழமும் இன்னும் சில நாட்களில் அவிழ்ந்துவிடும்.
மின் கண்டனத்தை அதிகரிப்பதில் மின் சக்தி அமைச்சர் விடாப்பிடியாக உள்ளதாகவே அறிய முடிகிறது. இப்படித் தான் மதஸ்தலங்களின் மின் கட்டன விவகாரத்திலும் மிக இறுக்கமாக இருந்தார். இறுதியில் தளர்ந்து போக வேண்டியதொரு நிலை அவருக்கு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அது போன்றே இந்த விவகாரத்திலும் நடைபெற போகிறது. மின்சார சபை தொழிற்சங்கத்தை சமரசம் செய்யாமல் குறித்த கட்டண அதிகரிப்பை செய்தால், அது அவர்களுக்கு சாத்தியமாகாது.
இக் கட்டண அதிகரிப்பு மிக குறைந்தளவு மின்சாரத்தை நுகர்வோரையே அதிகம் பாதிக்கப்போகிறது. அவர்கள் நிச்சயம் கடுமையான ஏழைகளாக இருப்பர். இவர்களுக்கு இந்த சுமையை சுமப்பதும் மிகக் கடினம் எனலாம் ( நாளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள மின்சார கட்டண அதிகரிப்பு 1000 வீதமாகும்.) மின்சார சபை தொழிற்சங்கம் கூறினாலும், கூறாவிட்டாலும் அவர்கள் செலுத்தப் போவதில்லை. அவர்களே நினைத்தாலும் செலுத்த முடியாது என கூறினாலும் தவறாகாது. இந் நிலையில் மின்சார சபை தொழிற்சங்கத்தின் இந்த ஆறிவிப்பு இதனை மேலும் ஊக்குவிக்க போகிறது. இதனை மீறி யாராவாது மின் துண்டிக்க சென்றால், மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பாரிய முரண்பாட்டை தோற்றுவிக்கும். பாதுகாப்பு படையின் உதவியோடே மின்னை துண்டிக்க செல்ல வேண்டிய நிலையும் ஏற்படாலாம்.
மின்சார சபை தொழிற்சங்கத்தின் இந்த அறிவிப்பை நூதன போராட்டம் என கூற முடியும். இவ்வாறான போராட்டத்தை வளர்ச்சியடைந்துள்ள நாகரீகமான நாடுகளின் அவதானிக்க முடியும். இது மிக பலமான போராட்ட முறையாகும். இம் முறையிலான நூதன போராட்ட முறையை ஆரம்பிப்பதற்கான முதல் சமிஞ்சையை மின்சார சபை தொழிற்சங்கம் ஆரம்பித்து வைத்திருக்கின்றது. தற்போதுள்ள நிலையில் கோத்தாபாயவை விரட்ட நடைபெற்றதை போன்றதொரு போராட்டம் சாத்தியமற்ற நிலையில், இப் போராட்ட முறை அரசை வீட்டுக்கனுப்ப ஏதுவாக அமையும். இவர்களின் அறிவிப்பை தொடர்ந்து இன்னும் பல நூதன போராட்ட அறிவிப்பை எதிர்பார்க்க முடியும்.
தற்போது வைத்தியர்கள் கறுப்பு வாரத்தை பிரகடனம் செய்யவுள்ளனர். ஒரு இலட்சம் சம்பளத்திற்கான வரி விவகாரம் இன்னும் பலரை இந் நூதன போராட்டத்துக்கு அழைத்து செல்லப் போகிறது. இலங்கையில் பிரச்சினை இல்லாத இடமில்லை. எனவே, இந் நூதன போராட்டம் பல இடங்களில் பரவும் அபாயம் ஏற்படும். பாரிய திட்டமிடல்கள் எதுவுமின்றி, ஒரு சிறிய குழுவும் இப் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதே இந் நூதன போராட்டத்தின் விசேடம் எனலாம். இந் நூதன போராட்டம் வலுப்பெற்றால் இலங்கையே ஒரு கணம் ஸ்தம்பித்து போகும். இன்னும் இலங்கை நாடு அதாள பாதாளம் நோக்கி பயணிப்பதற்கான சமிஞ்சையே வெளிப்பட்டுகொண்டிருக்கின்றது என்பதே கவலையான விடயம்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
0 comments :
Post a Comment