கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 வாக்கால் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.
கோறளைப்பற்று பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அமர்வு இரண்டாவது முறையாக தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் தலைமையில் நேற்று (29/12/2022) சபை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த 14.12.2022 அன்று சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தனை தொடர்ந்து மீண்டும் தவிசாளரினால் வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டது.
இதன்போது பகிரங்க வாக்களிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2023 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட வாசிப்புக்கு ஆதரவாக 09 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டு 04 வாக்குகளால் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 6 உறுப்பினர்களும் ஜக்கிய தேசிய கட்சியினை சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை சேர்ந்த ஒருவருமாக 9 பேர் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியினை சேர்ந்த உறுப்பினர் அமர்விற்கு சமூகமளித்திருக்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 பேரும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 3 பேரும் ஜக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 2 பேரும் நல்லாட்சிக்கான இயக்க உறுப்பினர் ஒருவரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை சேர்ந்த உபதவிசாளரும் 13 பேர்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
இதேவேளை கடந்த காலத்தில் உப தவிசாளர் உட்பட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜக்கிய தேசிய கட்சியினை சேர்ந்த உறுப்பினர்கள் ஆட்சி அமைப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
இம்முறை அவர்களில் பல உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று கடந்த 14.12.2022 ஆம் திகதி 2023 ஆண்டுக்கான சமர்பிக்கப்பட்டபோது 2 வாக்குகளால் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
அவ்வேளை தமிழ் தேசிய மக்கள் முன்னனியினை சேர்ந்த உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்திருந்தார்.
இச் சபையானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இதே தவிசாளரினால் சமர்பிக்கப்பட்டபோது சபையில் அமைதியின்மையும் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment