ஸ்கை தமிழ் வலையமைப்பு மற்றும் கத்தார் முத்தமிழ் மன்றம் ஆகியன கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்த இலங்கையின் மூத்த எழுத்தாளரும், அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் தகவல் அதிகாரியுமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின் "மின்னும் தாரகைகள்" நூல் அறிமுக விழா கத்தார் CWF அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு சிறப்பதிதிகளாக கத்தார் நாட்டிற்கான இலங்கை தூதரக சிரேஷ்ட அதிகாரி ரஷீத்.எம்.பியாஸ் (நளீமி) , கத்தார் இஸ்லாமிய வங்கி முகாமையாளர் முஹம்மத் சிராஜ் ஏ. முத்தலீப், CWF தலைவர் முஹம்மத் அக்ரம், கத்தார் முத்தமிழ் மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர் குரு ஸ்ரீ, கத்தார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றத் தலைவி ஷோபா ராஜ், ஒருங்கிணைந்த தமிழர் பேரவை செயலாளர் வலியுல்லாஹ், வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் நஜ்முல் ஹுசைன், அனைத்து சம்மேளன கத்தார் தலைவர் அமீர்தீன் மௌலானா, இலங்கையின் பிரபல நாவலாசிரியை ஜரீனா முஸ்தபா ஆகியோரும், விசேட அதிதிகளாக ஸ்கை தமிழ் வலையமைப்பின் பணிப்பாளர் ஜே. எம். பாஸித், முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி, புத்தளம் சங்கம் கத்தார் தலைவர் சாஜித் ஜிப்ரி, கத்தார் வாழ் இலங்கை மகளிர் அமைப்பின் உதவிப் பொதுச் செயலாளர் மோகன பிரியா பிரசாத், கத்தார் முத்தமிழ் மன்றம் விஜய் ஆனந்த், கத்தார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றம் நிர்வாக குழு உறுப்பினர் ஹாழிர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கஹட்டோவிட்ட நிஹாசா நிசார் நூலாசிரியர் அறிமுகம் நிகழ்த்தினார். நூலாசியர் நூருல் அயின் ஏற்புரை நிகழ்த்தினார். அதில் தமிழ் நாட்டில் கூட இல்லாதவாறு இலங்கையில் எழுதி வரும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களைப் பற்றி தான் ஆய்வு செய்து எழுதிய "மின்னும் தாரகைகள்" நூல் பற்றிய தனது அனுபவங்களை விபரித்தார். அத்துடன் அதே நூலை சிங்கள மொழியிலும் இன்னும் பல புதிய தகவல்களுடன் வெளியிடக் கிடைத்த வாய்ப்பும் தனக்குக் கிடைத்த பேறு என்றும் தனது நூலில் குறிப்பிடப்பட்ட இலங்கையில் அதிக நாவலை வெளியிட்டவர் என்ற பெருமைக்குரிய நாவலாசிரியை ஜரீனா முஸ்தபாவும், கவிதை நூலாசிரியை கஹட்டோவிட்ட நிஹாசா நிசாரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாகவும் குறிப்பிட்டார். கத்தார் மண்ணில் தனது நூலுக்கு மிகவும் சிறப்பான முறையில் அறிமுக விழாவை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து புகழாரம் சூட்டினார்.
அதிதிகளுக்கு நூலாசிரியையினால் "மின்னும் தாரகைகள்", தமிழ் மற்றும் சிங்கள நூல்பிரதிகள் கையளிக்கப்பட்டன. கத்தார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றத் தலைவி ஷோபா ராஜ், கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களுக்குப் பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.
0 comments :
Post a Comment