நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையில் 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் மிகவும் சிறந்த முறையில் கிடைக்கப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக அதிபர் ஏ. அப்துல் கபூர் தெரிவித்தார்.
அந்த வகையில், இம்முறை பொறியியல் தொழில்நுட்பத் துறையில் ஏ.எஸ்.எம். சிம்ரான் என்ற மாணவன் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலை பெற்று, பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இப்பாடசாலையிலிருந்து இம்முறை 80 க்கு மேற்பட்ட மாணவர்கள் சகல துறைகளிலிருந்தும் பல்கலைக்கழகம் செல்வதாகவும் இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெறுபேறானது, கடந்த வருடத்தை விட 20 மாணவர்களால் அதிகரித்துள்ளது. அவ்வகையில், விசேடமாக பாடசாலை வரலாற்றில் பொறியியல் துறையில் 9 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டமை இம்முறை இடம்பெற்ற சாதனையாகும். அத்துடன் மருத்துவ துறையில் 02 மாணவர்களும், முகாமைத்துவம் மற்றும் வர்த்தகவியல் துறைகளில் 12 மாணவர்களும், பொறியியல் தொழில்நுட்பத் துறையில் 09 மாணவர்களும் உயிரியல் தொழில்நுட்பம் துறையில் 07 மாணவர்களும் கலைத்துறையில் 06 மாணவர்களும் ஏனைய விஞ்ஞான, கணித துறைகளில் என 80 க்கு மேற்பட்ட மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகம் செல்வது விசேட அம்சமாகும்.
பல சவால்களுக்கு மத்தியில் கடின முயற்சி செய்து கற்றுத் தேறியவர்கள் மற்றும் இந்த சாதனைக்கு அயராது உழைத்த அதிபர் ஏ. அப்துல் கபூர் மற்றும் பங்களிப்புச் செய்த பெற்றோர்கள், ஆசிரிய பெருந்தகைகள், பகுதித் தலைவர்கள், முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திச் சபை, பழைய மாணவர்கள் சங்கம், கல்வி சாரா ஊழியர்கள் அத்துடன் விஷேடமாக கணித விஞ்ஞான துறைக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய சமூக நிறுவனங்கள் அனைவருக்கும் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் மற்றும் நிந்தவூர் சமூகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment