மத்ரஸா மாணவர்களின் விளையாட்டு தினம்- கொழும்பு மருதானை சின்னப் பள்ளிவாசல் நிர்வாக சபை குழு ஆரம்பித்து வைப்புஐ. ஏ. காதிர் கான் -
"கொழும்பின் இதயம்" என வர்ணிக்கப்படும் மத்திய கொழும்பில், அதுவும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மருதானை பகுதியில், முதன் முறையாக மத்ரஸா மாணவர்களுக்கு இடையில் ஒரு சிறப்பு விளையாட்டுப் போட்டி நிகழ்வு, (10) சனிக்கிழமை முழு நாள் நிகழ்ச்சியாக இடம்பெற்றது.
கொழும்பு - 10, மருதானை, சின்னப் பள்ளிவாசல் "மத்ரஸதுல் மஹ்தினில் உலூம்" மாணவர்கள் கலந்து கொண்ட இச்சிறப்பு "விளையாட்டு தினம் " நிகழ்வு, மருதானை சின்னப் பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் குழு இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
கொழும்பு - 02, "ஹைட் பார்க்" விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற இச்சிறப்பு "விளையாட்டு தினம்" நிகழ்வில், "அறபா" (பச்சை), "மினா" (செம்மஞ்சள்), "சபா" (சிவப்பு), "மர்வா" (நீலம்) ஆகிய நான்கு இல்லங்களைச் சேர்ந்த மத்ரஸா மாணவர்கள் களத்தில் குதித்தனர்.
எம். கே. ரஹ்மதுல்லாஹ் - "அறபா இல்லம்" சார்பிலும், எஸ்.எப்.எம். பஹத் - "மினா இல்லம்" சார்பிலும், ஐ.எப். அப்துல்லாஹ் - "சபா இல்லம்" சார்பிலும், ரீ. ரசூல் - "மர்வா இல்லம்" சார்பிலும் தலைவர்களாகச் செயற்பட்டனர்.
ஓட்டம், மரதன் ஓட்டம், பலூன் ஊதி உடைத்தல், கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்டம் ஆகிய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், அன்றைய நிகழ்வை அலங்கரித்தன.
இப்பிரதேசத்தில், நெருக்கடியான இல்லங்களில் வாழும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இப்பகுதிகளில் விளையாடுவதற்கென விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாத குறையை, இப்பள்ளிவாசல் நிர்வாக சபையினரால் பள்ளிவாசல் மேல் மாடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள "விளையாட்டு மண்டபம்" நிவர்த்தி செய்து வருகின்றது.
மாணவர்கள், தமது பாடசாலை மற்றும் மத்ரஸா போதனா வகுப்புக்களை நிறைவு செய்த கையோடு, சகல வசதிகளும் உள்ளடங்கியவாறு இங்கு விளையாடுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் சிறப்பம்சமாகும்.
இப்பள்ளிவாசல் மேல் மாடியில் விளையாடுவதற்கு, 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட ஆண் மாணவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிவாசலில் தொழுகை நேரமல்லாத ஏனைய நேரங்களில் மாத்திரம், தொழுகைக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாதவாறு, தினமும் மாலை 3 மணி முதல் இரவு இஷாத் தொழுகைக்கான அதான் ஒலிக்கும் வரையிலும், இங்கு மாணவர்களுக்கு சமூகந்தந்து விளையாடுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும், இப்பள்ளிவாசல் நிர்வாகக் குழுவினரின் மற்றுமொரு சிறப்பம்சமாகக் கருத முடியும்.
இப்பள்ளிவாசல் மத்ரஸாவில் பகுதி நேரப் பிரிவுகளாக "குர்ஆன்" (ஹிப்ழ்) மனனப் பிரிவு, "நாசிரா" (பார்த்து ஓதல் பிரிவு), "காஇதா" பிரிவு ஆகியவற்றுடன் "ஷரீஆ, ஹதீஸ், அகீதா, பிக்ஹு, தஜ்வீத்" வகுப்புக்கள் மற்றும் பாடசாலைப் பாடங்களை மீட்டல் போன்றவற்றிற்கு மேலதிகமாகவே, இங்கு நிர்வாக சபையினரால் இவ்வாறு விளையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று நாட்டில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதுடன், பல்வேறுபட்ட தகாத வெறுக்கத்தக்க செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய செயற்பாடுகளிலிருந்து அவர்களைத் தூர விலக்கியும், கல்வி கற்கும் மாணவர்கள் தமது இளம் பருவத்தை தகாத வழியில் கழிக்காமல், இம்மை மறுமை வாழ்க்கைக்குத் தகுதியானவர்களாகவும், இறைவனுக்குப் பொறுத்தமானவர்களாகவும் மற்றும் நாட்டுக்கு ஒரு நற்பிரஜையாகவும் மாற்றுவதே, இவ்வாறான விளையாட்டுத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான பிரதான நோக்கம் என, நிர்வாக சபையின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இத்திட்டத்திற்கு சகல வழிகளிலும் உதவி ஒத்தாசைகளைப் புரிந்த மருதானை பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள், பிரதான உணவகங்கள், நலன்புரி அமைப்புக்கள் மற்றும் இப்பள்ளிவாசலில் கடமை புரியும் பேஷ் இமாம்கள், ஊர்ப்பிரமுகர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும், தமது மேலான சிறப்பான நன்றிகளை, நிர்வாக சபையினரின் சார்பில் உளப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்வதாகவும், நிர்வாக சபையின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
மருதானை சின்னப் பள்ளிவாசல் நிர்வாக சபை குழுவினரால் நன்மையை மாத்திரம் நாடிய நிலையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சித் திட்டங்கள், நிர்வாகக் குழுவினர் - மாணவர்கள் - பெற்றோர்கள் ஆகியோர்களுக்கு மத்தியில், ஒரு இணைப்புப் பாலமாகவும், உந்து சக்தியாகவும் மென்மேலும் வலிமை பெறும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
பள்ளிவாசல் பிரதிப் பேஷ் இமாம் மௌலவி ஏ.சீ. அப்துல் அஸீஸ் (பௌஸி) - கிராஅத் முழங்கி, வரவேற்புரை நிகழ்த்தி, நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், பள்ளிவாசல் பிரதம பேஷ் இமாம் மௌலவி பீ.ஏ. அப்துல் அஸீஸ் (நவவி) - நன்றியுரை தெரிவித்து, நிகழ்வை நிறைவு செய்து வைத்தார்.
இதேவேளை, குறித்த விளையாட்டுப் போட்டி நிகழ்வின் பரிசளிப்பு விழா வைபவம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (போயா தினம்) காலை 8 மணி முதல் ழுஹர் தொழுகை வரை, பள்ளிவாசல் மேல் மாடியில் நடைபெறுமென, பள்ளிவாசல் நிர்வாக சபை ஏற்பாட்டுக்குழு செயலாளர் தெரிவித்தார்.
எனவே, இதுபோன்ற சிறந்த கைங்கரியங்களை, இதயம் கனிந்து வரவேற்போம்...!
ஊக்குவிப்போம்...!!
கை கொடுப்போம்...!!!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :