ஜனாதிபதியின் சர்வ கட்சி அரசுக்கு ஆதரவளிப்பதாக கூறும் முஸ்லிம் கட்சிகள் தமக்குரிய பதவிகளை பற்றி பேசாமல், தமிழ் கூட்டமைப்பு முன் வைத்திருக்கும் கல்முனை செயலகத்தை இனரீதியில் பிரித்து தமிழ், முஸ்லிம் முரண்பாட்டை உருவாக்கும் முயற்சியை நிறுத்தும் படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) வேண்டுகோள் விடுத்துள்ளது. இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
சர்வ கட்சி அரசுக்கு ஆதரவளிக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆச்சர்யமான ஒரு நிபந்தனையை முன் வைத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்த பொலிஸ் அதிகாரி ஷானி விஜேசேகரவை விடுதலை செய்து ஈஸ்டர் பற்றி விசாரிக்க வேண்டும், ஒரே நாடு ஒரே சட்ட அறிக்கையை குப்பையில் போட வேண்டும் என கோரியுள்ளார்.
சர்வ கட்சிக்கு ஆதரவளிக்க தமிழ் கூட்டமைப்பு தாம் சார்ந்த சமூகத்தின் பிரச்சினைகளை முன் வைத்துள்ள போது ஆக குறைந்தது ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களை விசாரணையின் பின் விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ரவூப் ஹக்கீம் அமைச்சராக இருந்த அரசாங்கத்தில் ஈஸ்டர் தாக்குதலுக்கு உஷார் ஊட்டிய திகன, கண்டி பற்றி ஆராய வேண்டும் என்றாவது நிபந்தனை விதித்திருந்தாலாவது ஹக்கீமுக்கு சமூக அக்கறை கொஞ்சமாவது உள்ளது என தெரிந்திருக்கும்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவினால் நியமிக்கப்பட்ட செயலணியின் ஒரே நாடு ஒரே சட்ட அறிக்கை கோட்டாபய ஓடியவுடன் குப்பைத்தொட்டிக்கு போய் விட்டது. இப்போது இருப்பது புதிய ஜனாதிபதி. இந்த அறிக்கையை ரவூப் ஹக்கீம் நிபந்தனையாக்கி மீண்டும் உயிர்ப்பிக்க முனைகிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஆகவே சமூகம் எதிர் நோக்கும் முக்கிய விடயங்களை ஜனாதிபதியுடன் எழுத்து மூலம் முன் வைத்து நேரடியாக பேசாமல் வெறுமனே ஊடகங்கள் முன்பு வீராப்பு பேசுவதை ஹக்கீம் போன்ற கட்சித்தலைவர்கள் கை விட வேண்டும்.
இவற்றை ஊடகங்களில் பேசி உஷார் ஊட்டாமல் எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் முன் வைத்து பேச வேண்டும். ஆனாலும் முஸ்லிம் கட்சிகள் தமது பதவிகள் பற்றியே அழுத்தம் திருத்தமாக பேசுவர் என்பதே உண்மை என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment