மலச்சிக்கலைத் தவிர்க்கும் எளிய வழிகளை, முறையாக பின்பற்றினாலே போதும். மலச்சிக்கல் பிரச்சினை இலகுவாக நீங்கிவிடும். குழந்தை நல மருத்துவர் அர்சாத் அஹமத்"டொக்டர். இவனுக்கு லெட்டுக்கு போறது கஷ்டம். நாளைஞ்சி நாளைக்கு ஒருக்கா தான் போகுது. அதுவும் கஷ்டப்பட்டு, முக்கி தக்கி."
"சார்..!! மகளுக்கு 10வயசாகுது . அடிக்கடி யூரின் இன்பெக்ஷன் வருது எவ்வளவோ மருந்து எடுத்தும் சரிவருதில்ல."
"காலைல கக்காவோட இரத்தம் போகுது டொக்டர். சரியான வலியா இருக்குனு கத்துறான். டாய்லெட் போக பயப்படுறான். கழிசன்லயும் போறான்"
இவைகள் என்னிடம் வரும் பெற்றோர்கள் சொல்லுகின்ற பலநூறு ஹிஸ்டரிகளுள் ஒரு சில கம்ளைன்ட்கள். தினம், தினம் ஒருவரோ இருவரோ இப்படியான பிரச்சினைகளோடு வருகிறார்கள். வர வர எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. சமூகத்தில் நிறைய குழந்தைகள் இந்த பிரச்சினையோடு வாழ்கிறார்கள். வளர் இளம் சமுதாயத்தில், காலைக் கடன் கழிப்பது பெற்றோல் போலினில் கடைசி தொங்கலில் நிற்பவனுக்கு, கிரிடிட்காட்டுக்கு பெற்றோல் கிடைப்பதை விட கஷ்டமானதாக மாறியிருக்கிறது.
காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய ஒரு கடமை என்பதால் தான் இதற்கு நமது முன்னோர்கள் "காலைக் கடன்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கடன் என்பதால் கட்டாயம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினை தான்.
ஒரு பத்து இருபது வருடங்களுக்கு முன்னர், நமது தாய்மார்கள், மூத்தம்மாமார்கள் குழந்தைகளை மலம் கழிக்க பழக்கினார்கள். தங்கள் கால்களில் தூக்கிவைத்து இருப்பாட்டி ட்ரைனிங் கொடுத்தார்கள். இதை ஒரு கடமையாக செய்தார்கள். டயபர் (பம்பர்ஸ்) பாவனையோடு அந்தப் பழக்கம், இப்போது வாய்மையான வியாபாரிகளை காண்பது போல், எதிக்ஸ் பேணும் ப்ரொபொஷனலை காண்பது போல அருகிவிட்டது. வழக்கொழிந்து விட்டது. பழக்குவதற்கு தான் யாரும் இல்லை. தேடிப்பிடிக்க வேண்டும். டயபர் இருக்க நமக்கேன் கவலை என்று அது குறித்து கவலைபடுவார் யாரும் இல்லை. டயபரை வாங்கினோமா, கட்டினோமா, கழட்டி எறிந்தோமா என்ற நிலை. இதனால், ஆறு ஏழு வயது வரை பிள்ளைகளுக்கு டயபர் அணிவிப்பவது சர்வ சாதாரணமாகிவிட்டது. பெஷனாகிவிட்டது. அந்தோ பரிதாபம்.
குழந்தைகளுக்கு உணவூட்டுவதில் மட்டுமே கவனமாக இருந்தால் மட்டும் போதாது.(அதிலும் இப்போது கவனம் இல்லை என்பது வேறு விஷயம். டீவி விளம்பரங்களில் வரும் ஏதாவது ஒரு கன்றாவியை/ பக்கட்டை, கடையில் வாங்கி அதை தின்னக் கொடுத்தால் சரி என்ற நிலை). இப்படி இருக்கும் போது சாப்பிடும் உணவு எது? சாப்பிடக்கூடாத உணவு எது? சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமாகுமா? லமாக வெளியேறுமா? என்பதையெல்லாம் கவனிப்பதற்கு யாருக்கும் நேரமும் இல்லை. யாரும் அக்கறைப்படுவதாயும் தெரியவில்லை.


எதை உணவாக உண்டாலும், அது யாழ்ப்பாண ஒடியற் கூழாக இருந்தாலும் , இத்தாலிய பிட்சாவாக இருந்தாலும், ஜப்பானிய சுஷியாக இருந்தாலும் அதில் கழிவு உண்டாகும். செரிக்கப்பட்ட உணவு போக, சத்துகள் உறிஞ்சப்பட்ட பின், மீதமுள்ளது கழிவாகும். கழிவு உடலிலிருந்து கழிக்கப்பட வேண்டும். வெளியேற்றப்பட வேண்டும். இது தான் மனித பிஸியோலஜி. இது சரியாக நடக்காவிட்டால் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, பெரியவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். இது தான் பேசிக்‌. அடிப்படை.
தினமும் அல்லது இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல், மலம் வெளியேறாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கலைத் தவிர்க்கும் எளிய வழிகளை, முறையாக பின்பற்றினாலே போதும். மலச்சிக்கல் பிரச்சினை இலகுவாக நீங்கிவிடும்; குழந்தைகளும் ஆரோக்கியமாக வளரும். தினமும் மலம் வெளியேறுகிறது ஆனால் அதுவும் சிரமத்தோடு வெளியேறுகிறது என்றால் அதுவும் சிக்கல் தான். மலச்சிக்கல் (Constipation) தான். கழிவு இலேசாக வெளியே போக வேண்டும், அதற்கெல்லாம் அக்கப்போர் கூடாது.
சிறுவர்களில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. பொதுவாக, ஒரு வயதுக்கு கீழ் தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு மலம் கழிப்பதில் பெரிதாக சிக்கல்கள் ஏற்படுவதில்லை. சில குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 7-10தரம் போகும். இன்னும் சில குழந்தைகளுக்கு 7-10 நாட்களுக்கு ஒரு தரம் போகும். இது குறித்து பயம் கொள்ள வேண்டியதில்லை. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளில் இது, ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. பிரச்சினை பசும்பால், பாக்கெட் பால், பொட்டிப்பால் மற்றும் இதர உணவுகளைக் குழந்தைச் சாப்பிட தொடங்கியவுடன்தான் ஆரம்பமாகிறது.
நார்ச்சத்து(Fibre) மற்றும், நீர்ச்சத்து (Hydration) குறைபாடு,
விளையாட்டு கவனத்தில் சரியாக மலம் கழிக்காமல் இருத்தல், சோம்பல் உணர்வு, கழிவறை மீதுள்ள பயம்‌- விஷேடமாக பாடசாலை கழிவறைகள் குறித்த பயம், மலத்தை அடக்கி வைத்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, சரியான நேரத்துக்கு மலம் கழிக்கும் பழக்கம் இல்லாமை போன்றன இந்த மலச்சிக்கல் ஏற்படுவதற்கான மிகவும் பிரதானமான காரணங்களாக அறியப்படுகின்றன.
இவைகளில் எந்தக் காரணம், மலச்சிக்கலை நமது குழந்தைகளில் ஏற்படுத்துகின்றது என்று கண்டுபிடித்து அந்தக் காரணத்தை அகற்றினால் சிக்கல் தீர்ந்து விடும். மலம் வெளியேறிவிடும். இல்லையென்றால் இன்னும் இடியப்பச் சிக்கலாகி விடும்.
மலச்சிக்கலை சரிப்படுத்த, தீர்க்க நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முருங்கை, பொன்னாங்கன்னி, வல்லாரை, பசளி போன்ற பச்சை இலைக்கறி/கீரை வகைகளில் ஒன்றையோ, பலதையோ தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அது போல, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துள்ள காய்கறிகளான; வெண்டைக்காய், அவரை, பூசனி, பீர்க்கங்காய், சுரைக்காய், முள்ளங்கி, கரட், பலா போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும். வாழைப்பழம், மாம்பழம்,பப்பாசி போன்ற பழங்களை மென்று தின்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும். இவைகள், இயற்கை தந்த சிறந்த மலமிலக்கிகள்(Laxatives). ஜூஸ் போடுவதால் அதன் நார்ச்சத்து நீங்கி விடும். மலச் சிக்கலுக்கு பலன் கிடைக்காது. எனவே கடித்து தின்பதற்கு பழக்க வேண்டும். இதை விட, இரவு ஊறவைத்த 5-10 உலர்திராட்சைகளை (raisin/கிஸ்மிஸ்), அல்லது அத்திப் பழம்(fig fruit) ஒன்றை அல்லது ஒரு சில பேரீச்சம் பழங்களை(Dates) , காலை மற்றும் மாலையில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இவைகள் இன்னும் இலேசாக மலம் வெளிவர உதவி புரியும்.
உணவில் எப்போதும் சிறு தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். தவிடு நீக்கிய கோதுமை/மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா, மற்றும் துரித உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். (இப்போது நிறைய குழந்தைகளின் காலை உணவு பரோட்டா அல்லது நூடுல்ஸ் ஆக இருக்கிறது. கேட்பார் யாரும் இல்லை.)
விளையாடும் ஆர்வத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க மறந்தாலும்கூட தேவையான அளவு தண்ணீரைக் குடிக்க பழக்க வேண்டியது அவசியம். தினமும் தூங்கி எழுந்த பின் ஒரு டம்ளர் வெது வெதுப்பான தண்ணீரைக் குடிக்க கொடுக்கலாம். உணவு சாப்பிட்ட பிறகும் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்தலாம்.
மலச்சிக்கல் உள்ள பிள்ளைகளை, தினமும் காலையும் மாலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் அல்லது Bathtubல், குழந்தையின் இடுப்பளவு தாங்கும் அளவு வெதுவெதுப்பான சுடு நீரில், 10-15 நிமிடங்கள் வரை உட்கார வைக்கலாம். இதனால் குழந்தைகளின் அடிவயிற்று தசைகள், மலவாய் ஆகியவை சற்று தளர்வடையும். மலம் கழிக்க இலகுவாகும். மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் சைக்கிள் ஓட்டுவது நல்ல எக்ஸசைர்ஸ். இது இடுப்பு மற்றும் கால் தசைகளை உறுதியாக்கும். மலச்சிக்கலைத் தடுக்கும்.
சரியான நேரத்துக்கு தூங்கவும்‌, எழும்பவும் பழக்கப்படுத்துவது மிகவும் அவசியம். நிறையப் பெற்றோர்கள் இதில் அலட்சியமாக இருக்கிறார்கள்.
அதுபோல, ஒவ்வொரு நாள் காலையிலும், சரியாக ஒரே நேரத்தில், குழந்தைகளை பாத்ரூம் போய்விட்டு வா என, தினசரி ஒரு நேரத்தைப் பழக்கப்படுத்துவது மிகவும் அத்தியாவசியம். மற்றதெல்லாம் ஆடம்பரம். ஏனெனில் இந்தப் பழக்கம் மட்டுமே, குழந்தைகளிடம் நேரத்திற்கு காலைக் கடனை நிறைவேற்றும் எண்ணத்தை, பழக்கத்தை ஏற்படுத்தும். வழக்கமாக மாற்றும்.
சாக்லேட், சுவையூட்டப்பட்ட பால், மோல்ட், கோப்பி, இனிப்பு பண்டங்கள், துரித உணவுகள் மலச்சிக்கலை தூண்டும். இன்னும் சிக்கலாக்கும். இது தவிர, இன்னும் பல உணவுகளும் மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, யோகட், சீஸ். இது, ஆள் ஆளுக்கு வேறுபடும். எனவே, இது குறித்தும் பெற்றோர் அவதானம் செலுத்த வேண்டும். அவ்வாறான உணவுகளை நோட் பண்ணி தவிர்க்க வேண்டும்.
மலச்சிக்கலை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் நூறு வீதம் வெற்றி நிச்சயம். நாட்பட்ட மலச் சிக்கல், நமது நாட்டு அரசியல் போல் இழுத்துக் கொண்டே இருக்கும். சிலவேளை, அரகல செய்தும் சரி வாராமல் போகும். ஆகவே தாமதிக்காமல் கட்டாயம் உரிய அனுபவமும் தெளிவும் உள்ள வைத்தியரை நாடி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
பிற் குறிப்பு-
Disclaimer *வரும் ஆனா வராது என்ற காலைக் கடன் கழிக்கும் நிலையில் உள்ள எல்லோருக்கும் இங்கே சொல்லப்பட்டவைகள் பயன் தரும். அவர்கள சிறுவர்களாக இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.


Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :