திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஆலயப் பரிபாலன சபை மற்றும் இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கு மரக்கறி மற்றும் தானிய விதைப் பைக்கற்றுக்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய நிலையில் பயன்படுத்தாமலிருக்கக் கூடிய காணிகளில் பயிர் ச்செய்கையை மேற் கொண்டு உணவு உற்பத்தியை மேம்படுத்துவது அரசாங்கத்தினுடைய கொள்கையாகக் காணப்படுகிறது.அதனடிப்படையில் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயிர்ச்செய்கை செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் ஆலயம் மற்றும் அறநெறிப்பாடசாலையைச் சார்ந்த வெற்றுக் காணிகளில் குறிப்பிடத்தக்க ஒரு பிரதேசத்தில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக இந்த விதைப்பைகற்றுக்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்றன. இச்செயற்பாடு மக்களுக்கு முன்னுதாரணமாக அமையுமென்று இதன்போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
பயிர்ச்செய்கை, உற்பத்தி மேற்கொள்வதன் சமகாலத் தேவை தொடர்பில் இதன்போது மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம். குகதாசன் அவர்களால் தெளிவுப்படுத்தல்களும் முன்வைக்கப்பட்டன.அத்துடன் அறநெறி இறுதிப்பரீட்சைக்கான தயார்படுத்தல் கருத்தரங்கும் இதனோடு இணைந்ததாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சித் திட்டமானது இந்து சமயக் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் என்பனவற்றின் ஒருங்கிணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட இந்து சமயக் கலாசார உத்தியோகத்தர் எஸ். இலக்குமி தேவி,ஆலயப் பரிபாலன சபை நிர்வாகிகள், இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment