18 அதிகாரிகளுக்கு வட்ஸப் மூலம் அவசரமாக இட மாற்ற உத்தரவு, கிழக்கு மாகாணத்திலே நூதனமான நிர்வாகம் - ஜனாதிபதி ரணிலுக்கு எழுத்தில் முறைப்பாடுநூருல் ஹுதா உமர்-
கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் 18 பேருக்கு அவசரமாக வட்ஸப் மூலம் திடீர் இட மாற்ற கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆளுனர் அனுராதா ஜகம்பத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் - நிர்வாகம் ஆ. மன்சூர் இட மாற்றத்துக்கான உத்தரவை பிறப்பித்து இருக்கின்றார். ஆனால் இட மாற்ற கொள்கைக்கு முரணான வகையிலான இந்த உத்தரவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஸ்ரீலங்கா அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க சம்மேளனம் கோரி எழுத்து மூலம் வெள்ளிக்கிழமை கோரியது.

சம்மேளனத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளவை வருமாறு

உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களாக முகாமைத்துவ சேவைஉத்தியோகத்தர் சேவையின் அதிசிறப்பு தரத்தை சேர்ந்தவர்கள் கடமையாற்றுகின்றனர். அத்தரத்தை சேர்ந்தோர் இல்லாத சபைகளில் பதில் கடமையை முகாமைத்துவ சேவை தரம் - 1 ஐ சேர்ந்தோர் செய்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் மேற்படி உத்தியோகத்தர்களில் 18 பேர் திடீர் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். வருடாந்த இட மாற்றத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ள நிலையில் இவ்வாறான இட மாற்றங்களை செய்ய முடியாது.

அத்துடன் இவர்களில் பதில் கடமையாற்றிய பலர் பதில் கடமையில் இருந்து நீக்கப்பட்டு புதியவர்கL பதில் கடமைக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களுடைய சேவை நிலையத்தில் 05 வருடங்களை பூர்த்தி செய்யாமலேயே சம்மதம் பெறப்படாமலும், விருப்பத்துக்கு மாறாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

எனவே இட மாற்ற கொள்கைக்கு முற்றிலும் முரணானதாக மாத்திரம் அல்லாமல் உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற வகையிலும் இட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சிரேஷ்ட தகைமை வாய்ந்த பலரும் பதில் கடமைக்கு செல்வதற்கு உரிய தகைமையும், விருப்பமும் உள்ளவர்களாக இருக்கின்ற போதிலும் அரசியல் பிரமுகர்கள், உயரதிகாரிகள் போன்றோரின் செல்வாக்கு உள்ளவர்கள் பதில் கடமைக்கு நியமிக்கப்பட்டு தகைமை உடையவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.

அத்துடன் ஏற்கனவே கடமையில் இருந்த பலர் பழி வாங்கப்பட்டு உள்ளனர். இதுவும் நிர்வாக நடைமுறைக்கு முரணானது ஆகும். இட மாற்றம் மிக அவசரமாக செய்யப்பட்டு கடிதங்கள் மற்றும் விடுவிப்பு கடிதங்கள் தபாலில் அனுப்பப்படுவதற்கு அவகாசம் இல்லாமல் வட்ஸப்பில் அனுப்பப்பட்டு உள்ளன. இது வலுவான சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதிசிறப்பு தரத்தினரை தெரிவு செய்வதற்கு நேர்முக பரீட்சை தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்றது. அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட உள்ள நிலையில் இவ்வாறு இட மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது சில வெற்றிடங்களை இல்லாமல் ஆக்கி, குறித்த சிலருக்கு சில இடங்களை வழங்குவதற்கான திட்டமிட்ட செயற்பாடாகவும் எம்மால் கருதப்படுகின்றது.

அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு உத்தேசித்து உள்ள இக்கால கட்டத்தில் இச்செயற்பாடுகள் இடம்பெற்று இருப்பதன் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என்றும் கருத வேண்டி உள்ளது. இம்முறைகேடான இட மாற்றம் மற்றும் பதில் கடமைக்கு உரிய புதிய நியமனம், பதில் கடமைக்கு இருந்தவர்களின் நீக்கம் ஆகியவற்றை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எனவே தயவு செய்து இட மாற்ற உத்தரவுகளை உடன் ரத்து செய்யுமாறும், இட மாற்ற கொள்கைக்கு அமைய நியாயமாகவும், நீதியாகவும் தேவையான இட மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறும் வேண்டி கொள்கின்றோம்.

அத்துடன் பதில் கடமை நியமனங்களை வழங்கும்போது அரசியல் செல்வாக்கு மற்றும் அது போன்ற புற காரணிகளின் தாக்கம் இல்லாமல் நியாயமான வகையில், விருப்பமுள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அழங்க ஆவன செய்யுமாறும் கோருகின்றோம். என்று தெரிவித்துள்ளார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :